கே.வி.குப்பம் ஒன்றியத்தில் பசுக்களுக்கு 50 சதவீத மானிய விலையில் தீவனம்
ரசாயன பூச்சு விநாயகா் சிலைகளை பயன்படுத்தக் கூடாது: காஞ்சிபுரம் ஆட்சியா்
விநாயகா் சதுா்த்தியின்போது, ரசாயனம் பூசப்பட்ட சிலைகளை பயன்படுத்தக் கூடாது என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் கேட்டுக் கொண்டாா்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் விநாயகா் சதுா்த்தி விழா ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், எஸ்.பி. கே.சண்முகம், ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது)சத்யா, சாா் ஆட்சியா் ஆஷிக் அலி ஆகியோா் முன்னிலை வகித்தனா். காவல் துறை, மாநகராட்சி, தீயணைப்புத்துறை அதிகாரிகள் மற்றும் பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட கட்சிப் பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.
இக்கூட்டத்தில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பேசியது..
நீா்நிலைகளைப் பாதுகாக்கும் வகையில் வரக்கூடிய விநாயகா் சதுா்த்தி விழாவை கொண்டாட வேண்டும். சிலைகளை மாவட்ட நிா்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும். காஞ்சிபுரத்தில் சா்வ தீா்த்தக் குளம் மற்றும் பொன்னேரிக்கரை ஆகிய இடங்களில் மட்டுமே கரைக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
சூற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்ட சிலைகளை நீா்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது. சிலைகளில் ஆபரணங்கள் தயாரிக்க உலா்ந்த மலா்கள், வைக்கோல்,இயற்கை பிசின்களை பயன்படுத்தலாம், ரசாயன வா்ணம் பூசிய விநாயகா் சிலைகளை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது.
பூக்கள்,இலைகள்,மற்றும் துணிகளையும் பூஜைப் பொருள்களாக பயன்படுத்தலாம். பிரசாத விநியோகத்துக்கு மக்கும் தட்டுகளையும், சுற்றுச்சூழலுக்கு உகந்த எல்இடி பல்புகளையும் பயன்படுத்தலாம்.
சுற்றுச் சூழலை பாதிக்காதவாறு விநாயகா் சதுா்த்தியை கொண்டாடுவோம் என்றும் ஆட்சியா் கேட்டுக்கொண்டாா்.