`ஆமா, பண்ணையார் தான்; நான் ஒன்றும் உழைத்து முன்னுக்கு வந்தவன் இல்லை.!" - கார்த்த...
மேட்டூர் அணை: பிரமாண்டத்தின் சிகரம்; திறப்பு விழா கண்ட அந்த வரலாற்று நாள் நிகழ்வுகள்! | அணை ஓசை 46
1934 -ம் வருடம் ஜூலை மாதம் மேட்டூர் அணை கட்டுமான அனைத்து வேலைகளும் முடிக்கப்பெற்று தயாரான நிலையில் இருந்தது. அணை திறப்பு விழா 1934 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி காலை நடைபெற்றது. மெட்ராஸ் மாகாண கவர்னர் மேதகு லெப்டினன்ட் கர்னல் மாண்புமிகு “சர் ஜார்ஜ் பிரெட்ரிக் ஸ்டான்லி,” அணையை திறந்து வைத்தார்.
விழா முன்னேற்பாடுகள்
வெவ்வேறு இடங்களில் இருந்து வந்து குழுமியிருந்த மெட்ராஸ் மாகாணத்தின் முக்கிய விருந்தினர்கள் முன்னிலையில் இவ்விழா நடந்தேறியது! மேலும், மெட்ராஸ் மாகாணத்திற்கு வெளியே இருந்த, வேறு இந்திய மாநிலத் தலைவர்களும், விருந்தினர்களும் இதில் கலந்து கொண்டனர். வெகு தூரத்திலிருந்து ரயில் மற்றும் சாலை வழியாக திறப்பு விழாவுக்கு ஒரு நாள் முன்னதாகவே மேட்டூர் வந்தடைந்த பல விருந்தினர்கள் மேட்டூரில் தங்க வைக்கப்பட்டனர். ஐரோப்பிய மற்றும் இந்திய குடியிருப்புகள் சுத்தம் செய்யப்பட்டு அங்கு விருந்தினர்கள் தங்க வைக்கப்பட்டனர். அந்த குடியிருப்புகளில் விருந்தினர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்யப்பட்டு தேவையான உணவு வகைகள் தயார் செய்து அளிக்க சென்னையிலிருந்து நிறுவனங்கள் பணிக்கு அமர்த்தப்பட்டனர்.
மத்திய அலுவலகத்தில் இருந்த பெரிய அறைகள், உணவு சாப்பிடும் 'டைனிங் அறைகளாக' மாற்றப்பட்டன. சிறப்பு வாகன நிறுத்துமிடங்களும், கூடுதலாக பெட்ரோல் போடும் எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் அமைக்கப்பட்டு விருந்தினர்களின் வசதிக்காக ஏற்படுத்தப்பட்டன. பெருவாரியான விருந்தினர்கள் சாலை மார்க்கமாகவே பயணித்து வந்திருந்தனர். மெட்ராஸில் இருந்தும் திருச்சியில் இருந்தும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு அதில் வந்த விருந்தினர்களை ரயில் நிலையத்திலிருந்து அழைத்து வர மோட்டார் கார் மற்றும் பேருந்துகள் இயக்கப்பட்டு, குடியிருப்புகளில் தங்க வைக்க ஏற்பாடுகள் நடந்தேறியது.
மேற்குறிப்பிட்ட அழைப்பு விடுக்கப்பட்ட விருந்தினர்கள் மட்டுமின்றி மேட்டூர் சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் மேட்டூர் அணை நோக்கி திரள் திரளாக படையெடுத்தனர்.
எந்த நேரத்திலும் இந்தியர்கள் இது போன்ற பொழுதுபோக்கு அம்சங்களை மிகவும் விரும்புகிறவர்களாக இருந்தனர் என்று குறிப்பிடுகிறார் இந்த பகுதியை குறித்து எழுதிய மேற்பார்வை பொறியாளர் பார்பர். இது போன்ற ஆரம்ப விழா நிகழ்ச்சி என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது மட்டுமல்ல, இது போன்று மக்கள் வருவதை கட்டுப்படுத்தவும் இயலாது என்றும் பதிவு செய்திருக்கிறார் அவர். அளவு கடந்த கூட்டம் அன்று மேட்டூரில் திரண்டது. திறப்பு விழா நடைபெற்ற பெவிலியன் (Pavilion) என்ற காட்சிக் கூட பகுதியில் பந்தல் அமைத்து விருந்தினர்கள் அமர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கவர்னர் மற்றும் அவரது மனைவி திறந்து வைக்க அந்த இடத்திற்கு வருவதற்கு முன்பே அந்த இடம் முழுவதும் விருந்தினர்களால் நிறைந்து காணப்பட்டது.
கவர்னருக்கு முதல் மரியாதை
மேட்டூர் அணை ரயில் நிலையத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு சற்று முன்பாகவே வந்து சேர்ந்த ரயிலில் இருந்து மாண்புமிகு கவர்னர் மற்றும் அவரது மனைவி இருவரும் சரியாக காலை 7.30 மணிக்கு ரயில் நிலையத்திலிருந்து விழா நடைபெறும் இடத்திற்கு காரில் புறப்பட்டனர். கவர்னருக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. ரயில் நிலையத்துக்கு அருகில் இருந்த குன்றின் மேலே இருந்து துப்பாக்கி குண்டுகள் முழங்கின. அந்த குன்று இருந்த இடம் தற்போதைய “கெம்ப்ளாஸ்ட் சன்மார்” நிறுவன குடியிருப்பு பகுதியாக உள்ளது என்பது கூடுதல் தகவல்!
வழி நெடுகிலும் ஏராளமான மக்கள் விழாவை காண நிறைந்திருந்தனர். அந்த காலைப் பொழுதிலேயே மாபெரும் கூட்டம் அலைமோதியது. கவர்னர் விழா மேடைக்கு அருகில் வந்து இறங்கியவுடன் தேசிய கீதம் பாடப்பட்டது. ரிசர்வ் போலீஸ் அளித்த GUARD OF HONOUR என்ற அணிவகுப்பு மரியாதையை கவர்னர் பார்வையிட்டார்.
மாண்புமிகு நிதியமைச்சர் சர். ஆர்ச்சிபால்ட் கேம்பெல் மற்றும் அப்போது பொறுப்பிலிருந்த பாசன வசதிக்கான தலைமைப் பொறியாளர் திவான் பகதூர் ஆர். நரசிம்ம அய்யங்கார் ஆகிய இருவரும் மாண்புமிகு கவர்னர் குடும்பத்தாரை வரவேற்று காட்சிக்கூடத்தின் பால்கனி வரை அழைத்துச் சென்றனர்.
திறப்பு விழா நிகழ்ச்சி மற்றும் உரைகள்
தலைமைப் பொறியாளர் உரையுடன் திறப்பு விழா ஆரம்பமானது. திரு. நரசிம்ம அய்யங்கார் இந்த திட்டத்தின் வரலாறு குறித்து சுருக்கமாக எடுத்துரைத்தார். அதைத் தொடர்ந்து அப்போதைய நிதி அமைச்சர் Archibald Campell உரையாற்றினார். அடுத்த முக்கிய நிகழ்வாக, மேதகு ஆளுநர் மின்சார பொத்தானை அழுத்தி, ஒரே சமயத்தில் நான்கு மதகுகளை இயக்கி நீர் வெளியேற்றத்தை துவக்கி வைத்தார்.
இந்த மதகுகளின் கதவுகளுக்கு பின்னால் அதிக ஆழமில்லாமல் குறைந்த அளவில் நீர் சென்றாலும், விழா நடைபெற்ற இடத்திலிருந்து கதவுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றும் நிகழ்வு மிகவும் உயரமான குன்றில் இருந்து பார்க்கும்போது அது அனைவருக்கும் கண்கொள்ளா காட்சியாக அமைந்தது. அவ்விடத்தில் மகிழ்ச்சி நிரம்பியிருந்தது! மக்கள் ஆரவாரம் செய்தனர்.
அடுத்து அழகான காட்சி கூடத்தின் கதவுகளை திறந்து வைத்தார் மாண்புமிகு கவர்னர் அவர்கள். தொடர்ந்து கூடத்தில் அமைத்திருந்த நினைவுக் கல்வெட்டையும் திறந்து வைத்தார். இந்த மாபெரும் நிகழ்வினை கொண்டாடும் விதமாக இரும்பு மதகுகளை தயாரித்து வழங்கிய M/s. GLENFIELD AND KENNEDY நிறுவனத்தின் பிரதிநிதி, மாண்புமிகு கவர்னருக்கு வெள்ளியிலான கோப்பை ஒன்றை பரிசளித்தார். இந்த நிறுவனம்தான் அணையில் பாசனக் கால்வாய் மதகுகள் மற்றும் உபரி நீர் வெளியேற "எல்லீஸ் பாலம்" மதகுகளை வடிவமைத்து வழங்கி நிறுவியவர்கள் என்பது நினைவுகூரத்தக்கது. இவ்வாறு விழா இனிதே நிறைவடைந்தது.
பூங்கா திறப்பு
காட்சிக் கூடத்தில் இருந்து வெளியேறிய மேதகு ஆளுநர் மற்றும் அவரது மனைவியும் அணையின் மேல் பாகத்தில் அமைந்திருந்த சாலை வழியாக அணையின் வலது கரைக்கு பார்வையிட்டபடி சென்றனர். ஆங்காங்கே நின்று அணை மற்றும் நீர் நின்ற பகுதிகள், மதகுகள் மற்றும் கடைசி கல் (Last stone) வைத்து கட்டுமானப் பணி நிறைவு செய்த "நினைவுக் கல்" இவற்றை பார்வையிட்டு இறுதியில் அணை கட்டுவதற்காக ஆரம்ப விழாவில் கவர்னர் மேதகு லார்ட் கோச்சன் (Lord Goschen) அவர்கள் 9 வருடங்களுக்கு முன்பு 1925 -ல் நிறுவிய 'ஸ்தூபி' முதலியவற்றை பார்வையிட்டனர்.
பின்னர் வலது கரையிலிருந்து அமைக்கப்பட்ட சாலை வழியாக கீழிறங்கி பூங்காவிற்கு வந்து சேர்ந்தனர். அதற்குள் திறப்பு விழாவுக்கு வந்திருந்த விருந்தினர்கள் அனைவரும் பூங்காவில் கூடி நின்றனர். பூங்காவில் மையமாக அமைந்திருந்த நீரூற்றுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் கூடியிருந்த அனைத்து விருந்தினர்களுக்கு முன்பு அப்போதைய மேற்பார்வை கண்காணிப்பாளர் திரு. பார்பர், பூங்கா அமைப்பு, அமைந்த விதம் குறித்த அறிக்கையை வாசித்தார். மேலும் அவர், கவர்னரின் மனைவி "லேடி பீட்ரிக்ஸ் ஸ்டான்லி" அவர்களை (Lady Beatrix Stanley) பூங்காவைத் திறந்து வைக்குமாறு விடுத்த வேண்டுகோளை ஏற்று அம்மையார் அவ்வாறே திறந்து வைத்தார். மாண்புமிகு திருமதி ஸ்டான்லி பூங்காவின் அமைப்பு அதன் கட்டுமானம் குறித்து மிகப் பெரிய அளவில் தன் ஈடுபாட்டினை காண்பித்தார். எனவே, அந்த பூங்காவிற்கு அம்மையார் பெயர் வைக்கப்பட்டது.
அம்மையார் ரிப்பனை வெட்டி சம்பிரதாயமாக பூங்காவை திறந்து வைக்க, ஏற்கனவே செய்து வைத்த ஏற்பாட்டின் படி தண்ணீர் நீரூற்றின் வழியாக மேலெழும்பியது. அந்த அழகான காட்சியை அனைவரும் கண்டு மகிழ்ந்தனர். அனைவரிடத்திலும் உற்சாகம் பீறிட்டது. விழா இனிதே நிறைவடைந்தது. கவர்னரும் அவரது மனைவியாரும் மதிய உணவை முடித்துக் கொண்டு அங்கிருந்து 'உதகமண்டலம்' கிளம்பிச் சென்றனர்.
மற்ற விருந்தினர்கள் தங்கள் மதிய உணவை முடித்துக் கொண்டு அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்தனர். பல விருந்தினர்கள் அன்று இரவு மேட்டூரில் தங்கி வான வேடிக்கைகளைக் கண்டனர்.
அணை கட்டுமானத்தில் வேலை செய்த வேலையாட்கள் அனைவருக்கும் அரசு சார்பில் அன்று மதிய விருந்து அளிக்கப்பட்டது. ஆண்களும் பெண்களும் ஏராளமானவர்கள் இதில் கலந்துகொண்டு உணவருந்தினர். இந்த விழாவில் வாய்ப்பு கிடைத்து கலந்து கொண்டவர்கள் அனைவரின் உள்ளங்களிலும் நீங்காத நினைவுகள் ஏற்படுத்திய மகிழ்ச்சியான அந்த நாள் முடிவுக்கு வந்தது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மேட்டூர் அணை மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. இன்று வரை கோடானு கோடி தமிழ் மக்களுக்கு உயிர் நாடியாக பயனளித்துக் கொண்டிருக்கும் அணையின் திறப்பு விழா நிகழ்ச்சி திட்டத்தின் மகுட நாளாக எல்லோர் மனதிலும் நிலை பெற்றது. இது குறித்து அப்போதைய நாளிதழ்கள் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளின் பத்திரிகைகளும் இது குறித்து விளக்கமாக செய்திகளை வெளியிட்டது!
பத்திரிகை செய்திகளின் ஆராய்ச்சி
“தி ஹிந்து” ஆங்கில நாளிதழ் (THE HINDU) நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகை துறையில் சேவை புரிவதால் மேட்டூர் அணை குறித்த தகவல்களை திரட்ட சென்னையில் உள்ள “தி ஹிந்து” அலுவலகத்தை நாடினேன். அங்கு அவர்களுக்கு மட்டுமே சொந்தமான “ஆவணக் காப்பகம்” ஒன்று செயல்பட்டு வருகிறது. உரிய அனுமதியின்றி தரவுகளை பெற அங்கு வாய்ப்பில்லை. ஆனால், “தி ஹிந்து” நிறுவனத்திடம் எழுத்துப்பூர்வ உரிய அனுமதி பெற்று, அவர்களின் விதிகளின் படி தகவல்களை பயன்படுத்திக் கொள்ள கட்டணம் செலுத்தி, ஆவணக் காப்பகத்தில் இருந்து தேடி எடுத்த மேட்டூர் அணை குறித்த சுருக்கமான தகவல்கள் கீழே! அப்போது அனைத்தும் ஆங்கில மொழியில் பிரசுரமாகி இருந்தாலும் அதை நமது வாசகர்களுக்கு சுருக்கமாக தமிழ்ப் படுத்தி உள்ளேன். முக்கிய தகவல்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கிய “THE HINDU” நிர்வாகத்திற்கு நன்றி!
15.08.1924 தேதியிட்ட செய்தி
டி. வி. சேஷகிரி ஐயர் என்பவரால் எழுதப்பட்ட ஒரு கட்டுரை. இது 15. 8. 1924 இல் வெளியாகி இருக்கிறது. அதன் தலைப்பு “AN INOPPORTUNE MEASURE” (பொருத்தமற்ற நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு).
“1924 இல் ஏற்பட்ட பெருவெள்ள சேதங்களை சீரமைக்கும் பணி வெகுவாக இருப்பதால் மேட்டூர் அணை கட்ட இது பொருத்தமான நேரம் அல்ல. எனவே, இதைத் தள்ளிப் போட வேண்டும். திருச்சி மற்றும் தஞ்சாவூர் மக்களிடம் ஆலோசனை பெற வேண்டும். கண்ணம்பாடி அணை போல அல்லாமல் மேட்டூர் அணை கட்டப்பட வேண்டும். மைசூர் சமஸ்தான மக்கள் மேற்படி கண்ணம்பாடி அணை உடைந்து விடுமோ என்கிற அச்சத்தில் உள்ளனர்.
எனவே, மெட்ராஸ் மாகாண கவுன்சில் அரசு இந்தத் திட்டத்தை உடனே அனுமதிக்காமல், சில காலம் தள்ளிப்போட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள் என்பதாக இந்தக் கட்டுரை எழுதப்பட்டு பிரசுரமாகியுள்ளது. ஆரம்பத்தில் இந்தத் திட்டத்திற்கு இப்படி ஒரு முட்டுக்கட்டை இருந்துள்ளது தெரிய வருகிறது.
18.08.1924 தேதியிட்ட செய்தி
மெட்ராஸ் மாகாண சட்டமன்ற கவுன்சில், செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் 18. 8. 1924 அன்று கூடியது. திவான் பகதூர் L.O. சுவாமி கண்ணன் பிள்ளை, அவைக்கு தலைமை தாங்கினார். அன்று 100 சட்டமன்ற உறுப்பினர்கள் அவையில் இருந்தனர். பார்வையாளர் மாடம் நிரம்பி வழிந்தது. பலத்த கரவொலிக்கிடையில் சர். முகமது ஹபிபுல்லா, அவைத் தலைவராக தனது இருக்கையில் வந்தமர்ந்தார்.
மாண்புமிகு கவர்னர் கோஷன், “இங்கிலாந்து பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் எனக்கு அனுபவம் இருந்தாலும் இங்கே இது எனது முதல் உரை” என தனது பேச்சைத் துவக்கினார்.
“தற்போது இந்தியாவில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. பஞ்சம், வெள்ளப்பெருக்கு, புயல் மற்றும் சூறாவளி, தொற்று மற்றும் கொள்ளை நோய்கள் பரவல் போன்றவை உள்ளன. அரசு இதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. நீர் பாசன வசதிக்காக சாலைகள், கால்வாய்கள் மற்றும் பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. கெடுவாய்ப்பாக பெருவெள்ளம் பலருடைய வேலை வாய்ப்பை பறித்துள்ளது.
இதற்கான நிவாரணத்துக்கு நிதி திரட்டப்படுகிறது. காவிரியில் மேட்டூர் அணை திட்டம், முதல் கட்டமாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் நோக்கம் பாசன தேவைகளை நன்கு பாதுகாத்தல், தஞ்சாவூர் பகுதி பாசன தேவைகளை அதிகப்படுத்துதல் என்பவையே! மைசூர் - மெட்ராஸ் அரசுகளுக்கிடையே காவிரி ஒப்பந்தம் ஏற்பட்டது பிரிட்டிஷ் அரசுக்கு மிகவும் திருப்தியாக உள்ளது. இரண்டு அரசுகளும் தங்கள் நிலைகளில் இருந்து இறங்கி வந்தது மக்களுக்கு பயனளிக்கும். இது ஒரு நற்செய்தி” என்ற இவரது உரையின் மூலம் மேட்டூர் அணை திட்டத்தில் ஆரம்பகால நோக்கம் தெளிவாகிறது.
04.03.1925 தேதியிட்ட செய்தி
ஓமலூர் தாலுகா விவசாயிகளின் கோரிக்கை:
காவிரி தங்கள் தாலுகாவில் ஓடுவதால் நீர்ப்பாசனம் செய்ய தங்கள் தாலுகா நிலங்களுக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை மனு அளித்தனர். மேலும், மேட்டூர் அணையும் இந்தத் தாலுகாவில் அமைந்துள்ளது எனவும் பலமுறை கோரிக்கையும், தொப்பையாற்றில் அணை கட்ட கோரிக்கையும் வைத்தனர்.
காவிரி மேட்டூர் திட்டத்தில் தங்கள் நிலங்களுக்கு முன்னுரிமை அளிக்க சில காரணங்களையும் அவர்களது மனுவில் பட்டியலிட்டுள்ளனர். ஓமலூரில் இருந்து 25 மைலில் மேட்டூர் அணை கட்டப்படுகிறது. தொப்பையாறு பல இடங்களில் காவிரியுடன் கலக்கிறது. மேட்டூரில் இருந்து ஓமலூர் உயரம் குறைவான (M.S.L) இடத்திலேயே உள்ளது. பாசனத்துக்காக கால்வாய் வெட்டும் செலவை விட வருமானம் அதிகமாக வரும் என்றெல்லாம் காரணங்களை எடுத்துக் கூறியும் அரசு செவி சாய்க்கவில்லை.
15.01.1931ல் வெளியான செய்தி
காவிரி மேட்டூர் திட்ட சிறப்பு அதிகாரியை 20 முக்கியமான டெல்டா பகுதி மிராசுதார்கள் சந்தித்தனர். நெல் மூட்டைகளை, வேறு இடங்களுக்கு அனுப்ப போக்குவரத்தில் மிகுந்த சிரமங்கள் உள்ளதாகவும், மழைப் பொழிவை மட்டுமே நம்பி உள்ள நிலங்களை (புன்செய் நிலம்) நன்செய் நிலங்களாக மாற்றும் அரசின் யோசனையை செயல்படுத்த விவசாயிகளுக்கு மிகுந்த செலவாகும் என்றும் எதிர்ப்பு தெரிவித்தனர். நெல், கரும்பு மற்றும் வெற்றிலை பயிர்கள் இதில் அடங்கும். மண் குறித்த ஆராய்ச்சி தேவை என்றும் விண்ணப்பம் வைத்தனர். ஆனால், சிறப்பு அதிகாரி வரி விகிதம் மிகவும் குறைவு தான் என்றும் ஒப்பந்தப்படி கால்வாய் அமைக்காவிட்டால் எதிர்வரும் காலங்களில் நிறைய தொகை செலவழித்தாலும் பாசன வசதி பெற முடியாது என்றும் எச்சரித்தார்.
05.07.1933 & 06.07.1933 தேதிகளில் வெளியான செய்தி
காவிரி மேட்டூர் திட்டத்தில் புதிய நீர்ப்பாசன மேம்பாட்டு அதிகாரிகளை அரசு நியமித்தது. நீட்டிப்பு கால்வாய் மற்றும் கல்லணை கால்வாய் இவற்றை தொடர்ந்து பார்வையிட வேண்டும், விவசாயிகளுக்கு இத்திட்டம் குறித்து எடுத்துச் சொல்லி விளக்கம் தர வேண்டும், தவிர நீர் வரி ஏக்கருக்கு 7 ரூபாய் -8 அனா என்பது சரியான நீர்வீத வரி என்பதை விவசாயிகளுக்கு எடுத்துக் கூறி அதிக ஏக்கர் நிலங்களில் பயிரிட வைக்க வேண்டும், தேவைப்படும் இடங்களில் சிறிய வாய்க்கால்களை விவசாயிகளே வெட்டிக் கொள்ள பரிந்துரை செய்ய வேண்டும்” என்பதாக அவர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டது.
15.08.1933 தேதியிட்ட செய்தி
விவசாயிகளின் கோரிக்கை:
மெட்ராஸ் மாகாண அரசின் ரெவின்யு மெம்பர் A.Y.G கேம்ப்பல் பல்வேறு மெட்ராஸ் மிராசுதார்களிடமும், தஞ்சாவூர் மற்றும் திருச்சி ரயத்துகளிடமும் அவர்களது குறைகளை கேட்டறிய தனிப்பட்ட முறையில் தொடர்பு வைத்திருந்தார்.
வேறு இடங்களில் எழுப்பிய பிரச்சினைகளையே இங்கும் விவசாயிகள் எழுப்பினர். தவிர, தென்னிந்திய ரயில்வே போர்டு நெல் மூட்டைகளுக்கு மிக அதிக அளவில் சரக்கு போக்குவரத்து கட்டணங்கள் வசூலித்து வந்தது. இதை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.
“மேட்டூர் நீர் அதிகமான அளவில் விநியோகம் செய்யப்பட மாட்டாது, சீரான அளவில் மட்டுமே ஒழுங்கு படுத்துவார்கள். பின் எதற்கு அதிக வரி என கேட்க வேண்டும்? எனவே, இது அநீதியான வரி எனவும் இதனால் மேட்டூர் நீரை உபயோகிக்க தயங்குகிறார்கள். இது குறித்து அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்கள்.
22.03.1934 தேதியிட்ட செய்தி
நீர்ப்பாசன பருவ காலம்:
அணையில் நீர் சேமித்து சீரான நீர் வழங்குவது சாத்தியமானதால் அரசு நீர் பாசன கால வரம்புகளை மாற்றி அமைக்க முயற்சித்தது. பரிசோதனை அளவில் மாற்றப்பட்ட பாசன காலம் செப்டம்பர் 1 முதல் - மே 31 வரை என்ற அளவில் மாற்றி அமைத்ததை டெல்டா விவசாயிகள் அப்போது எதிர்த்தனர். விவசாய இயக்குனரும் இதை மறுபரிசீலனை செய்யக் கோரினார். அரசு இந்த கோரிக்கைகளை ,அரசாணை 2111-I 25. 7. 1930 தேதியிட்ட உத்தரவு மூலம் ஏற்றுக்கொண்டு மாற்றி அமைத்தது.
முதல் போகம் - 15 ஜூன் முதல் 31 டிசம்பர் வரை ( ஒவ்வொரு வருடமும்)
இரண்டு போகம் - 16 ஜூன் முதல் 31 ஜனவரி வரை என அரசாணை எண் 1507 (ரெவின்யு) தேதி 14. 7. 1931 இந்த தேதியில் குறிப்பிட்டு வெளியிடப்பட்டது.
11.06 1934 தேதியிட்ட செய்தி
மேட்டூர் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தவுடன் விவசாய நிலங்களுக்கு நீர் வரி விதிக்கப்பட்டது. இது ஒரு ஏக்கருக்கு ரூபாய் 6/-லிருந்து, 17 ரூபாய் 8 அனா என்ற அளவில் இருந்தது. தஞ்சாவூர் மாவட்ட மிராசுதார்கள் இந்த நீர் வரி விதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் கீழ்க்கண்டவாறு அரசின் கவனத்திற்கு கோரிக்கை வைத்தனர்.
“மேட்டூர் அணை தண்ணீர் ஒரே சீராக இப்போது கிடைக்கிறது என்பதால் வரிவிதிப்பு அதிகம் செய்யப்பட்டுள்ளது தவறு. வடகிழக்கு பருவ மழை பெரும் வெள்ளத்துக்கு காரணமாக அமைகிறது. ஆனால், அப்போதுதான் (DRY CROPS) மானாவாரி பயிர்கள் பயிரிடப்படுகின்றன.
இதற்கு அதிக வரி விதிப்பது எந்த வகையில் நியாயம்? ஒவ்வொரு பயிர்களுக்கும் ஒவ்வொரு வரி விதிப்பதை ஏற்றுக் கொள்ளலாம். சில வகை பயிர்கள் அதிக நீர் எடுக்கும். சில வகை குறைந்த நீர் எடுக்கும். புது நீர் வரி இவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. பழைய வழிமுறை சரியாக இருந்தது. புதிய விதிகள் முரண்பாடாக தெரிகிறது.
புதிய வரி நியாயமற்ற அதிக வரி. வரி எதற்காக? சேவை தருவதற்காக அல்லது விளைச்சல் அதிகம் வருவதில் பங்கா? நீருக்கு வரி என்றால் எவ்வளவு பயன்படுத்தினோமோ அதற்கு வரி போட வேண்டும். இதனால் கரும்புக்கு அதிகமாகவும் நெல்லுக்கு குறைவாகவும் வரிவிதிப்பு ஏற்படும். அது சரியானதாக இருக்கும். எனவே, அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்ற கோரிக்கையை மிராசுதார்கள் அரசிடம் வைத்தார்கள் என்ற கட்டுரை 11. 6. 1934 ஆம் தேதியிட்ட “தி ஹிந்து” நாளிதழில் வெளிவந்துள்ளது.
21.08.1934 தேதியிட்ட செய்தி
திறப்பு விழா உரை
மாண்புமிகு சர் ஜார்ஜ் ஸ்டான்லி மேட்டூர் அணையை 1934 ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி திறந்து வைத்தார். அப்போதைய அவரது உரையில் “பொறியியல் திறன்களில் மிகவும் கவனம் ஈர்க்கக் கூடிய சாதனைகளில் ஒன்று என்று புகழ்பெற்றது இந்தத் திட்டம். 20 சதம் அதிகமாக நீரை தேக்கி வைக்க கூடிய அளவு கொள்ளளவை கொண்டதாக அணையின் அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. நீர் பரவல் சுமார் 60 மைல் சுற்றளவு கொண்டது.
சுமார் 7 கோடி ரூபாய் அளவில் இந்த அணை கட்டப்பட காரணமாக இருந்த அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள். “லா மெம்பர்” சர். சி. பி. ராமசாமி அய்யர் அவர்களின் நம்பிக்கையும் ஊக்கமும் இந்தத் திட்டம் உருவாவதற்கு முக்கிய காரணங்களாக இருந்தன. திரு.முல்லிங்ஸ் அவர்களின் பணிக்காக அவருக்கு இங்கிலாந்து அரசின் “நைட் வுட்” (KNIGHT WOOD) என்ற பட்டம் வழங்கி பொருத்தமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பணியை நிறைவேற்றிய நிர்வாக அதிகாரிகள், பணியாளர்கள், ஒப்பந்தக்காரர்கள் மற்றும் தொழிலாளர்கள் என ஒரு பெரும் படையினரின் அர்ப்பணிப்பு காரணமாக இது அமைந்திருக்கிறது”.
“மக்கள் தங்கள் மீது விதிக்கப்பட்ட வரிச்சுமையை ஏற்றுக் கொண்டார்கள். இந்தத் திட்டத்தின் மூலம் நடைமுறையின் பயன் மிகவும் அதிகம். அளவிட முடியாத பெரும் பயன். இந்த திட்டத்தின் மூலம் மூன்று லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் முதலாம் போக பாசன வசதி பெறும். மேலும் ஒரு லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இரண்டாம் போகம் பாசன வசதியும், இதன் மூலம் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் டன் அரிசி மகசூல் கிடைக்க வழிவகையும் செய்யப்படும்.
பெருவெள்ள காலங்களில் ஏராளமான நீர் கடலுக்குச் சென்று கலப்பதை சேமித்து வைக்க இந்த அணை திட்டம் உதவி செய்யும். தற்போது நிலவும் தடைப்பட்ட நீர் வழங்கல் இனி ஏற்படாது. நீர் வழங்கல் சீராக இருக்கும். டெல்டா நிலங்கள் மழையை மட்டுமே நம்பி இருப்பது குறையும். நீர்த்தேக்கம் ஒரு சீராக்கியாக செயல்படும்”.
“மேலும் 49,000 H.P மின் உற்பத்தி, இங்கு அமைக்கப்படும் மின் நிலையம் மூலம் உற்பத்தி செய்ய முடியும். இதனால் சிறிய தொழிற்சாலைகள் பயன்பெறும். இந்த நீர்த்தேக்கம் ஒரு கணிசமான செல்வம். எல்லா தரப்பு நிலங்களுக்கும் சமமாக நீர் கிடைக்குமா என்பதில் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு பலத்த சந்தேகம் உள்ளது எங்களுக்கு நன்கு புரிகிறது.
திவான் பகதூர் N. சுவாமிநாத அய்யர் எழுதிய கட்டுரை ஒன்றில் இது குறித்து ஏதாவது சரி செய்ய வேண்டுமெனில் பின்வரும் காலங்களில் சரியான முறையை கடைப்பிடித்து கொள்ளலாம் என்றும் கருத்து தெரிவித்திருந்தார். விவசாயிகளுக்கு நீர் வரி அதிகம், இது பெருஞ்சுமை என்று கருதுவதை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது”.
“மேட்டூர் அணை திட்டம் ஒரு பிரமாண்டமான முயற்சி!
``இதன் முடிவுகளை காண நாம் காத்திருக்க வேண்டும். மக்களின் உளவியல் மற்றும் அவர்களின் நீண்ட கால விவசாய முறை அவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதை தடுத்து அச்சத்தை உண்டு செய்கிறது என்பது புரிகிறது. அரசு அவர்களை அனுதாபத்துடனும் அதேசமயம் கவனத்துடனும் கையாள வேண்டிய பொறுப்புடன் செயல்படுகிறது. உலகளாவிய பொருளாதார மந்த நிலையின் போது தொடங்கப்பட்ட இந்த திட்டம் பாதகமான சூழ்நிலையில் தள்ளும் என்பது புரிந்து கொள்ளக்கூடிய விஷயம். இந்த மந்த நிலை தொடர்ந்து நீடிக்காது என்ற நம்பிக்கை நமக்கு உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் பணப்பயிர்களை விளைவித்து பலன் பெற இயலும் என்பதை உறுதியோடு நம்புகிறோம்” என்று கூறி முடித்தார்.
இதுவே கவர்னர் அவர்கள் ஆற்றிய உரையின் இரத்தினச்சுருக்கம்!
தொடர்ந்து பயணிப்போம்!
காவிரி நன்னீர் சிறப்பு

















