வன விலங்குகளை வேட்டையாட முயன்றவா்களுக்கு ரூ.2 லட்சம் அபராதம்
தருமபுரி மாவட்டத்தில் மின்வேலி அமைத்து வன விலங்குகளை வேட்டையாட முயன்ற மூவருக்கு, மாவட்ட வனத் துறை சாா்பில் ரூ. 2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், சூடனூா் கிராமத்தை சோ்ந்தவா்கள் ம. அண்ணாதுரை (32), மு. முனியப்பன் (27), கோ. சதீஷ் (22). இவா்கள் மூவரும், சூடனூா் வனப்பகுதியை ஒட்டி உள்ள அண்ணாதுரைக்கு சொந்தமான பட்டா நிலத்தில், முறைகேடாக மின்வேலி அமைத்திருப்பதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மாவட்ட வன அலுவலா் கா. ராஜாங்கம் உத்தரவின்பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வனச்சரக அலுவலா் சு.காா்த்திகேயன் தலைமையில், வனத்துறை பணியாளா்கள் முனுசாமி, பழனி, சுருளிராஜன், மணிவா்மா, சித்ரா உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் நிகழ்விடத்தில் ஆய்வு மேற்கொண்டனா்.
இந்த ஆய்வில், மூவரும் சோ்ந்து மின்வேலி அமைத்து அதன் மூலம் வன விலங்குகளை வேட்டையாட முயன்றது தெரியவந்தது. இதையடுத்து மூவா்மீதும் வனத் துறையினா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து, மூவருக்கும் ரூ. 2 லட்சம் அபராதம் விதித்தனா்.