Trump: `அமைதிக்கான பரிசு' - ட்ரம்ப் மகிழ்ச்சி; நோபல் பரிசு மிஸ் ஆனாலும் FIFA ஆறு...
'வேட்பாளரையும் கடன் கேட்கும் காங்கிரஸ்’ - அமைச்சர் தொகுதிக்கு திமுக, காங்கிரஸ் குஸ்தி
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்துப் பேசுவதற்காகக் கிரிஷ் சோடங்கர் தலைமையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா, சட்டமன்றக் காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோரைக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்தக் குழுவினர் சில நாட்களுக்கு முன் முதலமைச்சர் ஸ்டாலினைச் சந்தித்து சட்டமன்றத் தேர்தலில் இந்த முறை 39 தொகுதிகளைக் காங்கிரஸுக்கு ஒதுக்கும்படி கேட்டதாகத் தகவல் வெளியானது. அதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் வசம் உள்ள விளவங்கோடு, குளச்சல், கிள்ளியூர் ஆகிய மூன்று தொகுதிகளுடன் கூடுதலாகத் தி.மு.க வசம் உள்ள பத்மநாபபுரம் தொகுதியையும் காங்கிரஸ் கேட்பதாகத் தகவல் வெளியானது.
பத்மநாபபுரம் தொகுதி எம்.எல்.ஏ-வான மனோ தங்கராஜ் இப்போது பால்வளத்துறை அமைச்சராக உள்ளார். தி.மு.க அமைச்சரின் தொகுதியைக் காங்கிரஸ் கேட்டதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதற்கிடையே கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தி.மு.க மகளிர் அணி அமைப்பாளர் நாஞ்சில் சிபி தனது முகநூல் பதிவில், "காங்கிரஸ் தி.மு.க-விடம் தொகுதிகள் கேட்டதோடு வேட்பாளர்களையும் சேர்த்துக் கடனாகக் கேட்டதாகத் தகவல்" என்று கிண்டலடித்திருந்தார்.
அதற்குப் பின்னூட்டமிட்ட தி.மு.க ஆதரவாளர்கள், "காங்கிரசுக்கு 25 தொகுதிகள் போதும். கழக உடன்பிறப்புகள்தான் அவர்களைத் தூக்கிச் சுமக்கணும்" என்பதுபோன்று காங்கிரஸைக் கலாய்த்துப் பதிவிட்டிருந்தனர். இதனால் கொந்தளித்த காங்கிரஸ் நிர்வாகிகள் தி.மு.க-வை விமர்சித்துச் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

நாகர்கோவில் நகர காங்கிரஸ் முன்னாள் தலைவர் அலெக்ஸ் ஜோசப், "ஜனதா தளம் கட்சியில் இருந்து தி.மு.க இறக்குமதி செய்த நபர்தான் மனோ தங்கராஜ் என்பதை மறக்க வேண்டாம். தனியாகப் போட்டியிட்டு டெப்பாசிட் இழந்ததை மறக்கலாமா?" என்று பதிவிட்டிருந்தார்.
திருவட்டார் கிங்சிலி தோமஸ் என்பவர் முகநூலில், "வெற்றிபெற வாய்ப்பு உள்ள நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி தொகுதிகளிலேயே உங்களால் ஜெயிக்க முடியவில்லை" என்று பதிவிட்டிருந்தார். மேலும், காங்கிரஸைச் சேர்ந்த பெகின் ஜெ.எம் என்பவர், "பத்மநாபபுரம் தொகுதியில் போட்டியிடத் தி.மு.க-வில் ஆள் இல்லாததால்தான் கிள்ளியூர் தொகுதியைச் சேர்ந்த ஒருவரைப் பத்மநாபபுரம் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தியது தி.மு.க..." என்று பதிவிட்டுக் கிள்ளியூர் தொகுதியைச் சேர்ந்த மனோ தங்கராஜ் பத்மநாபபுரம் தொகுதியில் எம்.எல்.ஏ-வாக இருப்பதாகக் கிண்டலடித்திருந்தார்.
தி.மு.க மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் முகநூலில் மோதிக்கொள்வது கூட்டணியைப் பலவீனப்படுத்தும் என்ற கருத்தும் எழுந்துள்ளது.

இதுபற்றி நம்மிடம் பேசிய தி.மு.க மாவட்டப் பிரதிநிதி ஐ.ஜி.பி ஜாண் கிறிஸ்டோபர், ``கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளில் விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 2 தொகுதிகள் காங்கிரஸுக்கு ஒதுக்கப்படுவது வழக்கம். பத்மநாபபுரம் தொகுதி மட்டுமே தி.மு.க-வுக்கு ஒதுக்கப்படுகிறது. இந்தத் தொகுதியில் கடந்த நான்கு முறை தொடர்ச்சியாகத் தி.மு.க வென்றுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தி.மு.க காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது.
கூட்டணி குறித்தும், தொகுதிகள் குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்ல முடிவுகளை எடுப்பார். எனவே, யூகங்கள் அடிப்படையில் வெளியாகும் தகவல் குறித்து முகநூலில் பதிவிட்டு விவாதத்தைக் கிளப்புவது சரியல்ல" என்றார்.

காங்கிரஸ் மாவட்டத் துணைத் தலைவர் மகேஷ் லாசர் கூறுகையில், "கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி வலுவாக உள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் இருப்பதால்தான் பத்மநாபபுரம் தொகுதியில் தி.மு.க தொடர்ந்து வெற்றிபெற்று வருகிறது. தி.மு.க கட்சிப் பதவியில் இருக்கும் நிர்வாகிகள் முகநூலில் கவனமாகப் பதிவுகளைப் போட வேண்டும். கூட்டணிக் கட்சியை விமர்சித்துப் பதிவுபோடுபவர்களைத் தி.மு.க தலைமை கண்டிக்க வேண்டும்" என்கிறார்.















