பாவூர்சத்திரம்: போதையில் இளைஞர் அடித்து கொலை; `101'க்கு கால் செய்து நாடகம்- நண்ப...
நெல்லை: ஒரே நாளில் 100 மாணவர்களை அரசு நூலகத்தில் இணைத்து சாதனை; நூலகர் சி.அகிலனின் அசத்தல் முயற்சி!
இன்றைய காலத்தில் நூலகத்திற்கு சென்று புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து வாசிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும் நவீன காலச்சூழலிற்கேற்ப இணையத்தில் மின் நூல்களை வாசிக்கும் பழக்கம் அதிகமாக இருப்பதை பார்க்க முடிகிறது. இந்நிலையில் நெல்லை மீனாட்சிபுரம் நூலகத்தில் பி. அகிலன் என்பவர் ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகளை தன்னுடைய நூலகத்தில் இணைத்திருக்கிறார். இவர் பணியாற்றிய நூலகங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை ஆயுள் சந்தா கட்டவைத்து நூலகப் புரவலர்களாகவும், நூலக உறுப்பினர்களாக 50,000-க்கும் மேற்பட்டோரை இணைத்துள்ளார். மேலும் ரூபாய் 50,000க்கும் மேற்பட்ட தொகையை உதவித்தொகையாக சேகரித்து நூலகங்களுக்கு தந்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளாக நூலகம் சார்ந்த பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அகிலன், சிறந்த நூலகருக்கான விருதையும் வென்றுள்ளார். இது குறித்து நூலகர் சி. அகிலனிடம் பேசும்போது,

``கடந்த 9 ஆண்டுகளாக இந்த நூலகத்தில் பணிபுரிந்து வருகிறேன். மொத்தமாக 27 வருடங்களுக்கும் மேலாக நான் நூலகத்துறையில் பணியாற்றி வருகிறேன். எனது தந்தை ஒரு டெய்லர். அம்மா தையல் ஆசிரியையாக பணியாற்றியவர். இன்று 50 ஆயிரம் நூல்கள் கொண்டு மக்களின் வாழ்வை மேம்படுத்தி வருகிறேன். திருமணம் முடிந்து 27 ஆண்டுகள் ஆகிறது. மனைவி முன்னீர்ப்பள்ளம் நூலகத்தில் நூலகராகப் பணிபுரிந்து வருகிறார். மகள் ஆசிரியராகப் பணிபுரிகிறார். மகன் கணினி பொறியாளர் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். நூல் திறனாய்வு, தலைவர்களின் பிறந்தநாள், சாதனை புரிந்த மாணவர்களுக்குப் பாராட்டு விழா என்று தாமிரபரணி வாசகர் வட்டத்தோடு இணைந்து நிறைய நிகழ்ச்சிகளை இந்த நூலகத்தில் நடத்தி வருகிறோம்.

விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி எழுதுவிக்கும் போட்டி அப்படி ஒவ்வோர் ஆண்டும் நடத்தி வருகிறோம். பொதுத் தேர்வில் அதிகமான மதிப்பெண் எடுத்த முதல் மூன்று மாணவர்களுக்குப் பரிசு வழங்குகிறோம். தேசியத் திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு தனியே பரிசுகள் வழங்குகிறோம். மாணவர்களின் திறமையைக் கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்தி வருகிறோம். மாணவர்கள் தினமும் கால் மணி நேரம் வந்து நூலகத்தில் படித்துச் செல்கின்றனர். நிறைய பேர் இங்கு நூலக உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்."

சமீபத்தில் மீனாட்சிபுரம் நூலகத்தில் 100 மாணவர்களை உறுப்பினர்களாக இணைத்துள்ளீர்களாமே?
" மாணவர்கள் தங்கள் கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும். அகிலாண்டம் அய்யாவிடம் நான் 100 மாணவர்களை இந்நூலகத்தில் ஒரு பயனர்களாகச் சேர்ப்பது பற்றி பேசினேன். அகிலாண்டம் ஐயா அவர்கள் மகிழ்ந்தார். பிறகு 3000 ரூபாய் செலவழித்து 100 மாணவர்களையும் அவர் இந்நூலகத்தில் இணைத்தார்."

உங்கள் நூலகத்தில் அடுத்த திட்டமாக நீங்கள் எதை செயல்படுத்த உள்ளீர்கள்...?
"நூலகத்தில் அடுத்த திட்டமாக Tnpsc படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தனிச்சிறப்பு வகுப்புகள் நடத்த இருக்கிறோம். இந்த நிகழ்ச்சிகளை நடத்த என் மனைவி கோமதி முழு ஆதரவு கொடுத்து வருகிறார். அதனால்தான் இத்தனை நிகழ்ச்சி நடத்த முடிகிறது. நாம் எந்த வேலையை செய்கிறோமோ அதை திருப்தியோடு முழுமையாகப் பயன் தரும்படி செய்ய வேண்டும் என்பது என்னுடைய எண்ணம். எனவே நான் நூலகத் துறையில் சிறப்பாகப் பணியாற்றுகிறேன்." என்ற நெகிழ்வோடு கூறினார்.














