தென்னிந்தியாவின் முன்னணி நகை நிறுவனமான லலிதா ஜூவல்லரி, இப்போது போரூரில்!
ஆய்வகத்திலிருந்து அமைதிப் பள்ளத்தாக்கு வரை: இந்திய தாவரவியலின் தாய் டாக்டர் ஜானகி அம்மாள்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
இடவலத்து கக்காட்டு ஜானகி அம்மாள் 1897-ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி, அன்றைய மெட்ராஸ் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்த கேரளாவின் தலச்சேரி என்ற ஊரில் பிறந்தார். இவரது தந்தை திவான் பகதூர் இடவலத்து கக்காட்டு கிருஷ்ணன், மெட்ராஸ் மாகாணத்தில் துணை நீதிபதியாகப் பணியாற்றினார். இவரது தாயார் பெயர் தேவி குரூப். வீட்டைச் சுற்றி ஒரு பெரிய தோட்டத்தை அமைத்துப் பராமரித்து வந்த ஜானகி அம்மாளின் தந்தை இயற்கையியல் மற்றும் தோட்டக்கலையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இந்தச் சூழலே ஜானகி அம்மாளுக்கு சிறு வயதிலேயே தாவரங்கள் மீது ஈர்ப்பை ஏற்படுத்தியது.

ஜானகி அம்மாள் தனது ஆரம்பக் கல்வியைத் தலச்சேரி சேக்ரட் ஹார்ட் கான்வென்ட் பள்ளியிலும், அதன் பின்னர் அரசுப் பள்ளியிலும் பயின்றார். அந்த காலகட்டத்தில், ஜானகி அம்மாள் சார்ந்த சமூகத்தில் பெண்கள் பருவமடைந்த உடனே திருமணம் செய்து வைப்பதே வழக்கமாக இருந்தது. ஆனால், இவரது குடும்பத்தில் இருந்த 19 குழந்தைகளில் ஒருவரான ஜானகி அம்மாள், திருமண வாழ்க்கையைத் தவிர்த்து, கல்வி கற்றுத் தன் காலில் நிற்க உறுதியான முடிவை எடுத்தார். அதற்கு அவரது தந்தையும் ஆதரவளித்தார்.
உயர்கல்விக்காக சென்னைக்கு குடிபெயர்ந்த ஜானகி அம்மாள் அங்கு பெண்களுக்கான குயின் மேரிஸ் கல்லூரியில் சேர்ந்தார். பின்னர், புகழ்பெற்ற சென்னை மாநிலக் கல்லூரியில் தாவரவியல் துறையில் சேர்ந்தார். 1921-ஆம் ஆண்டு தாவரவியலில் இளங்கலை பட்டம் பெற்றார். பட்டம் பெற்ற பிறகு, சென்னை மகளிர் கிறித்தவக் கல்லூரியில் சில ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றினார்.
ஆசியப் பெண்கள் உயர்கல்வி கற்பதற்காக அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகம் வழங்கிய புகழ்பெற்ற 'பார்பர் உதவித்தொகை' ஜானகி அம்மாளுக்குக் கிடைத்தது. இதன் மூலம் 1924-ஆம் ஆண்டு அமெரிக்கா சென்றார். 1925-ஆம் ஆண்டு மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் தனது முதுகலை பட்டத்தைப் பெற்றார். இந்தியாவில் சில ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, மீண்டும் மிச்சிகன் பல்கலைக்கழகம் சென்று தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். 1931-ஆம் ஆண்டு, தாவர மரபியலில் முனைவர் பட்டம் பெற்றார். இதன் மூலம், அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் தாவரவியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண்மணி மற்றும் முதல் ஆசியப் பெண்மணி என்ற வரலாற்றுப் பெருமையை பெற்றார்.

அமெரிக்கா, இங்கிலாந்து என உலக நாடுகளின் மிக உயரிய பல்கலைக்கழகங்களில் படித்து, உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானிகளுடன் பணிபுரிந்த போதிலும், ஆடம்பரங்களை முற்றிலுமாகத் தவிர்த்த ஜானகி அம்மாள் மிக எளிமையான வாழ்க்கையையே வாழ்ந்தார். மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட இவர், வாழ்நாள் முழுவதும் மஞ்சள் நிறக் கதர் புடவைகளை மட்டுமே அணிந்தார்.
1940 முதல் 1944 வரை இரண்டாம் உலகப் போர் உச்சத்தில் இருந்தபோது, லண்டனில் உள்ள ஜான் இன்னெஸ் நிறுவனத்தில் ஜானகி அம்மாள் மரபணு ஆராய்ச்சியாளராகப் பணியாற்றினார். ஜெர்மனியப் படைகள் லண்டன் மீது இரவோடு இரவாகக் குண்டுகளை வீசிய அந்த ஆபத்தான சூழலிலும், பயந்து ஓடாமல், குண்டுவெடிப்புகளுக்கு இடையே தனது ஆய்வகத்தில் தாவரங்களின் குரோமோசோம்களை ஆராய்ந்து கொண்டிருந்தார்.

தன் வாழ்நாளை முழுமையாக அறிவியல் ஆராய்ச்சிக்கும், தாவர உலகிற்கும் அர்ப்பணிக்க வேண்டும் என்பதற்காக ஜானகி அம்மாள் திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைத்த பிறகு, நாட்டின் விவசாயத்தை மேம்படுத்த தகுந்த நபர்களைத் தேடிக்கொண்டிருந்தார் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு. அப்போது லண்டனில் இருந்த ஜானகி அம்மாளின் திறமையை அறிந்த நேரு, அவருக்குத் தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதி, "இந்தியாவிற்கு வந்து நாட்டின் தாவரவியல் அமைப்பை மறுசீரமைக்க உதவுங்கள்" என்று அழைப்பு விடுத்தார். நேருவின் அழைப்பை ஏற்று அவர் உடனே இந்தியா திரும்பினார்.
1930-களில் இனிப்பு குறைவாகவும், மெல்லியதாகவும், நோய்த்தொற்றுகளால் எளிதில் பாதிக்கப்படக்கூடியதாகவும் இருந்த இந்திய நாட்டு ரக கரும்புக்கு மாற்றாக இந்திய மண்ணிற்கு ஏற்ற, அதிக இனிப்புத் தன்மையுடைய, நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட ஒரு புதிய கரும்பு ரகத்தை உருவாக்க ஜானகி அம்மாள் தீவிரமாக பணியாற்றினார். உலகிலேயே முதன்முறையாக ஜானகி அம்மாள் கரும்புடன் சோளத்தை வெற்றிகரமாகக் கலப்பு செய்தார். கரும்புப் பயிரை வலுவாக்க, 'சக்காரம் ஸ்பாண்டேனியம்' என்ற காட்டுப் புல் ரகத்துடனும் கலப்பு செய்தார். குரோமோசோம் எண்ணிக்கையை மாற்றியமைப்பதன் மூலம் (Cytogenetics), வறட்சியையும் நோய்களையும் தாங்கி வளரும் கரும்பு ரகங்களை அவர் உருவாக்கினார்.

ஜானகி அம்மாள், பிரிட்டிஷ் மரபியலாளர் சி.டி. டார்லிங்டன் இணைந்து 1945-ஆம் ஆண்டு வெளியிட்ட 'குரோமோசோம் அட்லஸ் ஆஃப் கல்டிவேட்டட் பிளான்ட்ஸ்' என்ற புத்தகமே, உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பயிர்கள் மற்றும் தாவரங்களின் குரோமோசோம் எண்ணிக்கையைத் துல்லியமாகப் பதிவு செய்த முதல் உலகளாவிய ஆவணம்.
காடுகளை அழிப்பது இந்தியாவின் சுற்றுச்சூழல் சமநிலையைக் குலைக்கும் என்று தனது 80-வது வயதிலும், வயோதிகத்தைப் பொருட்படுத்தாமல் 1970-களில் கேரள அரசு குந்திப்புழா ஆற்றின் குறுக்கே அமைக்க முடிவு செய்த நீர்மின் திட்டத்திற்கு எதிராக ஜானகி அம்மாள் தீவிரமாகப் குரல் கொடுத்தார். ஜானகி அம்மாள் போன்ற விஞ்ஞானிகள் மற்றும் பொதுமக்களின் தீவிரப் போராட்டத்தால், 1983-ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி இந்த நீர்மின் திட்டத்தைக் கைவிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 1984-ல் அமைதிப் பள்ளத்தாக்கு பகுதி 'தேசியப் பூங்காவாக' அறிவிக்கப்பட்டு, நிரந்தரமாகப் பாதுகாக்கப்பட்டது.
தனது 86-வது வயதில் (1984 பிப்ரவரி 7) இயற்கை எய்துவதற்கு முன்பாக, சென்னை மாதவரத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழகத்தின் தாவரவியல் ஆராய்ச்சி மையத்தில் தாவரங்கள், பூனைகள் மற்றும் பறவைகளுடனேயே தனது பெரும்பாலான நேரத்தை ஜானகி அம்மாள் செலவிட்டார்.

ஜானகி அம்மாள் மேக்னோலியா போன்ற மரவகத் தாவரங்களின் இளநாற்றுகளில் 'கொல்சிசின்' என்ற வேதிப்பொருளைப் பயன்படுத்தி ஆராய்ச்சி செய்தார். இந்த வேதிப்பொருள் தாவரங்களின் செல் பிரிதலை (Mitosis) மாற்றி, அவற்றின் குரோமோசோம் எண்ணிக்கையை இயல்பை விட இரண்டு மடங்காக மாற்றியது.
இதனால் உருவான தாவரங்கள் தடிமனான இலைகளையும், வழக்கத்தை விட பெரிய, வலுவான இதழ்களைக் கொண்ட மலர்களையும் பெற்றன. இந்த மாற்றத்தால் மலர்கள் நீண்ட நாட்களுக்கு வாடாமல் பொலிவுடன் இருக்கும் தன்மையைப் பெற்றன. அவரது இந்த அரிய கண்டுபிடிப்பால் உருவான ஒரு குறிப்பிட்ட மேக்னோலியா புதர்ச் செடிக்கு, அவரது நினைவாக ‘மக்னோலியா கோபஸ் ஜானகி அம்மாள்' என்று அதிகாரப்பூர்வமாகப் பெயரிடப்பட்டது.
"என் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேச எதுவும் இல்லை, நான் செய்யும் வேலை மட்டுமே எனக்குப் பின் வாழும்" என்று ஜானகி அம்மாள் அடிக்கடி கூறுவார். அதற்கு சான்றாக லண்டன் விஸ்லியில் உள்ள 'பேட்டில்ஸ்டன் ஹில்' (Battleston Hill) பகுதியில் மக்னோலியா கோபஸ் ஜானகி அம்மாள் மலர்கள் இன்றும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாத வசந்த காலத்தில் பூத்துக் குலுங்கி கொண்டிருக்கின்றன.
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!
Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.



















