செய்திகள் :

`திருந்துவார் என நினைத்தேன்’ ; ஹோட்டலில் மீண்டும் வேறொருவருடன் மனைவி - GPS மூலம் சிக்க வைத்த கணவன்

post image

பஞ்சாப் மாநிலம் அமர்தசரஸில் திருமணமாகி 15ஆண்டுகள் கழித்த பிறகு பெண் ஒருவர் மாற்றான் ஒருவருடன் ஹோட்டல் அறையில் தங்கி இருந்ததை அவரது கணவர் கண்டுபிடித்துள்ளார். ரவி குலாதி என்ற அந்த நபருக்கு ஹாமினி என்பவருடன் 2010ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர்களுக்கு குழந்தைகள் இருக்கின்றனர்.

2018ம் ஆண்டு ரவியின் மனைவி வேறு ஒரு நபருடன் ஹோட்டலில் தங்கி இருந்ததை அவரது கணவர் கண்டுபிடித்தார். அந்நேரம் ரவி தனது மனைவியின் பெற்றோரை வரவழைத்து இது குறித்து பேசினார்.

இப்பேச்சுவார்த்தையில் மனைவியின் பெற்றோரும், மனைவியும் மன்னிப்பு கேட்டுக்கொண்டனர். இதனால் ரவி தனது குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு தனது மனைவியை மன்னித்து ஏற்றுக்கொண்டார். மனைவி திருந்துவிடுவார் என்று நினைத்தார். ஆனாலும் மனைவியின் மீது ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது.

இதனால் ரவி தனது மனைவி அடிக்கடி பயன்படுத்தும் ஸ்கூட்டியில் ஜி.பி.எஸ் கருவியை பொருத்தி மனைவியின் நடமாட்டத்தை கண்காணிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் மனைவி மீண்டும் தனது ஸ்கூட்டரில் பிற்பகலில் புறப்பட்டு சென்றார். மாலை வரை வீடு திரும்பவில்லை. எனவே ரவி தொடர்ந்து தனது மனைவிக்கு போன் செய்து பார்த்தார். ஆனால் மனைவி போனை எடுத்து பேசவில்லை. 15 முதல் 20 முறை போன் செய்தபிறகும் போனை எடுக்காத காரணத்தால் வேறு வழியில்லாமல் ஸ்கூட்டரில் இருந்த ஜி.பி.எஸ் கருவி மூலம் வண்டி எங்கு இருக்கிறது என்று பார்த்தார்.

அந்த ஜி.பி.எஸ்.கருவி இருக்கும் இடத்தை நோக்கி சென்றபோது அது ஒரு ஹோட்டலுக்குள் சென்றது. அங்கு சென்று பார்த்தபோது ரவியின் மனைவி வேறு ஒரு ஆடவருடன் இருந்ததை கையும் களவுமாக ரவி கண்டுபிடித்தார். இது குறித்து ரவி கூறுகையில், ''நான் 2010ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டேன். 2018ம் ஆண்டு ஹோட்டலில் வேறு ஒருவருடன் எனது மனைவியை பார்த்தேன்.

இதனால் அவரது பெற்றோரை அழைத்து எச்சரித்து மன்னித்து ஏற்றுக்கொண்டேன். தவறு நடப்பது புதிதல்ல என்று நினைத்துவிட்டேன். ஆனால் இன்று அவர் பிற்பகல் 3 மணிக்கு வெளியில் கிளம்பிச்சென்றார். 15 முதல் 20 முறை போன் பண்ணியும் எடுத்து பேசவில்லை. எனவே ஸ்கூட்டியில் இருந்த ஜி.பி.எஸ் சாதனத்தை சோதித்து பார்த்தபோது ஸ்கூட்டி ஹோட்டல் ஒன்றில் நிற்பது தெரிய வந்தது'' என்றார்.

ரவியின் தந்தை பர்வேஷ் குலாதி இது குறித்து, ''இந்த பிரச்னை பல ஆண்டுகளாக இருக்கிறது. 7 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை ஹோட்டலில் எனது மருமகள் வேறு ஒருவருடன் இருந்த போது பிடிபட்டார். அப்போது இரு குடும்பமும் எம்.எல்.ஏ. ஒருவர் வீட்டில் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைக்கு தீர்வு கண்டோம்.

பிரச்னை முடிந்துவிட்டதாக நினைத்தோம். ஆனால் இப்போது மீண்டும் அதே போன்று நடந்திருக்கிறது. இப்போது ரவியுடன் வாழ முடியாது என்று மருமகள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். அவர் தனது பெற்றோர் வீட்டுக்கு செல்லப்போவதாக தெரிவித்துள்ளார். இப்போது ஹோட்டலில் அவருடன் பிடிபட்ட நபர் எங்களது வீட்டிற்கு அடிக்கடி வருபவர். அவர் எனது மருமகளின் சகோதரன் என்று கூறி அறிமுகப்படுத்திக்கொண்டு வீட்டிற்குள் வந்தார்.

இப்போது எனது மருமகளின் பெற்றோர் பிரச்னைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்த வர மறுக்கின்றனர்'' என்று குறிப்பிட்டுள்ளார்.