ஐபிஎல் மே மாதத்திலேயே நடத்தப்பட்டால்... எங்கு நடத்தப்படும் தெரியுமா?
இந்தியா, பாகிஸ்தானிடம் மாறி மாறிப் பேச்சுவார்த்தை நடத்தும் அமெரிக்கா; ஜெய்சங்கர் சொல்வதென்ன?
உலகில் எந்த மூலை முடுக்கில் சண்டை நடந்தாலும், அதைத் தீர்க்க முயற்சி செய்வது, பேச்சுவார்த்தை நடத்துவது உலக நாடுகளில் பெரிய அண்ணன் என்று செல்லமாக அழைக்கப்படுகிற அமெரிக்காவின் வேலை.
இதன் சமீபத்திய உதாரணங்கள் 'ரஷ்யா - உக்ரைன் போர்' மற்றும் 'இஸ்ரேல் - காசா போர்'.
தற்போது இந்தியா - பாகிஸ்தான் இடையே பெரும் பதற்ற நிலை உருவாகி வருகிறது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெரிதாக வெளியில் பேசவில்லை என்றாலும், அவரது அரசாங்கம் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

நேற்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்ற நிலை குறித்து, "வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ தொடர்ந்து இரு நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இரு நாடுகளுக்கு இடையே இருக்கும் பதற்ற நிலை விரைவில் தீர வேண்டும் என்று நினைக்கிறார். இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாகப் பிரச்னை இருந்து வருகிறது.
அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு இரு நாட்டுத் தலைவர்களுடனும் நல்ல உறவு இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
இதையடுத்து இன்று காலை தொலைபேசியில் பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீருடன் பேசியுள்ளார் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ.
மார்கோ ரூபியோ அசிம் முனீரிடம், "இரு நாடுகளும் பதற்ற நிலையைக் குறைப்பதற்கான பணிகளில் ஈடுபட வேண்டும். மேலும், பிரச்னை பெரிதாகாமல் இருக்க அமெரிக்கா உதவி செய்யத் தயார்" என்று கூறியிருக்கிறார்.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் இன்று மார்கோ ரூபியோவுடன் பேசியுள்ளார். இதுகுறித்து ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, "இன்று காலை மார்கோ ரூபியோவுடன் பேசினேன்.
இந்தியாவின் அணுகுமுறை எப்போதும் அளவிடப்பட்டதாகவும், பொறுப்பானதாகவும் இருக்கும். இப்போதும் அப்படியே இருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
மார்க் ரூபியோவின் முயற்சி கைக்கூடுமா... இரு நாடுகளும் பதற்ற நிலையை குறைக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
Had a conversation with US @SecRubio this morning.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) May 10, 2025
India’s approach has always been measured and responsible and remains so.