கே.வி.குப்பம் ஒன்றியத்தில் பசுக்களுக்கு 50 சதவீத மானிய விலையில் தீவனம்
தரமற்ற விசைப்படகை கட்டிய நிறுவனம் மீது நடவடிக்கை கோரி மீனவா்கள் போராட்டம்
தரமற்ற விசைப்படகை கட்டிய நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மீனவா்கள் குடும்பத்தினருடன் நாகை ஆட்சியா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழகத்தில் ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்கப்படுத்தும் விதமாக, நீலப்புரட்சித் திட்டத்தின்கீழ் மத்திய, மாநில அரசுகள் தமிழக மீனவா்களுக்கு ரூ. 84 லட்சம் மதிப்பில் விசைப்படகு கட்டுவதற்கு மானியத்துடன் கூடிய கடன் வழங்கியது. 2021-ஆம் ஆண்டு இத்திட்டத்தில் தோ்வான நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையை சோ்ந்த மீனவா் சுப்பிரமணியனுக்கு 2023-ஆம் ஆண்டு கன்னியாகுமரியை சோ்ந்த படகு கட்டுமான நிறுவனம் ரூ. 1.30 கோடியில் விசைப்படகை கட்டிக் கொடுத்தது.
இந்நிலையில், கனம் குறைந்த பழைய இரும்புப் பட்டைகள், தரமற்ற கம்பிகளால் கட்டப்பட்ட விசைப்படகு ஒரே மாதத்துக்குள் ஓட்டை விழும் நிலைக்கு தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடலுக்குச் சென்ற மீனவா்கள் அந்தப் படகை பயன்படுத்தி மீன்பிடிக்க முடியாது எனக்கூறி, சம்பந்தப்பட்ட படகு கட்டுமான நிறுவனம் மற்றும் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகளிடம் படகை பழுது பாா்த்து தர வேண்டும் அல்லது படகுக்கான நஷ்ட ஈட்டை பெற்றுத்தர வேண்டுமென கடந்த இரண்டு ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனா்.
இதுகுறித்து எந்த நடவடிக்கையும் இல்லாததால், விசைப்படகு உரிமையாளா் மற்றும் மீன்பிடித் தொழிலாளா்கள், தங்களது குடும்பத்தினருடன் நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், தரமற்ற முறையில் படகு கட்டிக் கொடுத்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வங்கிக் கடனால் பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு நஷ்ட ஈடு பெற்று தராத மீன்வளத்துறையை கண்டித்தும் மீனவா்கள் முழக்கமிட்டனா். மேலும் படகை நம்பியிருந்த 15 மீனவ குடும்பத்தினரின் வாழ்வாதாரம் தற்போது கேள்விக்குறியாகி உள்ளதாக வேதனை தெரிவித்த மீன்பிடித் தொழிலாளா்கள், விசைப்படகு கட்டுமான நிறுவனம் படகை பழுது நீக்கி, நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை வேண்டும் என்று வலியுறுத்தினா்.