"மம்மூட்டிக்கு விருது கொடுக்க அவர்களுக்கு தகுதியில்லை" - தேசிய விருதுகள் குறித்த...
``இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக, நம் முதல்வர் தமிழ்நாட்டை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்’’ - உதயநிதி
ராணிப்பேட்டையில், இன்று நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். காணொளிக்காட்சி வாயிலாக புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின் பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முன்னதாக பேசிய உதயநிதி ஸ்டாலின், ``நம்முடைய தமிழ்நாட்டில் ராஜாக்களின் பெயர்களில் நிறைய ஊர்கள் இருக்கின்றன. ராணிகளின் பெயர்களில் இருக்கக்கூடிய சில ஊர்களில், மிகமிக முக்கியமான ஊர் இந்த ராணிப்பேட்டை. அதனால்தான் என்னவோ, இந்த விழாவில் ராஜாக்களை விட ராணிக்கள் அதிகமாக பங்கேற்றிருக்கிறீர்கள்.

அதாவது, ஆண்களை விட மகளிர் அதிக அளவில் வந்திருக்கிறீர்கள். 73 ஆயிரம் பேருக்கு நலத்திட்டம் கொடுக்கிறோம் என்றால், அதில் 55 ஆயிரம் பேர் பெண்கள் என்று சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். பொதுவாகவே, நம்முடைய திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு, பெண்களுடைய முன்னேற்றத்துக்கான அரசாக தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருக்கிறது.
ஆட்சிக்கு வந்த உடனே நம் முதலமைச்சர் போட்ட முதல் கையெழுத்து, மகளிருக்கான விடியல் பயணத் திட்டம் தான். அந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் இந்த நான்கரை வருடங்களில் 820 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டிருக்கிறார்கள்.
ஒவ்வொரு மாதமும் 900 ரூபாயில் இருந்து 1,000 ரூபாய் வரை மகளிர் சேமிக்கிறார்கள். குறிப்பாக, ராணிப்பேட்டை மாவட்டத்தில் மட்டும் சுமார் 8 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டிருக்கிறார்கள். இது தான் இந்த அரசின் வெற்றி. அதேபோல, கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலமாக கடந்த 26 மாதங்களாக 1.20 கோடி மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் நம் முதலமைச்சர் கொடுத்து கொண்டு வருகிறார்.
இந்த ராணிப்பேட்டை மாவட்டத்தில் மட்டும் ஒவ்வொரு மாதமும் சுமார் 1.70 லட்சம் மகளிர் பயன்பெற்று வருகிறார்கள். வரும் டிசம்பர் மாதம் முதல் இன்னும் கூடுதலாக மகளிருக்கும், யார் யாருக்கெல்லாம் விடுப்பட்டிருக்கிறதோ, அவர்களுக்கும் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார்.

இப்படி பல வகையில், இந்தியாவுக்கே ஒரு எடுத்துக்காட்டு மாநிலமாக, ஒரு எடுத்துக்காட்டு முதலமைச்சராக நம்முடைய முதலமைச்சர் இந்த மாநிலத்தை வழிநடத்திக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துசெல்ல, தமிழ்நாட்டின் வளர்ச்சியை பெருக்க, உங்களுக்காக தொடர்ந்து உழைக்க நம் முதலமைச்சரும், மக்கள் பிரதிநிதிகள் அத்தனை பேரும் தயாராக இருக்கின்றோம். எனவே, இந்த வளர்ச்சி மென்மேலும் பெருக வேண்டும்; அதற்கு எப்போதும்போல உங்களின் ஆதரவு நம் முதலமைச்சருக்கும், நம் அரசுக்கும் தொடர வேண்டும் என்று உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்’’ என்றார்.















