` நிதிஷுக்கு 20 ஆண்டுகள் கொடுத்தது போதும்' - மகனை முதல்வராக்க பீகார் மக்களிடம் ல...
``அன்பில் மகேஸ் திமுகவிற்கு அழைத்தாரா?'' - அமைதி காக்கும் வைத்திலிங்கம்!
நெருங்கும் சட்டமன்றத் தேர்தல்
தமிழ்நாட்டில் இன்னும் ஆறு மாதத்திற்குள் சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. திமுக, அதிமுக, நாம் தமிழர், த.வெ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் இப்போதே தேர்தலுக்கு தயாராகி வெற்றிக்கான திட்டங்களை வகுக்க தொடங்கி விட்டன.
அதிமுக கூட்டணியில் த.வெ.க இடம் பெறும் என எடப்பாடி பழனிசாமி முன் கூறி வந்தார். ஆனால் சிறப்பு பொதுக்குழுவில் திமுக, த.வெ.க இரண்டுக்கும் இடையே தான் போட்டி என மீண்டும் அழுத்தி சொன்ன விஜய், அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்பதை தெளிவுபடுத்தி விட்டார்.
இந்த சூழலில், அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என கூறி வந்த செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவான ஓ. பன்னீர்செல்வம் அணியில் இருந்த மனோஜ் பாண்டியன் அதில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார், மேலும் தன் எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்து விட்டார்.

வைத்திலிங்கம்
இந்நிலையில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவில் ஓ.பி.எஸ்.க்கு அடுத்த நிலையில் இருந்த வைத்திலிங்கம் என்ன செய்யப்போகிறார் என்பது பலரது எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. அரசியல் வட்டாரத்தில் அனைவரது கவனமும் வைத்திலிங்கம் மீது விழுந்திருப்பதால், அவர் எவ்வித சலனமும் காட்டாமல் அமைதியாக இருக்கிறார்.
அன்பில் மகேஸ்
இந்த சூழலில், அமைச்சர் அன்பில் மகேஸ் நேரடியாக தொடர்பு கொண்டு "திமுகவிற்கு வந்து விடுங்கள்" என பேசியதாக தகவல்கள் ரெக்கை கட்டி பறக்கின்றன.
அதிமுகவில் செங்கோட்டையன் நீக்கம், ஓ.பி.எஸ். அணியில் இருந்த மனோஜ் பாண்டியன் விலகல் ஆகியவைகளுக்கு பிறகும் வைத்திலிங்கம் அமைதியாக இருக்கிறார்.
அவர் பேசாமல் அமைதியாக இருப்பதை குறிப்பிட்டு சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
வைத்திலிங்கம் நிலைப்பாடு என்ன?
இந்த சூழலில் வைத்திலிங்கம் நிலைப்பாடு என்ன, அவரது அடுத்த கட்ட நகர்வு என்ன என்பது குறித்து சிலரிடம் பேசினோம். அவர்கள் கூறுகையில்,
"ஜெயலலிதா அமைச்சரவையில் நால்வர் அணியில் ஒருவராக அதிகாரம் மிக்க நபராக வலம் வந்தவர் வைத்திலிங்கம். திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை தன் கட்டுக்குள் வைத்திருந்து, சோழ மண்டல தளபதியாக பவர்புல் மேனாக இருந்தார்.
இந்நிலையில், 2016 தேர்தலில் யாருமே எதிர்பார்க்காத வகையில் தோல்வியை எதிர்கொண்டார். அதன் பிறகு அவரிடம் ஏகப்பட்ட மாற்றங்கள் ஏற்பட்டன. இதையடுத்து, 2021 தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே தனக்கு இனி அரசியல் எதிர்காலம் என உணர்ந்தவர் கடுமையாக செலவு செய்து மீண்டும் ஒரத்தநாடு தொகுதியை தனதாக்கி கொண்டார்.

இந்த சூழலில் அதிமுகவில் ஏற்பட்ட ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓ.பி.எஸ் தனியாக பிரிந்து அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை உருவாக்கினார்.
இதற்கான காரணகர்த்தா வைத்திலிங்கம் தான் என அப்போது பேசப்பட்டது. அதன் பின்னர் தலைமை கழகத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது.
ஓ.பி.எஸ். அணியில் வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், பெரம்பலூர் ஆர்.டி.ராமச்சந்திரன், திருவையாறு எம்.ஜி.எம். சுப்ரமணியன், இராமநாதபுரம் தர்மர், தேனி சையதுகான், உசிலம்பட்டி ஐயப்பன் ஆகியோர் மட்டும் உள்ளனர்.
இதில் ஓ.பி.எஸ்., வைத்திலிங்கம், ஐயப்பன் ஆகியோர் எம்.எல்.ஏக்கள். இவர்கள் அணியில் இருந்த முன்னாள் அமைச்சர் கு.பி. கிருஷ்ணன் மதில் மேல் பூனையாக எந்த பக்கமும் இல்லாமல் ஒதுங்கி நிற்கிறார்.
ஒருங்கிணைப்பு குறித்து பலரும் பேசி வந்தாலும், சிலருக்கு கட்சியில் இடம் அறவே கிடையாது என உறுதியாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
பிரிந்த அனைவரும் ஒன்று சேர்த்து தேர்தலில் போட்டியிட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும் என பரவலாக பேசப்படுகிறது. ஆனால், இவை நடக்காது என்பதை உணர்ந்ததால் மனோஜ் பாண்டியன் திமுகவிற்கு சென்று விட்டார்.
வைத்திலிங்கத்திடம் இருந்த அறிவுடை நம்பி, ரதிமீனா சேகர் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் ஏற்கனவே எடப்பாடியிடம் சென்று விட்டனர். தற்போது, வைத்திலிங்கத்தின் செல்வாக்கு குறைந்திருப்பதாக தான் சொல்ல வேண்டும். ஆனால் கட்சி வேலையில் அவர் ஆளுமை மிக்கவர்.
திமுகவின் சோழமண்டல தளபதியாக அறியப்பட்டவர் கோசி. மணி. இவருக்கு இணையாக, அதிமுகவின் சோழமண்டல தளபதியாக வலம் வந்த வைத்திலிங்கம் தஞ்சாவூரை அதிமுகவின் கோட்டையாக மாற்றினார். வைத்தியை செயல்வீரர் என்று பலமுறை பாராட்டியிருக்கிறார் மறைந்த ஜெயலலிதா.

`எனக்கான அடையாளம்'
கோசி. மணிக்கு அடுத்தபடியாக திமுகவில் பலம் பொருந்தியவராக இருந்த எஸ்.எஸ். பழநிமாணிக்கம், தலைமை தனக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கவில்லை என்கிற அதிருப்தியில் இருக்கிறார்.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் திமுகவில் கோஷ்டி பூசலுக்கும் பஞ்சமில்லை. பொறுப்பு அமைச்சராக இருந்த போது, அமைச்சர் அன்பில் மகேஸ் மாவட்டத்தில் எதையும் கண்டும் காணாமல் இருந்தார். அமைச்சர் கோவி. செழியன் சொல்வதை நிர்வாகிகள் யாரும் கேட்பதில்லை" என்றார்.
இந்த சூழலில், வைத்திலிங்கத்தை திமுகவிற்கு கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. அமைச்சர் அன்பில் மகேஸ் நேரடியாக தொடர்பு கொண்டு, “வைத்திலிங்கத்திடம் திமுகவுக்கு வந்துடுங்க, உங்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கிறோம்” என பேசியதாக சொல்லப்படுகிறது.
ஆனால், வைத்திலிங்கம், “எனக்கான அடையாளத்தை தந்தது அதிமுக. நான் வாழ்கிற வாழ்க்கை என் இயக்கத்தாலும், ஜெயலலிதா அம்மாவாலும் கிடைத்தது” என்று அன்போடு மறுத்து விட்டார். இதை அன்பில் மகேஸ் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என கூறப்படுகிறது.
அமைதியாக இருப்பது ஏன்?
வைத்திலிங்கத்துக்கு நெருக்கமானவர்களே, “அடுத்து அதிமுக ஆட்சிக்கு வரும்னு தெரியல, இப்போதைக்கு பலமாக இருக்கும் திமுகவிடம் இருந்து வரும் அழைப்பை ஏற்று செல்லுங்கள்” என வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
அப்போது, “மூச்சு அடங்கிய பிறகு என் உடம்பில் அதிமுக கரை வேட்டி இருக்க வேண்டும்” என்றிருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையன் பேசத் தொடங்கியதும், அதிமுகவில் அவருக்கு ஆதரவு அதிகமாக இருக்கிறது' என சொன்ன வைத்திலிங்கம், "அனைவரும் ஒன்றிணைய வேண்டும், இதில் எல்லோரும் ஒத்த கருத்துடன் இருப்பார்கள், அதிமுகவில் இருக்கிற எல்லோரும் கட்சி ஒன்றிணைந்தால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும். இல்லை என்றால் முடியாது என்று உணர்ந்திருக்கிறார்கள்" என்ற வைத்திலிங்கம் தற்போது கடும் அமைதியாக இருப்பது ஏன் என்பது புரியவில்லை என்றனர்.

வைத்திலிங்கத்துக்கு நெருக்கமான சிலரிடம் பேசினோம். "உடல்நலக் குறைபாடு ஏற்பட்டதை தொடர்ந்து சென்னையில் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த வைத்திலிங்கம் தற்போது சென்னையில் ஓய்வில் இருக்கிறார். அன்பில் மகேஸ் வைத்திலிங்கத்திடம் பேசியதாக தகவல் பரவியது.
அருகில் இருக்கும் எங்களுக்கு தெரியும், '99% இதற்கு வாய்ப்பில்லை, இது வதந்தி' என்று. ஒரு வாரம் பொறுத்திருங்கள், அண்ணன் ஓப்பனாக எல்லாவற்றையும் பேசுவார். தஞ்சாவூரில் இருந்து தன் எண்ணத்தை வெளிப்படுத்துவார்” என்றனர்.

















