National Awards: "தனுஷூக்கு அவ்வளவு புத்திசாலித்தனம் கிடையாது!" - கஸ்தூரி ராஜா ப...
`வீழ்ச்சியில் இருந்த கணவரை மீட்டேன்' - கட்டுமானத்துறையில் கலக்கும் மும்பை தமிழ்ப்பெண் ராமலம்மாள்
பெண்கள் இப்போது அனைத்து துறைகளிலும் சாதித்து வருகின்றனர். ஆனால் கட்டுமானம் மற்றும் ஆட்டோமொபைல் போன்ற சில துறைகளில் மட்டும் பெண்கள் ஆதிக்கம் பெரிய அளவில் இல்லாமல் இருக்கிறது. தங்களாலும் சாதிக்க முடியும் என்று மும்பையை சேர்ந்த ராமலம்மாள் என்ற தமிழ் பெண் தெரிவித்துள்ளார்.
மும்பையில் உள்ள நவிமும்பை பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக கட்டுமானத்துறையில் ஈடுபட்டு வரும் ராமலம்மாள் மற்றவர்களைபோல் கட்டிடங்கள் கட்டும் பணியில் ஈடுபடாமல் மும்பையில் சாலைகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அவரை நேரில் சந்தித்து இத்தொழிலுக்கு வந்த அனுபவம் குறித்து பேசினோம்.
அவர் கூறுகையில், ``எனக்கு திருமணமாகி வந்த போது எனது கணவர் ஒரு சாதாரண தொழிலாளர் சப்ளையராக மட்டும் வேலை செய்து வந்தார்.
ஒரே நேரத்தில் பல இடங்களில் வேலை நடந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு இடத்திலும் வேலையை கவனிக்க ஒரு பொறுப்பாளரை எனது கணவர் நியமித்து இருந்தார். ஆனால் பொறுப்பாளர்கள் அனைவரும் அந்த தொழிலை தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டனர்.

இதனால் எனது கணவர் தோல்வியை நோக்கி சென்று கொண்டிருந்தார். உடனே எனது கணவருக்கு துணையாக நானும் இத்தொழிலில் இறங்க ஆரம்பித்தேன். அதோடு நாங்கள் ஏற்கனவே இருந்த இடத்தை காலி செய்துவிட்டு நவிமும்பை பகுதியில் குடியேறினோம்.
அங்கு எனது கணவர் மாநில அமைச்சர் கணேஷ் நாயக் மற்றும் அவரது குடும்ப நிறுவனத்தில் வேலை செய்து அவர்களின் நம்பிக்கையை பெற்றார். படிப்படியாக கணேஷ் நாயக் துணையோடு சொந்தமாக வேலைகளை எடுத்து செய்ய ஆரம்பித்தார். நவிமும்பை பகுதியில் சாலைகள் அமைக்கும் பணியில் ஈடுபடும் ஒப்பந்தங்களை பெற்று அப்பகுதியில் அந்த வேலையை செய்து வந்தோம். ஏற்கனவே எனது கணவர் சூபர்வைசர்களை நம்பி ஏமாந்து இருந்ததால் இம்முறை நானும், எனது கணவரும் மட்டும் வேலை நடக்கும் இடத்தில் நின்று வேலையை கவனித்துக்கொண்டோம்.
1994ம் ஆண்டே சாலைகள் அமைக்க தேவையான தார் மிக்ஸிங் தொழிற்சாலையை ஆரம்பித்தோம். அதன் பிறகு சிமெண்ட் கலவை தயாரிக்கும் தொழிற்சாலையும் தனியாக ஆரம்பித்துள்ளோம். தினமும் குழந்தைகளை கூட சரியாக கவனிக்க நேரம் இல்லாமல் எந்நேரமும் எதாவது ஒரு இடத்தில் சாலையோரம் நின்று கொண்டு வேலையை கவனித்துக்கொண்டிருந்தேன்.
எனது கணவர் வேறு ஒரு இடத்தில் நிற்பார். இன்றைக்கு எங்களுக்கு மகாராஷ்டிரா முழுக்க சாலை கட்டுமானப்பணிகள் நடக்கிறது. இதற்காக மும்பை புறநகர் பகுதியில் சிமெண்ட் கலவை, தார் கலவை தயாரிக்கும் தொழிற்சாலைகளை தொடங்கி நடத்தி வருகிறோம். அந்த தொழிற்சாலையை எங்களது மருமகன் பொறுப்பில் விட்டு இருக்கிறோம்'' என்றார்
``தினமும் 8 மணி நேரத்திற்கும் மேல் சாலையோரம் நின்று கொண்டு வேலையை கவனிப்பதில் எந்தமாதிரியான சவால்களை சந்திக்கிறீர்கள்" என்று கேட்டதற்கு, ``எனக்கு வீட்டு வேலைகள் செய்வதை விட களத்தில் இறங்கி இது போன்று வேலை செய்வதுதான் அதிகமாக பிடிக்கும். அதுதான் எனக்கு மனதிருப்தியை கொடுக்கிறது. ஆரம்பத்தில் சாலையில் நின்று கொண்டு இது போன்ற வேலையை செய்வது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆனால் போகப்போக இந்த வேலையை முழுமையாக கற்றுக்கொண்டேன். அதனால் இந்த வேலையை செய்வதில் எனக்கு எந்த விதமான மனச்சோர்வும் வரவில்லை.
நான் இந்த தொழிலில் எனது கணவருக்கு துணையாக இறங்காமல் இருந்திருந்தால் எனது கணவரால் இந்த அளவுக்கு வளர்ச்சியடைந்து இருக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் அவரை இன்றைக்கு மிகவும் உயர்ந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறேன் என்று நினைக்கும் போது எனக்கு வெயில், மழை பெரிதாக தெரியவில்லை. இப்போது எங்களோடு சேர்ந்து இந்த வேலையை எங்களது மகனும் கவனித்து வருகிறான். ஏ.எம்.சுவாமி கன்ஸ்ட்ரக்ஷன் என்ற நிறுவனத்தில் நானும் இயக்குனராக இருந்து எனது கணவரின் பாதிவேலையை நான் வாங்கி செய்து கொண்டிருக்கிறேன்.
இதனால் எனது கணவரால் இன்றைக்கு எந்த வேலை நடந்தாலும் அந்த வேலையை என்னிடம் விட்டுவிட்டு செல்ல முடியும். சாதாரணமாக லட்சங்களில் புரண்டுகொண்டிருந்த நாங்கள் இன்றைக்கு கோடிகளில் புரண்டு கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு எங்களது கடின உழைப்புதான் காரணம். நவிமும்பை மாநகராட்சி நிர்வாகமும் எங்கள் மீது முழு அளவில் நம்பிக்கை வைத்திருக்கிறது.
வேறு சில ஒப்பந்ததாரர் நிராகரித்த வேலையையும் நாங்கள் எடுத்து திறம்பட முடித்து கொடுத்துக்கொண்டிருக்கிறோம். இப்போது ஆண்டுக்கு ரூ.100 கோடி மதிப்பிலான வேலையை எடுத்து செய்து கொண்டிருக்கிறோம். இதனை மகாராஷ்டிரா முழுக்க விரிவுபடுத்த திட்டமிட்டு இருக்கிறோம்''என்று தெரிவித்தார்.
ராமலம்மாளின் இந்த பணிகளுக்காக பல்வேறு விருதுகள் கிடைத்து இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராமலம்மாவின் கணவர் முனியசாமியிடம் இது குறித்து பேசியபோது, ``நான் 1977ம் ஆண்டு மும்பைக்கு வந்துவிட்டேன். ஆரம்பத்தில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றினேன். அதன் பிறகு துணை ஒப்பந்ததாரராக சேர்ந்து வேலைக்கு ஆட்களை அனுப்பினேன். இதில் நான் சரியாக கவனிக்காத காரணத்தால் தொழில் நலிவடைந்து கொண்டிருந்தது.
எனது மனைவிதான் இந்த தொழிலில் நான் நஷ்டமடைவதை தடுத்து நிறுத்தி எனக்கு அனைத்து வகையிலும் உதவி செய்தார். அவர் மட்டும் இல்லாமல் போயிருந்தால் நான் இத்தொழிலில் இந்த அளவுக்கு சாதித்து இருக்க முடியாது. என்னோடு சேர்ந்து எப்போதும் வேலை நடக்கும் இடத்தில் நின்று கொண்டிருப்பார். அவர் கொடுத்த ஒத்துழைப்பு மற்றும் அவரின் பங்களிப்பால்தான் எங்களால் இந்த தொழிலில் இந்த அளவுக்கு சாதிக்க முடிகிறது''என்று தனது மனைவியை வெகுவாக பாராட்டினார்.
















