Quote of the day: 'நம்பிக்கையே முதல் வெற்றி!' - அமெரிக்க முன்னாள் அதிபர் சொல்வதை...
திருச்சி: பட்டியல் சமூக கிறிஸ்தவரை அடக்கம் செய்ய எதிர்ப்பு; 3 நாள்கள் போராட்டத்திற்கு பிறகு அடக்கம்
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே கோட்டப்பாளையம் கிராமத்தில் கிறிஸ்தவ பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியர் ராஜு (86) என்பவர் வயது மூப்பு காரணமாக கடந்த 17.07.2026 அன்று காலமானார்.
இவரது உடலை அடக்கம் செய்ய கிறிஸ்தவ முறைப்படி கோயிலில் திருப்பலி நடத்தி, கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், ஏ.டி.எஸ்.பி தனராசு, முசிறி டி.எஸ்.பி முத்துக்குமார் ஆகியோர் தலைமையில் சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர்.
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த முசிறி சப்-கலெக்டர் சுஸ்ரி சுவாங்கி குந்தியா தலைமையில் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அதில், ஒரு தரப்பினர் 'கடந்த 2024-ல் நீதிமன்றத்தில் மனு செய்து உடல் அடக்கம் செய்ய நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றுள்ளோம்' என்றும், மற்றொரு தரப்பினர், 'இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது' என்றும் கூறினர்.
இந்தப் பேச்சுவார்த்தையில் இருதரப்பும் உடன்படாததால் நேற்று மாலை 5 மணி அளவில் முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு தரப்பிலும் 5 பேர் பேச்சுவார்த்தைக்கு வரும்படி கோட்டாட்சியர் கூறிச்சென்றார். அதன்படி, முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருதரப்பினரும் அதிகாரிகள் தலைமையில் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர்.
மேற்படி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதில் நேற்று நள்ளிரவு BC கிறிஸ்தவர்களின் கல்லறை தோட்டத்தில் முன்புற கேட்டை முசிறி கோட்டாட்சியர் சுஷ்ரி சுவாங்கி குந்தியா, முசிறி டி.எஸ்.பி முத்துக்குமார், ஏ.டி.எஸ்.பி தனராசு உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் கல்லறைக்குண்டான சாவியை வைத்து திறந்து, கோட்டப்பாளையம் புனித மரிய மதலேனாள் திருத்தல பங்குத்தந்தை மைக்கேல் ராஜ் ஆகியோரால் அடையாளம் காணப்பட்ட தலித் கிறிஸ்தவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 35 சென்ட் நிலத்தில் இறந்து போன ராஜு என்பவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இனி வரும் காலங்களில் கோட்டப்பாளையம் புனித மரிய மதலேனால் திருத்தலத்திற்கு யார் பங்குத்தந்தையாகப் பொறுப்பேற்றாலும் தலித் கிறிஸ்தவர்களுக்கு எனப் பொதுக்கல்லறையில் நீதிமன்ற உத்தரவுபடி ஒதுக்கப்பட்ட 35 சென்ட் நிலத்தில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

இதன் காரணமாக, அங்கு ஏற்பட்ட பதற்றம் தணிந்தது. தொடர்ந்து, கோட்டப்பாளையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இறந்து போன ஆசிரியர் ராஜீவுக்கு மூன்று மகன்களும், மூன்று மகள்களும் உள்ளனர்.
இதில், ஒரு மகன் இத்தாலி ரோம் நகரில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் பங்குத்தந்தையாகப் பணிபுரிகிறார். ஒரு மகள் இஸ்ரோவில் பணிபுரிந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












