'மன்னித்துவிடுங்கள்; தர்மேந்திர பிரதானைக் காப்பாற்றுவதற்காக.!' - அபிஜித் தீப்கே ...
சென்னை: ரௌடி அஜய் ஓட ஓட நடுரோட்டில் விரட்டி கொலை; தப்பிய கும்பலுக்கு போலீஸ் வலை; என்ன நடந்தது?
சென்னை ஓட்டேரி, எஸ்.வி.எம்.நகரைச் சேர்ந்தவர் பலி ஆடு என்கிற அஜய் (20). இவர் மீது தலைமை செயலக காலணி காவல் நிலையத்தில் கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அஜய், நேற்று திருநங்கை ஒருவரை பைக்கில் அழைத்துக் கொண்டு மூலகொத்தளம் குடிசைமாற்று வாரிய குடியிருப்புக்குச் சென்றார். பின்னர், திருநங்கையை வீட்டில் இறக்கி விட்டு விட்டு பைக்கில் திரும்பினார். இந்தச் சமயத்தில் அஜய் சென்ற பைக்கை ஒரு கும்பல் பின்தொடர்ந்து வந்தது.
அடுத்த சில நிமிடத்தில் அஜய்யைச் சுற்றி வளைத்த அந்தக் கும்பல் சரமாரியாக வெட்டியது. அதனால் சுதாரித்துக் கொண்ட அஜய், அந்தக் கும்பலிடமிருந்து தப்பி நடுரோட்டில் ஓட்டம் பிடித்தார். ஆனாலும் அந்தக் கும்பல் ஓட ஓட அஜய்யை விரட்டி சரமாரியாக வெட்டிச் சாய்த்தது. இதில் நிலைதடுமாறி ரௌடி அஜய் கீழே விழுந்தார்.

பின்னர் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இந்தக் கொடூர சம்பவம் குறித்து பொதுமக்கள், வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், அஜய்யை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே அஜய் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து கொலை வழக்குப் பதிவு செய்த போலீஸார், அஜய்யைக் கொலை செய்த கும்பல் குறித்து விசாரித்து வருகின்றனர். சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்து கொலையாளிகளைத் தேடி வருகிறார்கள்.













