"என் கல்யாணத்தை பத்தி யாராச்சும் கேட்டா Irritating-ஆ இருக்கு" - நடிகை மும்தாஜ் B...
ஸ்டாலின் சந்தித்த முதல் தேர்தலே, தோல்வி தான் தெரியுமா?! | Vote Vibes 05
தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். இவர் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகன். இவருக்கு அரசியல் என்ட்ரி ஈசியாக கிடைத்திருக்கும் என்று தானே நினைக்கிறீர்கள்?
ஆம்... நீங்கள் நினைப்பது உண்மை தான். இவருக்கு எளிதாக அரசியல் என்ட்ரி கிடைத்துவிட்டது. ஆனால், இவருக்கு மக்களிடம் அவ்வளவு எளிதாக வெற்றி கிடைத்துவிடவில்லை. போட்டியிட்ட முதல் சட்டமன்ற தேர்தலிலேயே மக்களுக்கு இவருக்கு கொடுத்த பரிசு, 'தோல்வி'.

முதல் அடி
பள்ளிக்காலத்திலேயே தன்னுடைய கோபாலபுர நண்பர்களை ஒன்றிணைத்து இளைஞர் திமுக என்கிற அமைப்பைத் தொடங்கினார் ஸ்டாலின். இது ஸ்டாலினின் அரசியல் பயணத்தின் முதல் அடி என்றே கூறலாம்.
திமுக-வுக்காக பிரசாரம் செய்வது, நிதி திரட்டுவது, இளைஞர்களை ஒன்றிணைப்பது, கட்சி கொள்கைகளை வலியுறுத்தி நாடகங்கள் போடுவது போன்றவை தான் ஸ்டாலினின் ஆரம்பகால பணி.
அப்படியிருந்த ஸ்டாலினை 1976-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி மிசா சட்டத்தின் கீழ் கைது செய்தது அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் அரசு.
இந்த சம்பவத்திற்கு பிறகு, ஸ்டாலினின் பயணம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து... இன்னும் வேகமானது.
ஏற்றமும்... பதவிகளும்...
1980-ம் ஆண்டு, திமுகவின் இளைஞரணி தொடங்கப்பட்டது. அந்த அணியின் தலைவர் ஸ்டாலின்.
அடுத்தடுத்து ஸ்டாலினுக்கு திமுக-வில் ஏற்றமும், பதவிகளும் கிடைத்தன.
1984-ம் ஆண்டு தன்னுடைய முதல் சட்டமன்ற தேர்தலை சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு சந்தித்தார் ஸ்டாலின்.
ஏற்கெனவே சொன்னதுபோல, இந்தத் தேர்தலில் ஸ்டாலினுக்கு கிடைத்தது என்னவோ தோல்வி தான்.
இவருக்கு எதிராக போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர் அதிமுகவை சேர்ந்த KA கிருஷ்ணசாமி.
ஸ்டாலினுடைய இந்தத் தோல்விக்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருந்தது. ஒன்று, இந்திரா காந்தி மறைவு ஏற்படுத்தி இருந்த அனுதாப அலை. மற்றொன்று, தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.

1984-ம் ஆண்டு தேர்தலில் அதிமுகவும், காங்கிரஸும் தான் கூட்டணி.
ஆக, இந்தக் கூட்டணி மீது இருந்த அனுதாப அலைகள் ஸ்டாலினின் வெற்றிக்கு உலை வைத்தது. அந்தத் தேர்தலில் வெறும் 2,000 வாக்குகள் வித்தியாசத்தில் தான் ஸ்டாலின் தோல்வியைத் தழுவியிருந்தார்.
ஸ்டாலின் போட்டியிட்ட இரண்டாவது சட்டமன்ற தேர்தல் நடந்தது 1989-ல். இந்தத் தேர்தலிலும் ஆயிரம் விளக்கு தொகுதியையே டிக் செய்திருந்தார் ஸ்டாலின்.
அவரது நம்பிக்கை வீண் போகவில்லை. 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைத் தந்து ஸ்டாலினுக்கு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நுழைவு பாஸ் வழங்கினர் மக்கள்.
இரண்டாம் தோல்வி
அடுத்த இரண்டே ஆண்டுகளில் தமிழ்நாட்டில் கருணாநிதியின் ஆட்சி கலைக்கப்பட்டது. அதனால், 1991-ம் ஆண்டு தனது மூன்றாம் தேர்தலில் போட்டியிட்டார் ஸ்டாலின்.
அந்த சமயத்தில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை நடந்திருந்தது. அதனால், அந்தத் தேர்தலில் திமுகவில் கருணாநிதி, பருதி இளம்வழுதியைத் தவிர யாரும் வெற்றி பெறவில்லை... ஸ்டாலின் உட்பட.
ஆக, ஸ்டாலின் சந்தித்த இரண்டு தேர்தல் தோல்விகளிலும் ஏதோ ஒருவகையில் அவருடைய 'தம்பி' ராகுல் காந்தியின் குடும்பத்தில் நிகழ்ந்த இழப்பு சம்பந்தப்பட்டிருந்திருக்கிறது.
அடுத்து வந்த எந்தத் தேர்தல்களிலும் இதுவரை தோல்வியைத் தொடவில்லை ஸ்டாலின். எம்.எல்.ஏ, மேயர், துணை முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் முதலமைச்சர் என தொடர்ந்து பதவிகளை வகித்து வருகிறார்.
ஆனால், அவற்றிலும் பல போராட்டங்களைச் சந்தித்திருக்கிறார்.

துணை முதலமைச்சர்
பள்ளிக்காலத்தில் இருந்தே திமுக பணிகளில் ஈடுபட்டு வந்த ஸ்டாலினுக்கு முதன்முதலாக அமைச்சர் பதவி கிடைத்தது 2006-ம் ஆண்டு தான். இந்தத் தாமதத்திற்கு, அவர் மீது எழுந்த 'வாரிசு அரசியல்' விமர்சனங்களே முக்கிய காரணம்.
இதுபோக, கட்சியை தாண்டி இவருக்கு வீட்டிற்குள்ளேயே மு.க.அழகிரி, கனிமொழி என இரண்டு போட்டிகள் இருந்தது.
இவற்றை எல்லாம் மெல்ல மெல்ல சமாளித்தும், தாண்டியும் ஸ்டாலின் பயணிக்க வேண்டியதாக இருந்தது.
2009-ம் ஆண்டு தமிழ்நாட்டின் முதல் துணை முதலமைச்சர் ஆனார் ஸ்டாலின்.
அடுத்து 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதிக்கு மாறினார் ஸ்டாலின். அந்தத் தேர்தலில் ஸ்டாலினுக்கு வெற்றி தான். ஆனால், திமுக ஆட்சியைப் பிடிக்கவில்லை.
2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலிலும் இதே நிலை. ஆனால், திமுக சார்பாக எதிர்க்கட்சி தலைவராகி இருந்தார் ஸ்டாலின்.
அந்தக் காலகட்டத்தில் உடல்நிலை காரணத்தால் கருணாநிதியால் முன்னர் போல் இயங்க முடியவில்லை. அதனால், திமுக-வில் செயல் தலைவர் பதவி உருவாக்கப்பட்டு, அது ஸ்டாலினுக்கு கொடுக்கப்பட்டது.
அந்தப் பதவியின் முக்கிய நோக்கமே கருணாநிதிக்கு பதிலாக ஸ்டாலின் செயலாற்றுவது ஆகும்.
2018-ம் ஆண்டு கருணாநிதி மறைந்தார். அதன் பிறகு, நடந்த கட்சித் தேர்தலில் ஸ்டாலினை திமுக தலைவராக்கியது அறிவாலாயம்.
'முதலமைச்சர்' ஸ்டாலின்
2021-ம் ஆண்டு வழக்கம்போல தேர்தலை சந்தித்தார் ஸ்டாலின். ஆனால், இந்த முறை முதலமைச்சர் வேட்பாளராக.
'ஜாதகத்தில் ஸ்டாலினுக்கு முதலமைச்சராகும் யோகமில்லை' என்கிற கேலி, கிண்டல்களை தாண்டி, 2021-ம் ஆண்டு மே மாதம் 7-ம் தேதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.
கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகால ஆட்சியைக் கடந்து அடுத்த சட்டமன்ற தேர்தலையும் சந்திக்கப் போகிறார்.













