நீ கவிதைகளா: `இந்த ஒரு வரிக்கு 3 நாட்கள் எடுத்துக்கொண்டோம்' - பாடலாசிரியர் ஜிகேப...
மகா சிவராத்திரி கடைப்பிடிப்பது எப்படி? அர்த்தமுள்ள 6 கேள்விகள்... அறிந்துகொள்ள வேண்டிய பதில்கள்!
மாசி மாதத்தின் விசேஷங்களில் ஒன்று மகாசிவராத்திரி. மாதந்தோறும் சிவராத்திரி வந்தாலும் மாசி மாதம் வரும் சிவராத்திரியே மகாசிவராத்திரி என்பார்கள். மகாசிவராத்திரி நாளில் விரதம் இருந்து வழிபட்டால் ஆண்டு முழுவதும் சிவபூஜை செய்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
புராணங்களில் மகாசிவராத்திரியின் பெருமை பலவாறு கூறப்பட்டிருக்கிறது. தெரியாமல் மகாசிவராத்திரியில் லிங்கத்தின் மீது வில்வ இலைகளைப் பிய்த்துப்போட்ட குரங்கும் வேடனும் மறுபிறவியில் பெரும் பலன்கள் அடைந்தது பற்றிய சரிதங்களை அறிந்திருப்போம். இந்த நாளின் சிறப்புகள் என்னென்ன என்பதையும் எப்படி மகாசிவராத்திரியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது குறித்தும் கேள்விபதில்களாகக் காண்போம்.
``இந்த ஆண்டு மகாசிவராத்திரி எப்போது? மகாசிவராத்திரி எந்த அடிப்படையில் கணிக்கப்பபடுகிறது?"
``இந்த ஆண்டு (2026) பிப்ரவரி 15 - ம் தேதி மாசி மாதம் 3 ம் தேதி மகா சிவராத்திரி கொண்டாடப்பட இருக்கிறது. பொதுவாக மாசி மாத தேய்பிறை சதுர்த்தசி தினமே மகா சிவராத்திரி. குறிப்பாக தேய்பிறை சதுர்த்தசி தினம் எந்த நாளில் இரவு 11 மணி முதல் 1 மணி வரை இருக்கிறதோ அந்த நாளே மகா சிவராத்திரி. பிப்ரவரி 15 ம் தேதி மாலை மாலை 5.50 வரை திரயோதசி திதி உள்ளது. பிறகு சதுர்த்தசி திதி தொடங்கி மறுநாள் திங்கட்கிழமை மாலை 6.24 வரை உள்ளது. முன்பு குறிப்பிட்டதைப்போல பிப்ரவரி 15 இரவுதான் சதுர்த்தசி திதி உள்ளது. எனவே நாளையே மகாசிவராத்திரி."

``மகாசிவராத்திரி விரத நாளா? அப்படியானால் எப்படி அதைக் கடைப்பிடிக்க வேண்டும்?"
``மகா சிவராத்திரி விரதம் இருக்க உகந்த நாள். ஆனால் கட்டாயம் அல்ல. ஆனால் கட்டாயம் சிவபூஜை செய்ய வேண்டிய நாள். விரதம் இருப்பவர்கள் விரதத்தை அன்றைய நாளின் காலை வேளையிலேயே தொடங்கிவிட வேண்டும். அதாவது நாளை பிப்ரவரி - 15 காலை கண் விழித்ததுமுதல் விரதம் தொடங்கிவிடும். காலையில் நீராடி சிவபூஜை செய்ய வேண்டும். தீட்சை பெறாதவர்களாக இருந்தால் கூட சிவபெருமானின் படத்துக்கு மலர்சாத்தி வழிபட வேண்டும்.
நாள் முழுவதும் உண்ணா நோன்பைக் கடைப்பிடிக்கலாம். ஒரு சிலர் திரவ உணவு மட்டுமே உட்கொள்வார்கள். சிலர் ஒருவேளை உணவு உண்பார்கள். உங்கள் உடல் ஆரோக்கியத்தை மனதில் கொண்டு விரதம் இருப்பது நல்லது. மாலையும் தவறாமல் மீண்டும் நீராடி சிவ வழிபாட்டைத் தொடங்க வேண்டும். இரவு முழுவதும் கண்விழித்து நான்கு காலங்களிலும் சிவவழிபாடு செய்வது சிறப்பு. சிவாலயம் சென்று அங்கு நடைபெறும் வழிபாடுகளை தரிசனம் செய்வது மிகவும் சிறப்பு. விரதம் மறுநாள் காலை நீராடி மீண்டும் சிவபூஜை செய்தபின்புதான் முடிவடையும். அதன்பின் நீங்கள் உணவு உட்கொள்ளலாம்."
`` விரதம் இருக்காமல் சிவபூஜை மட்டும் செய்யக் கூடாதா?"
``தாராளமாக செய்யலாம். நம் தர்மத்தில் எதுவும் கட்டாயமில்லை. பக்திதான் பிரதானம். நீங்கள் பசியோடு இருக்கும்போது தூக்கம் வராது. சோம்பேறித்தனம் இருக்காது. அதற்காக உண்ணாநோன்பைக் கடைப்பிடித்தார்கள். அதேவேளை உணவு உண்ட உடனே பூஜையில் அமரக் கூடாது. ஒவ்வொரு வேளையும் சிவபூஜை செய்து முடித்தபின் உணவு உட்கொள்ள வேண்டும். காலை பூஜை முடித்தபின் சாப்பிடலாம். மாலையும் அதேபோன்று பூஜை முடித்தபின் சாப்பிடலாம். இரவு நான்கு கால பூஜைகளின் பின்னும் பிரசாதமாகக் கிடைபப்தை உண்ணலாம் தவறில்லை. ஆனால் சிவநாமத்தைச் சொல்லிக்கொண்டே இருப்பதுதான் பிரதானம். "

``மகா சிவராத்திரி நான்கு கால பூஜைகள் என்கிறார்களே... அவை எந்தெந்த நேரம்?"
``ஓர் இரவை நான்கு காலங்களாகப் பிரிக்கிறார்கள். இரவு வேளை தொடங்கும் மாலை 6 மணி முதல் 9 மணி வரை முதல் காலம். இரவு 9 மணி முதல் 12 மணி வரை இரண்டாம் காலம். நள்ளிரவு 12 மணி முதல் 3 மணி வரை மூன்றாம் காலம். அதிகாலை 3 மணி முதல் 6 மணிவரை நான்காம் காலம் எனப் பிரிக்கப்படுகிறது. நம் சாஸ்திரங்கள் இந்த நான்கு காலங்களும் இறைவனுக்கு எவ்வாறு பூஜை செய்ய வேண்டும் என்று வகுத்திருக்கின்றன.
முதல் காலம் : சுவாமிக்குப் பஞ்ச கவ்யத்தால் அபிஷேகம் செய்ய வேண்டும். பசும் பால், பசுந்தயிர், பசு நெய், பசுவின் சிறுநீர், பசுஞ்சாணம்- இந்த ஐந்தும் கலந்தது- பஞ்சகவ்யம் (அளவு-1:2:3:1:1). அகில் குழம்பும், வில்வமும் சாற்ற வேண்டும். தாமரைப் பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். பயத்தம் பருப்பு கலந்த பொங்கலை நைவேத்தியம் செய்து, ரிக் வேதம் சொல்ல வேண்டும்.
இரண்டாம் காலம் : பஞ்சாமிர்த அபிஷேகம் செய்யவேண்டும். சந்தனமும், தாமரைப் பூவும் சாற்ற வேண்டும். துளசியால் அர்ச்சனை செய்து பாயசம் நைவேத்தியம் செய்து, யஜுர் வேதம் சொல்ல வேண்டும்.
மூன்றாம் காலம் : தேன் அபிஷேகம் செய்ய வேண்டும். அரைத்த பச்சைக் கற்பூரம், ஜாதி முல்லை மலர் சாற்ற வேண்டும். மூன்று இலைகள் கொண்ட வில்வத்தால் அர்ச்சனை செய்து, எள் சாதம் நைவேத்தியம் செய்து, சாம வேதம் சொல்ல வேண்டும்.
நான்காம் காலம் : கரும்புச் சாறினால் அபிஷேகம் செய்து, அரைத்த குங்குமப் பூவுடன் நந்தியா வட்டை மலர் சாற்ற வேண்டும். நீலோத்பல மலரால் அர்ச்சனை செய்து சுத்தமான அன்னத்தை நைவேத்தியம் செய்து, அதர்வண வேதம் சொல்ல வேண்டும்.
``நான்கு கால பூஜைகளுக்கான வழிகாட்டல்கள் விரிவாக இருக்கின்றனவே... சாமானியர்களால் இதைக் கடைப்பிடிக்க முடியுமா?"
``இவை ஆலயங்களில் செய்யப்படும் பூஜை முறைகளுக்கான வழிகாட்டல்கள். இவற்றை நாமும் வீட்டில் முயலலாம். எவ்வளவுக்கு எவ்வளவு செய்ய முடிகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு மகிமை. இதில் ஏதேனும் ஒன்று செய்ய முடியவில்லை... கிடைக்க வில்லை... தெரியவில்லை என்றால் அதனால் ஏதும் குறைவு கிடையாது.
இரவு முழுவதும் சிவ சிந்தனை அவசியம். அதற்காகத் தான் வித்தியாச வித்தியாசமான பூஜை முறைகளைச் சொல்லியிருக்கிறார்கள். இவற்றுக்கான தயாரிப்புகளில் நம் மனம் ஈடுபடும் போது தூக்கம் வராது. மேலும் ஈஸ்வர சிந்தனையோடே இருப்போம். அதற்காகத்தான் இப்படி ஓர் ஏற்பாடு. வீட்டில் இந்த வழிபாடுகளைச் செய்யமுடியவில்லை என்றால் ஆலயங்களில் அனைவருக்காகவும் நடைபெறும் வழிபாடுகளை தரிசனம் செய்யலாம். ஆகச்சிறந்த பலன் கிடைக்கும்.
எனக்கு வேதங்கள் தெரியாதே என்று சிலர் நினைக்கலாம். அப்படிப்பட்டவர்கள் தமிழ் மறைகளான சிவபுராணத்தை வாசிக்கலாம். அதைவிடப் பெரிய வேதம் ஏதுமில்லை. திருமுறைகளைப் பாராயணம் செய்யலாம். பூஜைகள் ஏதும் செய்யாவிட்டாலும் திருமுறைப் பாராயணம் மட்டுமே போதுமானது. மேலும் ஒருவிஷயம். 'ஏகவில்வம் சிவார்ப்பணம்.' ஒருவில்வம் சமர்ப்பித்தாலே அவர் அருளும் பலன்கள் நம் ஏழு பிறவிகளுக்கான புண்ணியத்தைக் கொடுக்கும். எனவே தயக்கமோ பயமோ சிவவழிபாட்டில் தேவையே இல்லை.

``முழு இரவும் விழித்திருக்க முடியாது. என்ன செய்வது?"
``இது பலருக்கும் இருக்கும் பிரச்னைதான். மறுநாள் வேலைக்குப் போகவேண்டும். சீக்கிரம் எழுந்துகொள்ள வேண்டிய தேவை இருக்கும். அவர்கள் இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டாம். மகாசிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்து ஸ்வாமியை தரிசித்து வழிபாடு செய்ய முடியாவிட்டால் கூட, ‘லிங்கோற்பவ’ காலமாகிய இரவு 11:30 மணி முதல் 1 மணி வரை உள்ள காலத்திலாவது சிவ தரிசனம் செய்து வழிபட வேண்டும்.
காஞ்சி மகாபெரியவர் லிங்கம் - லிங்கோற்பவம் குறித்து மிக அற்புதமாக விவரிக்கிறார் ``லிங்கம் ஏன் வட்டமாக இருக்கிறது? வட்டமான ஸ்வரூபத்துக்குத் தான் அடி-முடி இல்லை. ஆதியில்லை; அந்தமும் இல்லை. மற்றவற்றுக்கு உண்டு. முக்கோணத்துக்கும் சதுரத்துக்கும் உண்டு. ஆதியந்தம் இல்லாத வஸ்து சிவம் என்பதை லிங்காகாரம் காட்டுகிறது.
சரியான வட்டமாக (Circle) இல்லாமல், லிங்கம் நீள்வட்டமாக (ellipse) இருக்கிறது. `பிரபஞ்சமே ‘எலிப்டிக்’காகத்தான் இருக்கிறது. நம் சூரிய மண்டலத்தை எடுத்துக்கொண்டாலும் கிரகங்களின் அயனம் நீள்வட்டமாகத்தான் இருக்கிறது’ என்று நவீன விஞ்ஞானத்தில் சொல்வதும், பிரமாண்டமும், ‘ஆவிஸ்புரத்’ என்று சாஸ்திரம் சொல்வதும் லிங்க ரூபத்துக்கு ஒற்றுமையாக இருக்கிறது.
யாராவது பந்துவை நினைக்கிறோம். உடனே சந்தோஷமாயிருக்கிறது. ஆனால், அவருடைய உருவத்தையும் பார்த்தால்தான் சந்தோஷம் பூரணமாகிறது. அவ்வாறே உருவமற்ற சிவமும் ஓர் உருவத்தோடு வந்து அனுக்கிரகம் பண்ணி னால்தான் ரொம்ப சந்தோஷ மாக இருக்கும். ஞானிகளுக்கு மட்டுமே பரமாத்ம ஸ்வரூபத்தின் நிராகார (அருவ) உண்மை புரியும்.
உருவத்தைப் பார்த்துப் பார்த்து ஆனந்தம் அனுபவிக்கிற நமக்கு, உருவத்தோடு கண்டால்தான் ஆனந்தம்! அதற்காகவே உருவமற்ற பரமேஸ்வரன் அருவுருவமான லிங்கமானதோடு நில்லாமல், அந்த லிங்கத்துக்குள்ளேயே திவ்ய ரூபம் காட்டும் லிங்கோத்பவ மூர்த்தியாக இருக்கிறார். அடிமுடி எல்லை இல்லாமல் ஜ்யோதி ஸ்வரூபமாக - ஜ்யோதிர் லிங்கமாக, ஆகாயத் துக்கும் பூமிக்குமாகப் பரம சிவன் உத்பவித்த இரவே சிவராத்திரியாகும்!’’ என்பது காஞ்சிமுனிவரின் திருவாக்கு.
இத்தகு அற்புத வடிவான லிங்கோத்பவ மூர்த்தியை மகாசிவராத்திரி அன்று வழிபடுவதால் சகல இன்பங்களும் வாய்க்கும்; செல்வமும் செல்வாக்கும் பொங்கிப்பெருகும் என்கின்றன ஞானநூல்கள்.
லிங்கோத்பவ காலத்தில் நமக்குப் பிரபஞ்ச சக்தி மிகவும் சமீபமாக இருக்கும். அப்போது நாம் விழித்திருந்து நிமிர்ந்து அமர்ந்திருந்தாலே நமக்குள் அந்த சக்தி நிறையும். அப்படி நிறையும் சக்தி வரும் ஆண்டு முழுவதும் நம் வாழ்வை வளமாக்கும். எனவே லிங்கோத்பவ காலத்தில் விழித்திருக்க முயலுங்கள்.
இந்த ஆண்டு மகா சிவராத்திரியில் அனைவரும் அந்த மகேஸ்வரனை நன்கு வழிபட்டு சகலவிதமான நற்பலன்களையும் அடைவோம்.
அனைவருக்கும் மகாசிவரத்திரி நல்வாழ்த்துகள்.





















