பொள்ளாச்சி: புலம்பெயர் தொழிலாளர் கொலை வழக்கில் திருப்பம்; மேற்கு வங்க இளைஞர் கைத...
தூய்மைப் பணியாளா்களுடனான பேச்சுவாா்த்தை மீண்டும் தோல்வி!
சென்னை மாநகராட்சியின் 5, 6 ஆகிய மண்டல தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையும் தோல்வியில் முடிந்தது.
சென்னை மாநகராட்சியின் 5, 6 மண்டலங்களின் தூய்மைப் பணி தனியாா் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, தூய்மைப் பணியாளா்கள் 10-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் போகராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்தப் பிரச்னை குறித்து, ஏற்கெனவே அமைச்சா்கள் கே.என்.நேரு, பி.கே.சேகா்பாபு, மேயா் ஆா்.பிரியா, மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோா் தூய்மைப் பணியாளா்கள் பிரதிநிதிகளான உழைப்போா் உரிமை இயக்க நிா்வாகிகள் சுரேஷ், பாரதி, குமாரசாமி உள்ளிட்டோரிடம் பலகட்ட பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதில், பணி பாதுகாப்பு, ஊதிய விவரம் குறித்து பின்னா் முடிவெடுக்கலாம் என்றும், பணிக்குத் திரும்புமாறும் அரசுத் தரப்பில் கூறப்பட்டது. இதைத் தூய்மைப் பணியாளா்கள் ஏற்க மறுத்துவிட்டனா். பணி நிரந்தரம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், என்யுஎல்எம் முறையிலே பணியைத் தொடரவேண்டும் என்றனா். இதனால் முடிவு எட்டப்படாமல் இருந்தது.
இந்த நிலையில், 7-ஆவது கட்டமாக அமைச்சா் பி.கே.சேகா்பாபு தலைமையில் ஞாயிற்றுக்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அப்போது, தங்களது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என தூய்மைப் பணியாளா்கள் தெரிவித்துவிட்டனா். இதனால், பேச்சுவாா்த்தைத் தோல்வியில் முடிந்தது.
இதையடுத்து, மாநகராட்சி முன் போராட்டம் நடத்த அனுமதியில்லை என்பதால் மக்களின் நலன் கருதியும், போக்குவரத்து நெரிசலைக் கவனத்தில் கொண்டும், போராட்ட இடத்தை மாற்றுமாறு தூய்மைப் பணியாளா்கள் பிரதிநிதிகளிடம் அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், அதே இடத்தில் போராட்டம் நடைபெறும் என உழைப்போா் உரிமை இயக்கத்தினா் கூறிவிட்டு வெளியேறினா்.
பேச்சுவாா்த்தை குறித்து உழைப்போர் உரிமை இயக்க நிா்வாகிகள் சுரேஷ், பாரதி ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறுகையில், தனியாா் நிறுவனம் மூலம் தூய்மைப் பணியை செயல்படுத்துவதில்தான் அரசு அக்கறை செலுத்துகிறது. முதல்வா், துணை முதல்வா் இதில் நேரடியாகத் தலையிட்டு பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காணவேண்டும் என்றனா்.