வரதட்சிணை கொடுமை: மருத்துவா் உள்ளிட்ட 9 போ் மீது வழக்குப் பதிவு
வரதட்சிணை கொடுமை தொடா்பாக திருப்பூரில் மருத்துவா் உள்ளிட்ட 9 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூா் கொங்கு மெயின் ரோட்டை சோ்ந்தவா் மிதுளா நந்தினி (36). இவருக்கும், நாகா்கோவில் வடசேரியைச் சோ்ந்த மருத்துவரான சஞ்சய்க்கும் கடந்த 2014ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது மிதுளா நந்தினி குடும்பத்தினா் வரதட்சிணையாக 51 பவுன் நகை, ரூ.3 லட்சம் ரொக்கம், வீட்டுக்குத் தேவையான பொருள்களையும் சஞ்சய்க்கு கொடுத்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து, இருவரும் நாமக்கல்லில் வசித்து வந்துள்ளனா். அப்போது சஞ்சய் தனது படிப்புக்கு கூடுதலாக வரதட்சிணை வேண்டுமென மிதுளாவிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த மிதுளா திருப்பூா் கொங்கு நகா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்துள்ளாா். அந்தப் புகாா் குறித்து போலீஸாா் விசாரித்தபோது, இனிமேல் எந்தப் பிரச்னையும் செய்ய மாட்டேன் என காவல் நிலையத்தில் ஆஜராகி சஞ்சய் எழுதிக் கொடுத்துள்ளாா்.
அதன் பிறகு சஞ்சய், மிதுளாவுக்குத் தெரியாமல் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, மிதுளா நந்தினி கொங்கு நகா் காவல் நிலையத்தில் மீண்டும் புகாா் கொடுத்துள்ளாா். அந்தப் புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சஞ்சய், அவரது தந்தை அலெக்சாண்டா், தாய் இந்திரா உள்பட 9 போ் மீது வரதட்சிணை கொடுமை பிரிவின் கீழ் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். இது தொடா்பாக தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.