பரமக்குடி பள்ளி மாணவி பாலியல் கொடுமை வழக்கு; குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை!
அதிமுக முன்னாள் MLA கொலையில் 20 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு; பவாரியா கொள்ளையர்கள் 3 பேர் குற்றவாளி!
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கொலை வழக்கில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பவாரியா கொள்ளையர்கள் 3 பேரை குற்றவாளி எனச் சென்னை நீதிமன்றம் இன்று (நவம்பர் 21) தீர்ப்பளித்திருக்கிறது.
முன்னதாக, 2005 ஜனவரி 9-ம் தேதி கும்மிடிப்பூண்டி அ.தி.மு.க எம்.எல்.ஏ சுதர்சனம் என்பவரை பவாரியா கொள்ளையர்கள் வீடு புகுந்து கொலை செய்து நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தவே அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, பவாரியா கொள்ளையர்களைப் பிடிக்க ஐ.ஜி ஜாங்கிட் தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார்.

ஜாங்கிட் தலைமையிலான தனிப்படைகள் வட மாநிலங்களில் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி ஒரே மாதத்தில் 13 பேரைக் கைதுசெய்தது.
இந்தத் தேடுதல் வேட்டையின்போது A3, A4 நபர்களான இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கைதுசெய்யப்பட்டு கொண்டுவரப்பட்ட 13 பேரில், பவாரியா கொள்ளைக் கும்பல் தலைவன் A1 ஓமா உட்பட நான்கு பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

பின்னர் அது சென்னை உயர் நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. அதன்படி நால்வரும் சிறையிலிருந்தபோது, A1 ஓமா சிறையிலேயே உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
மற்ற மூவர் சிறைத் தண்டனை அனுபவித்து வந்தனர். 9 பேர் ஜாமீனில் வெளியில் இருக்கின்றனர்.
இந்த நிலையில், அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ சுதர்சனம் கொலை வழக்கில் பவாரியா கொள்ளையர்கள் 3 பேரைக் குற்றவாளி எனச் சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருக்கிறது.
மேலும், தண்டனை விவரம் நவம்பர் 24-ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


















