செய்திகள் :

வெனிசுவேலா மீது அமெரிக்காவின் தாக்குதல் — இலக்கு போதைப்பொருள் கடத்தலா, எண்ணெய் வளமா? | In-depth

post image

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)

வெனிசுவேலாவின் மீது கடந்த ஆகஸ்டிலிருந்து அமெரிக்கா நடத்தி வந்த தாக்குதல்கள் வெள்ளிக்கிழமை(3ம் தேதி) நள்ளிரவுக்கு மேல் , சனிக்கிழமை அதிகாலை, அமெரிக்கப் படைகள் வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் மாளிகையிலேயே அதிரடியாகப் புகுந்து அவரையும், அவர் மனைவி சிலியா ஃப்லோரஸையும் கடத்திச் சென்ற காட்சிகளோடு கிளைமாக்ஸை எட்டியிருக்கின்றன.

வெனிசுவேலா அதிபர்

தலைநகர் கேரகாஸில் உள்ள வெனிசுவேலா அதிபர் மாளிகையில் புகுந்த அமெரிக்க அதிரடிப் படைகள், உறக்கத்தில் இருந்த மதுரோவையும், அவர் மனைவியையும், இழுத்துச் சென்று அமெரிக்கப் போர்க்கப்பல் யு.எஸ்.எஸ் ஐவோ ஜிமாவில் ஏற்றி நியுயார்க் கொண்டு செல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நியுயார்க் நீதிமன்றத்தில் ஏற்கனவே மதுரோ மீது போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை அமெரிக்காவுக்கு கடத்தியதாக வழக்குகள் இருக்கின்றன. அந்த வழக்குகளை அவர் எதிர்கொள்ள வேண்டும்.

அமெரிக்காவின் இந்தத் துணிகரச் செயல் சமீபகால சர்வதேச வரலாற்றில் ஒப்புமை இல்லாதது. இராக்கின் அதிபர் சதாம் ஹுசேன் , இராக்கில் 2003ல் அமெரிக்கா தலைமையிலான கூட்டணி நாடுகள் நடத்திய போரை அடுத்து பதவியிலிருந்து இறக்கப்பட்டு, பல மாதங்கள் தலைமறைவாக இருந்தார். பின்னர் அவர் தங்கியிருந்த பதுங்கிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு அமெரிக்கா ஆதரவு பெற்ற இராக்கிய இடைக்கால அரசால் தூக்கிலிடப்பட்டார்.

அதே போல இஸ்லாமாபாத் அருகே அபோதாபாத் என்ற ராணுவ தளங்கள் அமைந்திருந்த நகரில் பதுங்கியிருந்த அல் கயீதா இயக்கத் தலைவர் ஒசாமா பின் லேடன் 2011ல் அமெரிக்க சிறப்புப் படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

ஆனால் நாட்டின் தலைமைப்  பதவியிலிருக்கும் ஒரு  அரசியல் தலைவரை,  அமெரிக்கா  இது போல  ராணுவ பலத்தைப் பிரயோகித்து சிறைப்பிடித்தது ,  மற்றொரு மத்திய  அமெரிக்கா நாட்டில்  நிகழ்ந்திருக்கிறது.  1989ல்   பனாமாவின் சர்வாதிகாரி  மேனுவெல் நொரிகாவை  இப்படித்தான் அமெரிக்கா  வீழ்த்தியது.  

வெனிசுவெலா அதிபர் மதுரோவை சிறைப்பிடித்ததை  கடுமையாக கண்டித்துள்ள வெனிசுவெலா அரசு ,   மதுரோவின் தற்போது  உயிருடன் இருக்கிறாரா  என்பதை அமெரிக்கா உறுதிசெய்யவேண்டும் என்று  கோரியிருக்கிறது.  

ஐநா மன்ற பாதுகாப்புக்  கவுன்சிலையும் அது கூட்ட  வேண்டுகோள்  விடுத்திருக்கிறது.  பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்காவுக்கு உள்ள வெட்டு வாக்கு ( வீட்டோ) அதிகாரத்தை மீறி கவுன்சில்  என்ன செய்ய முடியும் என்று தெரியவில்லை. 

இதே போல , அமெரிக்காவின் இந்த தாக்குதலை,  தென் அமெரிக்காவின் இடது சாரி சார்புள்ள , பிரேசில்,  கொலம்பியா போன்ற நாடுகளும்,  ரஷ்யா,   சீனா போன்ற வழக்கமான  அமெரிக்க எதிர்ப்பு நிலை  எடுக்கும் வல்லரசுகளும்  கண்டித்திருக்கின்றன.  கியுபா கண்டனம் செய்திருக்கிறது.  இரான் கண்டித்திருக்கிறது.   ஐரோப்பிய ஒன்றியமும், பிரிட்டனும். அமைதி கோரி அறிக்கை விட்டிருக்கின்றன.  

அதே சமயத்தில்  வலதுசாரித் தலைவர்களைக் கொண்ட அர்ஜெண்டினா,   இஸ்ரேல் போன்ற நாடுகள்  அமெரிக்காவின் இந்த  நடவடிக்கையை  வரவேற்றிருக்கின்றன.  

வெனிசுவேலாவுக்குள்ளேயே இந்த நடவடிக்கையை  மதுரோவின் பிரதான  எதிர்க்கட்சித் தலைவரும்,   நோபல் அமைதிப் பரிசு பெற்றவருமான மரியா கொரினா  மச்சாதோ வரவேற்றிருக்கிறார். 

வெனிசுவேலாவின் மீது அமெரிக்கா தொடுத்த இந்தப் போருக்கு முக்கிய காரணமாக அமெரிக்கா கூறுவது அமெரிக்காவுக்குள் போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு அமெரிக்கப் பொதுமக்கள் பாதிக்கப்படுவதற்குக் காரணமாக வெனிசுவேலா அதிபர் மதுரோ இருந்தார் என்பதுதான்.

இதைக் காரணம் காட்டி, டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்தது முதல் வெனிசுவேலாவுக்கு எதிரான தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வந்தார்.

அமெரிக்காவுக்குள் கொக்கெயின் போன்ற போதைப் பொருட்கள் தென் அமெரிக்காவிலிருந்தும், மெக்சிகோவிலிருந்தும் கடத்தப்பட்டுவருகின்றன என்பது பல ஆண்டுகளாகவே தெரிந்த விஷயம்தான். இதில் கொலம்பியா, மெக்சிகோ , வெனிசுவேலா போன்ற நாடுகளில் இருந்து இயங்கும் பல கிரிமினல் குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன என்பதும் ஓரளவு ஒப்புக்கொள்ளப்படும் ஒரு உண்மை.

ஆனால் இந்த போதைப் பொருள் கடத்தும் விஷயத்தில் நிக்கோலஸ் மதுரோவுக்கு நேரடி தொடர்பு இருந்ததா என்பது இன்னும் நிரூபணமாகவில்லை என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.

முதல் விஷயம், வெனிசுவெலா ஒரு எண்ணெய் வளமிக்க நாடு. உலகின் எண்ணெய் வளத்தில் சுமார் 17 - 20 சதவீதம் என்ற அளவில் வெனிசுவேலாவில் எண்ணெய் வளம் இருக்கிறது. ஆனாலும், அமெரிக்காவின் பொருளாதாரத்தடைகள் மற்றும் சாவேஸ் தலைமையிலான இடதுசாரி அரசு ஆட்சிக்கு வந்த காலத்திலிருந்து வெனிசுவேலாவின் எண்ணெய்த் துறையில் முதலீடுகள் குறைந்தது போன்ற காரணங்களால் வெனிசுவேலா எண்ணெய் வளம் அதிகம் இருந்தாலும், எண்ணெய் உற்பத்தி என்பது குறைவாகவே இருந்திருக்கிறது.

அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கையை அடுத்து , வெனிசுவேலாவின் எண்ணெய்த் தொழிலில் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் முதலீடு செய்து வெனிசுவேலாவின் எண்ணெய் உற்பத்தி கட்டமைப்பை பலப்படுத்தும் என்று சனிக்கிழமை டிரம்ப் அறிவித்திருக்கிறார். இது அமெரிக்காவின் இந்த போருக்கான ஒரு பகுதி முக்கிய நோக்கத்தைத் தெளிவாக்குகிறது.

இரண்டாவது, கேந்திர அரசியல் செல்வாக்குக்கான நகர்வுகள். வெனிசுவேலாவில் 1999ல் ஹுயுகோ சாவேஸ் தலைமையிலான இடது சாரி ஆட்சி அமைந்ததிலிருந்தே அமெரிக்காவுக்கு வெனிசுவேலா மீது ஒரு கண் விழுந்தது.

சாவேஸ் 2013ல் இறந்த பின்னர் ஆட்சிக்கு வந்த அவரது துணை அதிபர் நிக்கோலஸ் மதுரோ இடது சாரிக் கொள்கைகளை தொடர்ந்தது, அமெரிக்காவுக்கு எரிச்சலை ஊட்டியது. போதைப் பொருள் வர்த்தகம் ஒரு பிரச்சனையாக இருந்தாலும், வெனிசுவேலா, அதன் எண்ணெய்த் துறையில் சீன முதலீடுகளை ஊக்குவித்ததும் அமெரிக்காவின் கோபத்தை அதிகப்படுத்தியது.

தென் அமெரிக்கா மற்றும் வட அமெரிக்கா ஆகிய இரு கண்டங்களும் அமெரிக்காவின் கேந்திர அரசியல் கொல்லைப்புறம் என்பது நீண்ட காலமாக அமெரிக்க நிர்வாகங்கள் கடைப்பிடித்துவரும் கொள்கை. இது 19 ம் நூற்றாண்டின் மன்ரோ சித்தாந்தம் என்பதன் அடிப்படையில் அமைந்தது. இந்தப் பகுதிக்குள் அமெரிக்கக் கண்டங்களுக்கு வெளியே உள்ள பிற நாடுகள் செல்வாக்கு செலுத்துவதை அமெரிக்கா அனுமதிப்பதில்லை. இந்தக் கொள்கையைப் பின்பற்றித்தான், 1980களிலிருந்தே இப்பகுதிகளில் பல சர்ச்சைக்குரிய ஆட்சி மாற்றத்துக்கான தலையீடுகளை அமெரிக்கா நிகழ்த்தி வந்திருக்கிறது.

வெனிசுவேலாவின் அதிபர் மதுரோவைக் குறிவைத்து அமெரிக்கா கடந்த பல ஆண்டுகளாகவே பல சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. மதுரோவின் கைது செய்ய உதவும் தகவல் தருபவர்களுக்கு அமெரிக்கா 15 மிலியன் டாலர் பரிசுத் தொகை அறிவித்திருந்தது. அது சமீபத்தில் 50 மிலியன் டாலர் என்று உயர்த்தப்பட்டது.

டிரம்ப்பின் இந்த நடவடிக்கையின் பின்னால் மூன்றாவதாக ஒரு காரணமும் இருக்கலாம் என்ற கருத்தும் இருக்கிறது.

வெனிசுவேலாவின் அரசியல் சூழலால் நெருக்கடிக்குள்ளாகி ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக பிற அமெரிக்க நாடுகளில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். அமெரிக்காவில் மட்டும் சுமார் 7 லட்சம் வெனிசுவேலா அகதிகள் இருப்பதாக சில கணிப்புகள் கூறுகின்றன.

மதுரோவின் துணை அதிபராக இருக்கும் டெல்சி ரோடறிகஸ் அவருக்கு அடுத்து அதிபராக வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அவர் அமெரிக்காவுடன் தொடர்ந்து மோதல் போக்கைக் கடைப்பிடிப்பாரா அல்லது எண்ணெய்த் துறையில் அமெரிக்க முதலீட்டை அனுமதித்து அமெரிக்காவுடன் சமாதானத்தை “வாங்குவாரா” என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயம்.

ஆனால் இந்த நடவடிக்கைக்குப் பின்னர் சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், வெனிசுவேலாவில் நியாயமான மாற்றம் வரும் வரை, வெனிசுவேலாவை அமெரிக்காவே கட்டுப்பாட்டில் எடுத்து நடத்தும் என்று அறிவித்திருக்கிறார்.

இன்னொரு விஷயம், மதுரோவின் ஆதரவாளர்கள், மற்றும் வெனிசுவேலாவில் பிற கட்சி ஆதரவாளர்களின் நிலைப்பாட்டைத் தாண்டி, பொதுமக்கள் எப்படி இந்த அமெரிக்க ராணுவத் தலையீட்டைப் பார்க்கிறார்கள் என்பது முக்கியமானது.

கடந்த ஆண்டு ( 2025) நடந்த தேர்தலில் மதுரோ மூன்றாவது முறையாக வென்றிருந்தாலும், அது எதிர்க்கட்சிகள் புறக்கணித்த தேர்தல் என்பதும், சுமார் 42% வாக்காளர்களே வாக்குகளைப் பதிவு செய்திருந்தனர் என்பதும், அவர் வெற்றியின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியிருந்தன.

ஆனால் அவருக்கு இன்னும் ஒரு குறிப்பிடத்தக்க அளவு ஆதரவு இருக்கத்தான் செய்கிறது. அவரது விசுவாச ஆதரவாளர்களின் எதிர்வினை எப்படி இருக்கும் என்பது கவனிக்கவேண்டிய விஷயம்.

வெனிசுவேலாவின் வீதிகளில் இறங்கி பொதுமக்கள் அமெரிக்காவுக்கு எதிராக போராட்டம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அது அமெரிக்கா இராக்கில் எதிர்கொண்டது போன்ற எதிர்பாராத விளைவுகளை உருவாக்கலாம்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை ரஷ்யா, சீனா போன்ற பிற வல்லரசுகளையும், தங்கள் பிராந்தியங்களில் இதே போல “வல்லான் வகுத்ததே வாய்க்கால்” என்ற போக்கை கடைப்பிடிக்க ஊக்குவிக்கலாம். குறிப்பாக ரஷ்யா தனது யுக்ரெயின் போர் பற்றி மேலை நாடுகள் கண்டனத்தை, அமெரிக்காவின் வெனிசுவேலா தாக்குதலை உதாரணம் காட்டியே நிராகரிலாம். அதே போல, சீனாவின் ஷி ஜின்பிங்கும், கடந்த வாரம்தான் தைவானைச்சுற்றியுள்ள கடற்பரப்பில் சீனாவின் படைகள் ஒத்திகை நடத்த உத்தரவிட்டிருந்தார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை அடுத்து சீனாவும் இதே போல தைவானின் மீது படையெடுத்தால் எந்த அளவு அதை அமெரிக்காவால் எதிர்க்க முடியும் என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.

பொங்கல் பரிசுத் தொகை: ``திமுக அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிறது" - அன்புமணி ராமதாஸ் காட்டம்

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு சார்பில் ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஸ்டாலின்இந்நிலையில், தமிழ்நா... மேலும் பார்க்க

வெனிசுலா அதிபர் சிறைப்பிடிப்பு: கண்டனமும் பேச்சுவார்த்தை அழைப்புகளும்; உலக நாடுகள் சொல்வது என்ன?

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மாதுரோவை அமெரிக்கா சிறைப்பிடித்ததற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்குப் பல நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.ரஷ்யா - "வாஷிங்டனின் இந்த முடிவு கண்டனத்திற்குரியது. வாஷிங்டன் கூற... மேலும் பார்க்க

Nicolas Maduro: `கிடாரிஸ்ட், பேருந்து ஓட்டுநர், வெனிசுலா அதிபர்' - யார் இந்த நிக்கோலஸ் மதுரோ?

தென் அமெரிக்க நாடான வெனிசுலா எண்ணெய் வளம் மிகுந்த நாடு. எண்ணெய் மூலம் பெறும் லாபத்தை போதை, தீவிரவாதம், ஆள் கடத்தல், கடத்தல்களுக்கு வெனிசுலா பயன்படுத்துகிறது என்று அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது.அதனா... மேலும் பார்க்க