நேபாள வெள்ளத்தில் உயிரிழந்த பெண்ணின் கம்மல் திருட்டு... வைரலான வீடியோவால் சிக்கி...
"அவ்வளவு பெரிய பனியும் பாறைகளும் கீழே விழுந்ததால்தான் அந்த அதிர்வுகள்.!" - நேபாள வெள்ளம் விளக்கம்
நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 26), நேபாளத்தில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. இப்போது வரை வெளியாகி உள்ள தகவலின்படி, இந்த வெள்ளத்தில் 469 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் மாயமாகியுள்ளனர். அவர்களை மீட்புக் குழு தேடி வருகின்றனர்.
இந்த வெள்ளம் எதனால் ஏற்பட்டது என்பதைத் தனது எக்ஸ் பக்கத்தில் தெளிவாக விளக்கியுள்ளார் தமிழ்நாடு சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்.
அவரது பதிவு ...
“திடீர் வெள்ளப் பெருக்கிற்குப் பனிப்பாறை சரிவே முதன்மைக் காரணம் எனத் தகவல்.
நிலநடுக்கத்தை விட, பனிப்பாறை சரிந்ததே இந்தப் பேரழிவு வெள்ளத்திற்கு முக்கியக் காரணம் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பின் கூற்றுப்படி, ஆகஸ்ட் 26 அன்று காலையில், திபெத்தில் சுமார் 17,000 அடி (5,200 மீட்டர்) உயரத்தில் அமைந்திருந்த ஒரு பனிப்பாறை திடீரெனச் சரிந்து விழுந்துள்ளது.
அந்தப் பனிப்பாறைப் பாளம் கிட்டத்தட்ட 4,000 அடி (1,200 மீட்டர்) ஆழத்திற்குக் கீழே விழுந்துள்ளது. சரிந்து விழுந்த பனிப்பாறையின் பகுதி சுமார் 2,000 அடி (610 மீட்டர்) அகலம் கொண்டது எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்திற்கு சமமாக...
அவ்வளவு பெரிய பனிப்பாறைக அவ்வளவு உயரத்திலிருந்து கீழே விழுந்ததால், நிலத்தில் கடுமையான அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.
இதனால்தான் ஆரம்பத்தில் இதை நிலநடுக்கத்தின் அதிர்வு எனத் தவறாகப் புரிந்துகொண்டனர். 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்கு இணையான அந்த அதிர்வு, பூமிக்கு அடியில் ஏற்பட்ட நிலவியல் நகர்வால் உருவானது அல்ல.
மாறாக, இந்தப் பனிப்பாறை திடீரென உடைந்து விழுந்ததால் ஏற்பட்டதே ஆகும். அந்தப் பிரம்மாண்ட பனிப்பாறை கீழே விழும்போது நொறுங்கிப் பொடியானது. அது பாறைகள், வண்டல் மண் மற்றும் நீருடன் கலந்து, மிக வேகமாகப் பாய்ந்து செல்லக்கூடிய சேறு மற்றும் கழிவுப் பெருக்காக மாறியது.

அடைப்பு
ஆகஸ்ட் 26 காலை 8:30 மணியளவில், இந்தப் பனி, பாறை மற்றும் தண்ணீரின் கலவை லெண்டே (Lhende) ஆற்றைச் சென்றடைந்தது.
இந்தப் பிரம்மாண்டக் கழிவுப் பெருக்கு ஆற்றின் குறுக்கே அடைப்பை ஏற்படுத்தி, ஒரு தற்காலிக இயற்கை அணையை உருவாக்கியது. இதனால் ஆற்றுக்கு மேல் பகுதியில் தண்ணீர் மிக வேகமாகத் தேங்கத் தொடங்கியது.
நேபாள-சீன எல்லைக்கு வடகிழக்கே சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் இந்த அடைப்பு ஏற்பட்டது.
காலை 9 மணிக்கு...
காலை 9:00 மணியளவில், தேங்கிய நீரின் அழுத்தம் தாங்க முடியாமல் அந்தத் தற்காலிக அடைப்பு உடைந்தது. கட்டுக்கடங்காமல் தேங்கி நின்ற தண்ணீரும் கழிவுகளும் ஒரே அடியாக வெளியேறியதால், ஆற்றின் கீழ்நோக்கி ஒரு சக்திவாய்ந்த வெள்ள அலை உருவாகிப் பாய்ந்தது.
இந்த வெள்ளப்பெருக்கு போட் கோஷி (Bhote Koshi) ஆற்று அமைப்பிற்குள் புகுந்து, அதைத் தொடர்ந்து திரிசூலி (Trishuli) ஆற்றையும் தாக்கி, கீழ்நிலைப் பகுதிகளில் பெரும் சேதத்தையும் அழிவையும் ஏற்படுத்தியது.
Glacier Collapse Identified as the Main Trigger of the Flash Flood
— Tamil Nadu Weatherman (@praddy06) August 28, 2026
----------------------
The United States Geological Survey (USGS) has attributed the devastating flooding to a glacier collapse rather than an earthquake. According to the US agency, a glacier located at an… pic.twitter.com/H6BjS0P8py
நிகழ்வுகளின் வரிசை:
பனிப்பாறை சரிவு → பனி/பாறை சரிந்து விழுதல் → கழிவுப் பெருக்கு (Debris flow) → லெண்டே ஆற்றில் அடைப்பு → தற்காலிக அணை உருவாகுதல் → நீர் தேங்குதல் → அணை உடைதல் → திடீர் வெள்ளப்பெருக்கு → போட் கோஷி ஆறு → திரிசூலி ஆறு → கீழ்நிலைப் பகுதிகளில் பேரழிவு.
எனவே, 5.2 ரிக்டர் அளவிலான நில அதிர்வு இந்த அசம்பாவிதத்திற்குக் காரணம் அல்ல.
அது பனிப்பாறை சரிந்ததால் ஏற்பட்ட விளைவு மட்டுமே. பெருமளவிலான பனி, பாறை மற்றும் நீர் திடீரென வெளியேறியதும், அதைத் தொடர்ந்து ஆற்றில் தற்காலிக அடைப்பு ஏற்பட்டு, அந்த இயற்கை அணை உடைந்ததே இந்த விபரீதத்திற்கு முதன்மையான காரணியாகும்.” என பதிவிட்டிருக்கிறார்,



















