நீ கவிதைகளா: `இந்த ஒரு வரிக்கு 3 நாட்கள் எடுத்துக்கொண்டோம்' - பாடலாசிரியர் ஜிகேப...
பிறந்தநாள் பார்ட்டிக்கு வந்த காதலி; நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற காதலன்
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் எம்.பி.ஏ.படித்து வந்த 24 வயது பெண் தனது தந்தையுடன் பிறப்பு சான்றிதழில் திருத்தம் செய்வதற்காக சென்றார். வேலை முடிந்தவுடன் தனது தந்தையிடம் தனது நண்பர் பியூஷ் தனோடியாவின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்டுவிட்டு இரவு 11 மணிக்குள் வீட்டிற்கு வந்துவிடுவதாக கூறிவிட்டு சென்றார்.
ஆனால் சொன்னபடி இரவு 11 மணிக்குள் வீட்டிற்கு வரவில்லை. ஆனால் அதேநாள் இரவில் அம்மாணவியின் ஆபாச வீடியோ அவள் படிக்கும் கல்லூரி வாட்ஸ்ஆப் குரூப்பில் வெளியானது. அதில் அம்மாணவியின் முகம் தெளிவாக தெரிந்தது.
ஆனால் மற்றவர்கள் முகம் மறைக்கப்பட்டு இருந்தது. அந்த வீடியோவை கல்லூரி நிர்வாகம் உடனே குரூப்பில் இருந்து நீக்கிவிட்டது.

மறுநாள் காலையில் கல்லூரி நிர்வாகம் மாணவியின் பெற்றோரை தொடர்பு கொண்டு இது குறித்து தெரிவித்தனர். அந்நேரம் மாணவியின் போனும், பியூஷ் போனும் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இது குறித்து மாணவியின் தந்தை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். எனினும் போலீஸ் நிலையங்களில் காணவில்லை புகாரை பதிவு செய்ய மறுத்தனர்.
இறுதியில் ஒரு போலீஸ் நிலையம் மாணவியை காணவில்லை என்று புகாரை பதிவு செய்தது. அப்படி பதிவு செய்த பிறகு மாணவியை கண்டுபிடிக்க எந்த வித அவசரமும் போலீஸார் காட்டவில்லை என்று மாணவியின் தந்தை குற்றம் சாட்டினார். போலீஸார் பியூஷ் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீடு பூட்டி இருந்தது.
மாணவி உடல்
இந்நிலையில் இந்தூரில் இருக்கும் பியூஷ் வீட்டில் இருந்து கெட்ட வாசனை வருவதாக பக்கத்து வீட்டுக்காரர்கள் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் போலீஸார் வந்து கதவை திறந்து பார்த்தபோது உள்ளே காணாமல் போன மாணவியின் உடல் அழுகிய நிலையில் நிர்வாணமாக கிடந்தது. மாணவியின் உடல் அடையாளம் காணமுடியாத அளவுக்கு அழுகி இருந்தது. இறந்து 3 நாட்கள் ஆகி இருக்கவேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். மாணவி காணாமல் போன நாள் இரவே கொலை செய்யப்பட்டுள்ளார்.
மாணவியின் கழுத்தில் கயிற்றால் நெரித்த அடையாளங்கள் இருந்தது. இதனால் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருக்க வேண்டும் என்று போலீஸார் தெரிவித்தனர். மாணவி அணிந்திருந்த சாக்ஸ் மூலம்தான் அவரை அவரது தந்தை அடையாளம் காட்டினார். மாணவியின் காதலன் பியூஷ் தற்போது தலைமறைவாகிவிட்டான். அவனும் எம்.பி.ஏ.தான் படித்து வருகிறான்.

கொலை செய்யப்பட்ட மாணவியின் தந்தை இது குறித்து கூறுகையில்'', எனது மகள் பியூஷ் தனோடியாவால் மனரீதியாக சித்திரவதை செய்யப்பட்டு, மிரட்டி, இறுதியில் கொலை செய்யப்பட்டுள்ளார். எனது மகளின் போனில் ஆட்சேபகரமான வீடியோக்களைப் பதிவேற்றம் செய்து அதனை அவளுக்கு தெரிந்தவர்களுக்கு பியூஷ் அனுப்புவான். அவள் இறப்பதற்கு முன்பு தனது தங்கையிடம் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார்''என்று குறிப்பிட்டுள்ளார். போலீஸார் வழக்கு பதிவு செய்து பியூஷை தேடி வருகின்றனர்.
பிறந்தநாள் பார்ட்டியில் மாணவியை அவனது காதலனும், அவனது நண்பர்களும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து இருக்க வேண்டும் என்று போலீஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். மேற்கொண்டு விபரங்கள்பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகுதான் தெரிய வரும் என்று துணை போலீஸ் கமிஷனர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.




















