கிருஷ்ணகிரி தம்பதிக்கு விற்கப்பட்ட குழந்தை மீட்பு - சென்னையைச் சேர்ந்த பெற்றோர் ...
'விஜய் சந்திப்பு குறித்து கேள்வி கேட்காத ராகுல்' டெல்லியில் நடந்தது என்ன? - பிரவீன் சக்கரவர்த்தி
ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று குரல் எழுப்பியதுடன், தவெக தலைவர் விஜய்யையும் தனிப்பட்ட முறையில் சந்தித்து தமிழக அரசியலில் பேசுபொருளானார் காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தரவுப் பிரிவு மற்றும் புரொபஷனல்ஸ் காங்கிரஸ் தலைவருமான பிரவீன் சக்கரவர்த்தி.
திமுக- காங்கிரஸ் கூட்டணியில் தொடர்ந்து புகைச்சல் ஏற்படுவதற்கு தொடர்ந்து அவர் தெரிவித்த கருத்துகளும் ஒரு காரணம். சமீபத்தில் டெல்லியில் கூட்டணி தொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகும், கூட்டணி குறித்த சர்ச்சை ஓயவில்லை. இந்நிலையில், பிரவீன் சக்கரவத்தி அவர்களை சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்....
``செப்டம்பர் மாதம் விகடனுக்கு அளித்த பேட்டியில்தான், `காங்கிரஸ் கட்சிக்கு அதிக சீட் மற்றும் ஆட்சியில் பங்கு வேண்டும்' என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தீர்கள். அதைத் தொடர்ந்து, அந்த கோரிக்கையை காங்கிரஸில் பலரும் முன்வைத்தனர். அதனால், காங்கிரஸ் - திமுக கூட்டணியில் பெரும் சலசலப்பு உருவானது. சமீபத்தில் டெல்லியில் நடந்த கூட்டத்திற்குப் பிறகு, அந்த நிலைப்பாட்டில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா?’’
`` அது தமிழக காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்துவதற்காக கட்சித் தொண்டர்கள் வைக்கும் கோரிக்கை. அவர்களுடைய உரிமை அது. கடந்த ஜனவரி 17-ம் தேதி டெல்லியில் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளை கட்சியின் தேசியத் தலைமை தனித்தனியாக கருத்துக் கேட்டார்கள். 4 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த கூட்டத்தில், மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால் மற்றும் மேலிடப் பொருப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஆகியோர் முன்னிலையில் ஒவ்வொருவரும் தங்களது கருத்துக்களைச் சுதந்திரமாகப் பதிவு செய்தனர். எல்லோருடைய கருத்துக்களையும் கேட்டுக்கொண்ட தலைமை இனிமேல் முடிவு எடுப்பார்கள்.’’

``தேசிய தலைமை ஒவ்வொரு நிர்வாகிகளையும் தனித்தனியாக அழைத்து கருத்துக் கேட்டதன் பின்னணி என்ன?’’
``அனைவர் முன்னிலையிலும் கருத்துக் கேட்கும்போது, தங்களுடைய உண்மையான கருத்துக்களை சொல்வதற்கு அவர்கள் தயங்கலாம். நாம் சொல்லும் கருத்து சிலருக்கு ஆதரவாகவும் சிலருக்கு எதிராகவும் இருக்கும் என்ற பயம் அவர்களுக்கு இருக்கும். உண்மையான கருத்துக்களை எவ்வித அச்சமுமின்றி, வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே இந்தத் தனிப்பட்ட சந்திப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டன. கடந்த 30 - 40 ஆண்டுகளில் இதுபோன்று தனிப்பட்ட முறையில் கருத்து கேட்பது இதுவே முதல் முறை.’’
``தவெக தலைவர் விஜய்யை நீங்கள் சந்தித்தது குறித்து ராகுல் காந்தியோ அல்லது மற்ற தேசிய தலைவர்களோ உங்களிடம் கேள்வி எழுப்பினார்களா?’’
``இல்லை, ஒரு வார்த்தை கூட நான் விஜய்யை சந்தித்தது குறித்து என்னிடம் கேட்கப்படவில்லை.”

``அப்படியென்றால் அவர்களுடைய சம்மதத்துடன்தான் விஜய்யை சந்தித்தீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா?”
``நமக்கு 1947- லிலேயே சுதந்திரம் கிடைத்துவிட்டது. யார் வேண்டுமானாலும் யாரையும் சந்திக்கலாம். நான் டெல்லியில் பலபேரை சந்திக்கிறேன். ஆனால், யாருமே இப்படி வந்து, ஏன் சந்தித்தீர்கள், எதற்கு சந்தித்தீர்கள் என்று கேட்பதில்லை. காங்கிரஸ் கட்சியின் பண்பாடு பற்றி தமிழ்நாட்டில் புரிதல் இல்லை. காங்கிரஸ் கட்சியில் எல்லோருக்கும் பேச்சுரிமையும், கருத்துரிமையும் யாரைச் சந்திக்க வேண்டும் என்ற சுதந்திரமும் உண்டு. இந்திய மக்களுக்கே பேச்சுருமையும் சுதந்திரமும் வாங்கிக்கொடுத்த கட்சி இந்த காங்கிரஸ் கட்சி. காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் அந்த உரிமை இருக்காதா?”
``டெல்லி கூட்டத்தில், கூட்டணி குறித்து பொதுவெளியில் பேச வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டதாகச் சொல்லப்பட்டது. ஆனால், தவெக-வுக்கு 'விசில்' சின்னம் ஒதுக்கப்பட்டதும், அதுகுறித்து நீங்கள் X தளத்தில் போட்ட பதிவு பெரும் சர்ச்சையானதே?’’
``நான் என்னுடைய பதிவை ஆங்கிலத்தில் நகைச்சுவை தொனியில் பதிவு செய்தேன். ஒரு கட்சிக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதுதான் அன்றைக்கு செய்தியாக இருந்தது. அதனால் அதனை மையப்படுத்தி நகைச்சுவையாக ஒரு பதிவு போட்டேன். அரசியலில் எப்போதும் சீரியஸாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை; நாங்களும் அவ்வப்போது ஜோக் அடிக்கிறோம். அதுல என்ன இருக்கு?”
``விஜய்க்கு கூடும் கூட்டம் வெறும் ரசிகர்கள் அல்ல, அவர்கள் தொண்டர்கள். விஜய் சினிமா டிக்கெட் விற்க வருவதாக நினைத்து அவர்கள் கூடவில்லை. அவரை அரசியல் தலைவராகப் பார்த்துதான் கூடுகிறார்கள் என்று கரூர் சம்பவத்துக்கு கூறியிருந்தீர்கள். கரூர் சம்பவத்துக்குப் பிறகு, தவெகவின் செயல்பாட்டை எப்படி பார்க்கிறீர்கள்?
``விஜய்க்கு கூடுவதெல்லாம் ரசிகர் கூட்டம். அதெல்லாம் வாக்காக மாறாது என்று எழுந்த கருத்துக்கு என்னுடைய ஆராய்ச்சிப்படி, அவர்கள் ரசிகர்கள் இல்லை. நிச்சயமாக வாக்காளர்கள்தான் என்று கூறினேன். இப்போது அதை எல்லோரும் ஒப்புக்கொள்கிறார்களா இல்லையா? இது ஒன்றும் ரகசியமே கிடையாது. இப்போது அவர்களுக்கு பல தடங்கல்கள் இருக்கலாம். ஆனால், எங்களுடைய பார்வையில் அவர்கள் இன்னும் ஒரு அரசியல் சக்தியாகத்தான் இருக்கிறார்கள்”
``ஆனால், தவெக ஒரு அரசியல் கட்சியாக தொடர்சியான செயல்பாட்டினை வெளிப்படுத்தாமல் அவ்வப்போது அமைதியாக இருக்கிறார்கள். அது அவர்களுடைய அரசியல் எதிர்காலத்துக்கே நல்லதல்ல. தொடர்ந்து செயல்பட வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. அதுகுறித்த உங்கள் பார்வை என்ன?”
``அதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஒரு அரசியல் கட்சியென்றால் தேர்தலுக்கு முன்பு எதாவதொரு அரசியல் செயல்பாட்டில் தொடர்ச்சியாக ஈடுபடவேண்டும். ஆனால், இப்படியான ஒரு சூழல் எவ்வளவு தூரம் அவர்கள் செல்வாக்கை எந்தளவுக்கு பாதித்திருக்கிறது? அவர்கள் வளர்ந்துகொண்டிருக்கிறார்களா, நின்றுவிட்டார்களா அல்லது அவர்களுக்கான ஆதரவு குறைந்திருக்கிறதா அது எனக்குத் தெரியாது. ஆனால், உங்கள் கேள்வி சரியானது.”

``ஜனநாயகன் திரைப்படத்துக்கு ஆதரவாக, காங்கிரஸ் கட்சியில் பலர் குரல் கொடுத்துள்ளார்கள். குறிப்பாக, ராகுல் காந்தியே ஆதரவாக பதிவிட்டிருக்கிறார். ஆனால், விஜய் அதுகுறித்து வாய்திறக்கவே இல்லை. அதை எப்படி பார்க்கிறீர்கள்?’’
``இது ஜனநாயகனுக்காகவோ அல்லது ஒரு தனிப்பட்ட நடிகருக்காகவோ செய்தது கிடையாது. நம் நாட்டில் உள்ள அமைப்புகள் அரசியல் சார்பில்லாமல் தனிப்பட்ட வகையில் செயல்பட வேண்டும். பொங்கல், தீபாவளிக்கான பட ரிலீஸ் என்பது இங்கு எவ்வளவு பெரிய கொண்டாட்டமான விஷயம் என்பது தெரியும். ஆனால், இந்த ஒரு படத்துக்கு மட்டும் ஏன் சென்சார் போர்டு சான்றிதழ் கொடுக்காமல், தடுத்தார்கள் என்பது கேள்வி. சென்சார் போர்டை எப்படி பயன்படுத்துகிறார்கள்? என்பது குறித்த கேள்விதான் ராகுல் காந்தியுடைய குரல். அது யாராக இருந்தாலும், அநீதி இழைக்கப்பட்டால் காங்கிரஸ் குரல் கொடுக்கும்.”















