செய்திகள் :

"இங்கே ஜாதி சான்றிதழ் வாங்குவது எளிது; ஆனால்..." - சொல்கிறார் நடிகர் பார்த்திபன்

post image

வித்தியாசத்தின் மறுபெயரான நடிகர் - இயக்குநர் பார்த்திபன், அண்மையில் 'சாதி, மதம் அற்றவர்' என்ற சான்றிதழ் பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். இதன் பின்னணியில் பல்வேறு சம்பவங்கள் வரிசைகட்டுகின்றன.

சில மாதங்களுக்கு முன்பு, தெலுங்கு பட விழா ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் பார்த்திபன், விழா மேடையில் தான் சார்ந்த சாதி குறித்தான சொல் ஒன்றைப் பேசிவிட... அந்த வீடியோ வைரலாகி பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது.

'முற்போக்காளராகக் காட்டிக்கொள்ளும் பார்த்திபன், இதுபோல் சாதிப் பெருமை பேசலாமா?' என்ற கண்டனக் குரல்களும் எழுந்தன.

இதையடுத்து, உணர்ச்சிவசத்தில் தன்னையும் அறியாமல் பேசிவிட்டதாகக் கூறி வருந்திய பார்த்திபன், 'மனதளவில் எனக்கு எந்தவித சாதி, மதப் பற்றும் கிடையாது' என வெளிப்படையாக அறிவித்தார்.

மேலும் இதை நிரூபிக்கும் விதமாக, 'சாதி, மதம் அற்றவன்' சான்றிதழ் பெறவும் தாசில்தார் அலுவலகப் படியேறினார். ஆனால், அந்த முயற்சி, சாதி சான்றிதழ் வாங்குவதைவிடவும் பல மடங்கு கடினமான பணியாக இருந்தது.

இதையடுத்து, நீதிமன்றத்தில் முறையீடு செய்து, நீண்ட போராட்டத்திற்குப் பிறகு நீதிமன்ற வழிகாட்டுதலின்படி 'சாதி, மதம் அற்றவன்' சான்றிதழைப் பெற்றார்.

இதைத்தொடர்ந்து, 'சாதி, மத அடையாளங்களுக்குள் தன்னை அடைத்துக்கொள்ள விரும்பாதவர்கள், இதுபோன்ற சான்றிதழைப் பெறுவது எளிய நடைமுறையாக்கப்பட வேண்டும்' என்ற கோரிக்கையோடு நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார்.

இதற்கிடையே, இவ்விவகாரத்தில் ஆதரவு, எதிர்ப்பு எனப் பல்வேறு விமர்சனங்களையும் எதிர்கொண்டு வருகிறார் பார்த்திபன். இந்தச் சூழலில், நமது கேள்விகளை பார்த்திபன் முன்வைத்தோம்...

பார்த்திபன்!
பார்த்திபன்!

"மேடைகளில் கவனமாக பேசக்கூடிய நீங்கள், தெலுங்குப் பட விழாவில் அப்படியொரு வார்த்தையைப் பிரயோகித்தது ஏன்?"

"வழக்கமாக கலைஞர்கள் அதிகமாக உணர்ச்சிவசப்படுவார்கள். அந்த வகையில், நானுமே உணர்ச்சிவசப்பட்டவன்தான். மேடையில் நம்மை ஒருவர் புகழ்ந்து பேசினால், பதிலுக்கு நாமும் அவர்களைப் புகழ்ந்து பேசுவதுதான் பண்பாடு. அந்த வகையில், அன்றைய தினம் என்னைப்பற்றிய அறிமுகத்தைத் தவறான வார்த்தைகளில் வெளிப்படுத்திவிட்டேன்.

உண்மையில், நான் சாதி, மத துவேஷங்களுக்கு எதிரானவன். எனவே, நான் எந்தச் சாதியையோ மதத்தையோ சார்ந்தவன் அல்ல... சாதாரண மனிதன் என்று நிரூபிப்பதற்காக 'சாதி - மதமற்றவன்' சான்றிதழ் பெற முயற்சி செய்தேன்.

ஆனால், 'இங்கே ஜாதி சான்றிதழ் வாங்குவது எளிது... அதுவே ஜாதியற்றவன் என்று சான்றிதழ் வாங்குவதற்கு எந்தவித நடைமுறையும் இல்லை' என்பதே அப்போதுதான் எனக்குத் தெரியவந்தது. இதையடுத்தே இந்தச் சான்றிதழ் வழங்கும் நடைமுறையை எளிதாக்கக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தேன்"

"'ஜாதி, மதம் அற்றவர் என்பது மனதிலிருந்து தொடங்கப்பட வேண்டுமே தவிர, சான்றிதழில் இருந்து அல்ல' என்ற கருத்தைப் புரிந்துகொண்டவர்தானே நீங்களும்...?"

"என் மனதில் ஜாதி இல்லை என்பது எனக்குத் தெரியும். ஆனால், அதை நான் எப்படி பொதுவெளியில் வெளிப்படுத்துவது? அதற்காகத்தான் இப்படியொரு சான்றிதழை நான் போராடி வாங்கி அறிவித்திருக்கிறேன்.

சராசரி மனிதனாக இருப்பதற்கும், சபையேறிய மனிதனாக இருப்பதற்கும் நடுவே வித்தியாசம் இருக்கிறது. நிச்சயமாக அந்த இடத்தில் இது எனக்கு தேவை என்று தோன்றுகிறது.

இப்போது நானே ஒரு கண்டிஷனுக்குள் வந்துவிடுகிறேன். இப்படியொரு முடிவை நான் அறிவித்துவிட்டதாலேயே, இந்த நிமிஷத்துக்குப் பிறகு நானே இதைப் பத்தி பேசப்போவது கிடையாது. ஆக, அதை உறுதிப்படுத்திக் கொள்கிற ஒரு விஷயமாகவும் இந்தச் சான்றிதழ் இருக்கிறது.

 பார்த்திபன்
பார்த்திபன்

இப்போது நிறைய இளைஞர்கள் 'நாங்களும் இதேபோன்று சான்றிதழ் வாங்கவேண்டும்... எப்படி வாங்குவது சார்..?' என என்னிடம் கேட்கிறார்கள். ஆக, கடின வழிமுறையாக இருக்கும் இந்தச் சான்றிதழ் நடைமுறையை மாற்றி, எல்லோருக்கும் எளிதாக கிடைக்கும் வகையில் நடைமுறையை மாற்றியமைக்க நான் மீண்டும் நீதிமன்றத்தைத்தான் நாடவேண்டியிருந்தது. அந்த வகையில்தான் வழக்கை தொடுத்திருக்கிறேன்.

நீதிமன்றமும், 'இந்தக் கோரிக்கையை நீங்கள் ஏன் பரிசீலிக்கக் கூடாது' எனத் தமிழக அரசையும் கேட்டிருக்கிறது. 'ஜாதி, மதமற்ற ஒரு சமத்துவ சமுதாயத்தை உருவாக்கவேண்டும்' என எல்லா தலைவர்களுமே பேசுகிறார்கள். ஆனால், இப்படியொரு முயற்சியை ஏன் யாருமே எடுக்கவில்லை?

'சமத்துவபுரம்' திட்டத்தை கலைஞர் கொண்டுவந்தார். ஏன் அந்தத் திட்டம் இப்போதுவரை தொடரவில்லை? இப்படி நிறைய கேள்விகள் எழுகின்றன."

"இதனால் சமுதாயத்தில் என்ன மாற்றம் ஏற்பட்டுவிடும் என நினைக்கிறீர்கள்?"

"'கடவுள் இருக்கிறார்' என்று ஒரு கூட்டமும், 'கடவுள் இல்லை' என்று ஒரு கூட்டமும் சொல்லிக்கொண்டிருப்பதைப்போல், 'ஜாதி இருக்கிறது' என்று சொல்லிக்கொண்டிருக்கிற கூட்டத்துக்கு நடுவே, 'ஜாதி இல்லை' என்று ஒரு கூட்டமும் சொல்லப்போவதால், யாரும் அதைத் தடை செய்துவிடப் போவதில்லை

ஆக, 'ஜாதி வேண்டாம்' எனச் சமூகத்தில் என்னைப்போல் உதறித்தள்ளிவிட்டு வருகிறவர்களால், இருக்கிற மீதி பேர்களுக்கு இடஒதுக்கீட்டு உரிமை போன்ற விஷயங்களில் கூடுதல் வாய்ப்பு கிடைக்கும்தானே! இந்த நல்ல நோக்கத்துக்காகத்தான் இதை நான் செய்தேன்"

"சாதி ஒழிப்புக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டிய சமூகத்தில், 'சாதியற்றவர்' என்ற நிலைப்பாடு சமூகத்தில் தவறான புரிதலை ஏற்படுத்திவிடும் அபாயமும் உள்ளதுதானே?"

"அப்படியல்ல... நான் ஒருவன் சொல்வதாலேயே 'ஆமாம்... இது கரெக்ட்தான்' எனச் சொல்லி எல்லோருமே இந்தச் சான்றிதழை விரும்பி வாங்கிக்கொள்வார்கள் என்று சொல்வதற்கில்லை. உதாரணமாக நான் உடல் தானம் செய்துவிட்டேன் என்பதற்காக, என்னைப் பின்பற்றி உடனே ஆயிரம் பேர் உடல் தானம் செய்துவிட்டார்கள் என்று எந்த நிகழ்வும் நடக்கவில்லை.

அதேசமயம் என்னைப்போல் 'ஜாதியில்லை' என்று நினைப்பவர்களுக்கு தாங்கள் விருப்பப்பட்டதைச் சொல்லிக்கொள்கிற உரிமை இருக்கிறதல்லவா... அப்படியென்றால், அந்த உரிமையை அவன் பெறுவதற்கான வழிமுறை ஏன் இவ்வளவு கடினமானதாக இருக்க வேண்டும்? அதைக் கொஞ்சம் எளிமைப்படுத்தலாம்தானே!

10 கிலோ சர்க்கரைதான் இருக்கிறது என்றால், அதை 100 பேர் எடுத்துக்கொள்வதற்குப் பதிலாக, 10 பேர்தான் எடுத்துக்கொள்கிறார்கள் என்றால், ஆளுக்கு ஒரு கிலோ சர்க்கரை கிடைக்கும்தானே.

அம்மா உணவகத்தில் 10 ரூபாய்க்கு சாப்பாடு கிடைக்கிறது என்பதற்காக, வசதியுள்ள நானும் போய் வரிசையில் நின்று வாங்கிச் சாப்பிடுவதைவிட... ஒதுங்கிக்கொள்வதால், வசதியற்ற ஒருவருக்கு அந்தச் சாப்பாடு கிடைக்கும்தானே! ஆக, எனது இந்த முடிவு என்பது அறிவின் அடிப்படையிலானது அல்ல... உணர்ச்சியின் அடிப்படையிலானது!

தனிப்பட்ட முறையில் நான் ஃபீல் செய்தது... 'என் ஜாதியை நான் மாத்த முடியாதா...' என்பதுதான். படித்த, பண்பானவனாக இருக்கிற எனக்கே இது இத்தனை நாளாகப் புரியாமல்தான் இருந்தது. ஆனால், இப்போது நான் அதிலிருந்து வெளிவந்துவிட்டேன். இதில் சில குறைகள் இருக்கலாம். அந்தக் குறைகளை நான் பிற்காலத்தில் நிவர்த்தி செய்துகொள்ளலாம்"

"‘நாட்டாமை குடும்பம்’னு பச்சை குத்திக்கோங்க" - சரத்குமார் சொன்ன 'கிரீன் கார்டு' ஐடியா

நடிகர் மற்றும் பாஜக நிர்வாகி சரத்குமார் தன் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் விருந்து நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.இதில் சரத்குமாரின் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டன... மேலும் பார்க்க

Toxic: "பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறேன்; ஆனால்..." - யஷ்ஷைப் புகழ்ந்து பேசிய நயன்தாரா

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘டாக்ஸிக்’. இந்தப் படத்தில் கியாரா அத்வானி, நயன்தாரா, ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் வரும் 26-ம் தேதி திரையரங்குகளில் ... மேலும் பார்க்க

"அன்னைக்கு அழுதிட்டு இருந்தேன்; இன்னைக்கு சூர்யா சாரோட..." - நினைவுகளைப் பகிர்ந்த மமிதா பைஜூ

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வருகிறது. 'லக்கி பாஸ்கர்' படப் புகழ் வெங்கி அத்லூரி இயக்கும் இந்தப் படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கி... மேலும் பார்க்க

Toxic: "அந்தப் பிரச்னையை நீங்கள் கையாண்ட விதம் எனக்கு பிடித்திருந்தது" - நயன்தாரா குறித்து யஷ்

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘டாக்ஸிக்’. இந்தப் படத்தில் கியாரா அத்வானி, நயன்தாரா, ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் வரும் 26-ம் தேதி திரையரங்குகளில் ... மேலும் பார்க்க

Photographer Review: காட்டுக்குள் சாகசப் பயணம் மேற்கொள்ளும் போட்டோகிராபர்! சாதிக்கிறாரா?!

புகைப்படக்கலை மீது ஆர்வம் கொண்ட வீராவை (அஷ்ரஃப்), அவருடைய தந்தை (ஆடுகளம் நரேன்) தனது நிறுவனத்தின் முதன்மைப் பொறுப்பில் அமர வைக்க முயல்கிறார். ஆனால், வீராவின் கனவு வேறொன்றின் பக்கம் இருக்கிறது. கொடைக்க... மேலும் பார்க்க

Toxic: புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாதது ஏன்? - நயன்தாரா ஓப்பன் டாக்

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘டாக்ஸிக்’. இந்தப் படத்தில் கியாரா அத்வானி, நயன்தாரா, ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் வரும் 26-ம் தேதி திரையரங்குகளில் ... மேலும் பார்க்க