கீர்த்தி சுரேஷ், கிருத்தி ஷெட்டியின் கையைத் தொட்டுப் பேசிய இயக்குநர் - கண்டிக்கு...
மாநிலங்களவை எண்ணிக்கை : `திட்டமிட்டு' முன்னேறும் பாஜக - கையறு நிலையில் காங்கிரஸ்! | முழு அலசல்
'தங்களிடம் பெரும்பான்மை பலம் உள்ளதால் எளிதாக வெற்றி பெறலாம்' என்ற நம்பிக்கையில் இருந்த காங்கிரஸ் மற்றும் 'இந்தியா' கூட்டணிக்கு, ஜார்கண்ட் மாநிலங்களவைத் தேர்தல் முடிவுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. பாரதிய ஜனதா கட்சி இங்கு வியூகங்களை வகுத்து வெற்றியைத் தன்வசப்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் காலியாக இருந்த இரு மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. மேலோட்டமாகப் பார்த்தால், அம்மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கூட்டணி இந்த இரு இடங்களையும் எளிதாகக் கைப்பற்றியிருக்க வேண்டும். ஆனால், அங்கு நடைபெற்ற 'மறைமுக வாக்குப்பதிவு மாற்றங்கள்' (Cross-voting) ஒட்டுமொத்த தேர்தல் முடிவுகளையும் தலைகீழாக மாற்றியுள்ளன.

சட்டமன்றத்தில் போதிய எல்.எம்.ஏ-க்களின் பலம் இல்லாத நிலையிலும், பாஜக ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளரும், பிரபல தொழிலதிபருமான பரிமல் நத்வானி வியத்தகு வெற்றி பெற்றுள்ளார்.
அதே நேரத்தில், காங்கிரஸின் அதிகாரப்பூர்வ வேட்பாளரான பிரணவ் ஜா தோல்வியைத் தழுவியுள்ளார். மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து, தற்போது ஜார்கண்ட் மாநிலத்திலும் காங்கிரஸிற்குப் பலத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இத்தேர்தலில் உண்மையில் என்ன நடந்தது, காங்கிரஸ் கூட்டணி உறுப்பினர்கள் எவ்வாறு வாக்களித்தனர் மற்றும் கடந்த காலங்களில் காங்கிரஸ் இதே போன்று எங்கு கோட்டை விட்டது என்பது குறித்த விரிவான அரசியல் அலசலை இக்கட்டுரையில் காண்போம்.
முதலில், ஜார்கண்ட் மாநிலங்களவைத் தேர்தலின் வாக்குக் கணக்கீடுகளைத் தெளிவாகப் புரிந்துகொள்வோம். ஜார்கண்ட் சட்டமன்றத்தைப் பொறுத்தவரை, ஒரு மாநிலங்களவை உறுப்பினர் வெற்றி பெற வேண்டுமானால், குறைந்தபட்சம் 28 முதலாவது விருப்ப வாக்குகள் தேவைப்படும். தற்போதைய நிலையில் அங்கு ஆளும் கூட்டணியான ஜே.எம்.எம் , காங்கிரஸ் மற்றும் ஆர்.ஜே.டி ஆகிய கட்சிகளைச் சேர்த்து மொத்தம் 56 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
இதில் ஜே.எம்.எம் கட்சிக்கு 34 உறுப்பினர்களும், காங்கிரஸிற்கு 16 உறுப்பினர்களும், லாலு பிரசாத் யாதவின் ஆர்.ஜே.டி கட்சிக்கு 4 உறுப்பினர்களும், சிபிஐ(எம்எல்) கட்சிக்கு 2 உறுப்பினர்களும் உள்ளனர்.
மறுபுறம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வெறும் 24 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். அதாவது, வெற்றிக்குத் தேவையான 28 வாக்குகளை விட 4 வாக்குகள் குறைவாகவே இருந்தன.
அரசியல் கணக்கீடுகளின்படி பார்த்தால், ஆளும் கூட்டணிக்கு இரு இடங்களிலும் வெற்றி உறுதியாகியிருக்க வேண்டும். கூட்டணி ஒப்பந்தத்தின்படி, ஜே.எம்.எம் வேட்பாளர் வைத்தியநாத் ராமுக்கு 30 வாக்குகளை ஒதுக்கிவிட்டு, மீதமுள்ள 26 வாக்குகளை காங்கிரஸ் வேட்பாளர் பிரணவ் ஜாவுக்கு அளித்திருந்தால் அவர் எளிதாக வெற்றி பெற்றிருக்கலாம்.
ஆனால், அங்குதான் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது.
உள்கட்சிப் பூசலும் வாக்குச் சிதறல்களும்வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த போது அரசியல் வட்டாரமே வியப்பில் ஆழ்ந்தது. ஜே.எம்.எம் வேட்பாளர் வைத்தியநாத் ராம் 30 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
ஆனால், காங்கிரஸ் வேட்பாளர் பிரணவ் ஜாவிற்கு வெறும் 20 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. மேலும், 3 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. அப்படியென்றால், மீதமுள்ள வாக்குகள் எங்கு சென்றன?
வெறும் 24 உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருந்த பாஜக முகாம், சுயேச்சை வேட்பாளர் பரிமல் நத்வானிக்குப் பின்னால் நின்று, ஒட்டுமொத்தமாக 28 வாக்குகளைப் பெற்று அவரை வெற்றி பெறச் செய்துள்ளது. அதாவது, காங்கிரஸ் கூட்டணியில் இருந்த ஆர்.ஜே.டி மற்றும் சிபிஐ(எம்எல்) ஆகிய கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், தங்களது கட்சியின் கொறடா உத்தரவையும் மீறி, ரகசியமாக பாஜக ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளருக்கு வாக்களித்துள்ளனர் என்பது இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. காங்கிரஸின் வாக்குகள் இவ்வாறு திட்டமிட்டுச் சிதறடிக்கப்பட்டுள்ளன.
ஆனால் இதை மறுத்துள்ள சிபிஐ(எம்எல்) கட்சி, காங்கிரஸ் கட்சிக்காரர்கள் தாங்கள் செய்த தவறை மறைப்பதற்காக அடுத்தவர்கள் மீது பழி போடுவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளது.
உண்மையைக் கூற வேண்டுமெனில், இத்தேர்தலின் தொடக்கத்திலிருந்தே காங்கிரஸிற்குப் பல்வேறு சவால்கள் நீடித்து வந்தன. அண்மையில் மத்திய பிரதேச மாநிலங்களவைத் தேர்தலின் போது, காங்கிரஸின் முதன்மை வேட்பாளரான மீனாட்சி நடராஜனின் வேட்புமனு, சில தொழில்நுட்பக் காரணங்களால் தேர்தல் அதிகாரியால் தள்ளுபடி செய்யப்பட்டது.
அதுவே காங்கிரஸிற்குப் பெரிய பின்னடைவாக அமைந்தது. அதே போன்றதொரு சூழலை இங்கும் உருவாக்குவதற்காக, பரிமல் நத்வானியின் வேட்புமனு மீதும் காங்கிரஸ் கடுமையான ஆட்சேபனைகளைத் தெரிவித்தது. 'அவரது மனு செல்லாது' எனத் தேர்தல் அதிகாரியிடம் வாதிட்டனர். இருப்பினும், தேர்தல் அதிகாரி நத்வானிக்கு விளக்கம் அளிக்க கூடுதலாக ஒரு நாள் அவகாசம் வழங்கி, பின்னர் அவரது வேட்புமனுவை ஏற்றுக்கொண்டார்.
காங்கிரஸின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு, நத்வானி தேர்தல் களத்திற்குள் நுழைந்தபோதே காங்கிரஸிற்கான ஆபத்து தொடங்கிவிட்டது. வாக்குப்பதிவின் போதாவது வெல்லலாம் என்ற காங்கிரஸின் இறுதி முயற்சியும் தோல்வியில் முடிவடைந்துள்ளது.
மாநிலங்களவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி இத்தகைய பின்னடைவுகளைச் சந்திப்பது இது முதன்முறையல்ல. கடந்த சில ஆண்டுகளாகவே உள்கட்சிப் பூசல்களால் காங்கிரஸ் தொடர்ந்து இவ்வாறான சரிவுகளைச் சந்தித்து வருகிறது. அதற்கு ஜார்கண்ட் மாநிலம் ஒரு புதிய உதாரணம் மட்டுமே.
கடந்த காலங்களில் காங்கிரஸ் எதிர்கொண்ட சில முக்கியப் பின்னடைவுகள்:
இமாச்சல பிரதேசம் (2024): மாநிலத்தில் காங்கிரஸிற்குத் தெளிவான பெரும்பான்மை இருந்தது. 68 இடங்களைக் கொண்ட சட்டமன்றத்தில் காங்கிரஸிற்கு 40 உறுப்பினர்களும், பாஜகவிற்கு 25 உறுப்பினர்களும் இருந்தனர். காங்கிரஸ் வேட்பாளர் அபிஷேக் மனு சிங்வி எளிதாக வெற்றி பெற்றிருக்க வேண்டிய சூழலில், காங்கிரஸைச் சேர்ந்த 6 சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறி பாஜக வேட்பாளர் ஹர்ஷ் மகாஜனுக்கு வாக்களித்தனர். வாக்குகள் சமமான நிலையில், இறுதியில் குலுக்கல் முறையில் பாஜக வெற்றி பெற்றது. பெரும்பான்மை இருந்தும் தோற்ற ஒரு வரலாற்றுப் பதிவாக இது அமைந்தது.
உத்தர பிரதேசம்: சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் இறுதி நேரத்தில் கட்சி மாறி பாஜகவிற்கு வாக்களித்தனர்.
மத்திய பிரதேசம்: ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸிலிருந்து விலகியபோது, அவரோடு சட்டமன்ற உறுப்பினர்களும் வெளியேறியதால் மாநிலங்களவை இடத்தைக் காங்கிரஸ் இழந்தது மட்டுமின்றி, ஆட்சியையும் பறிகொடுத்தது.
இவை அனைத்தும் காங்கிரஸ் கட்சிக்குள் முறையான ஒழுங்குமுறை இல்லை என்பதையும், தங்களது சொந்த சட்டமன்ற உறுப்பினர்களையே அக்கட்சியால் கட்டுப்படுத்த இயலவில்லை என்பதையும் வெளிப்படுத்துகின்றன.
'இந்தியா' கூட்டணியின் எதிர்காலமும் நாடாளுமன்ற வியூகங்களும்
இந்த ஜார்கண்ட் தோல்வி என்பது வெறும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தது மட்டுமல்ல. இது ஒட்டுமொத்த 'இந்தியா' கூட்டணியின் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு மீதே மிகப்பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது.
ஏனெனில், வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பாஜக அரசு சில முக்கியத் திட்டங்களை வைத்துள்ளது. நம்பகமான தகவல்களின்படி, வரவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு 'மகளிர் இடஒதுக்கீடு' மற்றும் 'தொகுதி மறுவரையறை' போன்ற முக்கிய மசோதாக்களைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது.
இதில் சில மசோதாக்கள் அரசியல் சாசன திருத்த மசோதாக்கள் ஆகும்.இவற்றை நிறைவேற்ற வேண்டுமானால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை அவசியமாகும்.
சுருக்கமாகக் கூறின், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து எந்தவொரு மசோதாவையும் தடுக்க முடியாத அளவிற்கு, இத்தகைய மறைமுக ஆதரவு வாக்குகள் மூலம் பாஜக தனது பலத்தைத் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.

இறுதியாக, ஜார்கண்ட் தேர்தல் உணர்த்தும் பாடம் என்னவெனில், உள்கட்சி ஒற்றுமை இல்லாத பட்சத்தில் வெளிப்புறக் கூட்டணிகளால் பலன் ஏதுமில்லை என்பதாகும்.
காங்கிரஸ் கட்சிக்குள் ஒழுங்குமுறை தற்போதும் பலவீனமாக உள்ளது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. தங்களுக்குள்ளேயே ஒருமித்த கருத்து இல்லாத நிலையில், 'இந்தியா' கூட்டணியை வைத்துக்கொண்டு வரும் காலங்களில் பாஜகவை எவ்வாறு எதிர்க்கப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாஜகவின் தலைமை, மாநில வாரியாக உள்ள அரசியல் பலவீனங்களைக் கண்டறிந்து தங்களுக்குத் தேவையான ஆதரவைச் சத்தமின்றித் திரட்டி வருகிறது. காங்கிரஸும், 'இந்தியா' கூட்டணியும் தங்களைச் சுயபரிசோதனை செய்துகொள்ளத் தவறினால், வரும் காலங்களில் மேலும் பல மாநிலங்களில் இத்தகைய பின்னடைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பதே தற்போதைய அரசியல் சூழல் உணர்த்தும் உண்மையாகும்.!













