``சாலைகள் மோசமாக இருந்தால் விபத்துகள் குறைவாக நடக்கின்றன" - பாஜக எம்.பி சர்ச்சைக...
`இனி அந்த வார்த்தைகள், கெட்ட வார்த்தைகள் ஆகட்டும்’ | கோவை சம்பவம் | #HerSafety
'கல்லு, கண்ணாடி... முள்ளு, சேலை... ஆம்பளைன்னா அப்பிடி இப்பிடித்தான்' என்கிற போன நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள், 'அந்த ராத்திரி நேரத்துல இந்தப் பொண்ணு ஏன் அங்க போகணும்' என்கிற புத்தம் புதிய கருத்தை, சமூக வலைத்தளம் எங்கும் வாயிலெடுக்க எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
'காதலிக்கிறவங்க ஏன் அங்க போக போறாங்க..? இதுங்க காமத்துக்கு போயிருக்கும்க' என்று நேரில் பார்த்ததுபோலவே, பலரும் சாட்சி சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

சில துப்பறிவாளர்கள் (இதில் ஆண், பெண் இருவரும் அடக்கம்), 'காதலிக்கிறவங்க முன்னாடி சீட்ல இல்ல உட்கார்ந்திருக்கணும்; இவங்க ஒருவேளை(?) பின்னாடி சீட்ல உட்கார்ந்திருந்தா, வேற எதுக்கோ தான் உட்கார்ந்திருக்காங்க' என்று கண்டுபிடித்து காவல்துறைக்கு வழிகாட்டியிருக்கிறார்கள்.
'இந்த சம்பவத்துல, ராத்திரி நேரத்துல அந்த இடத்துக்குப்போன அந்தப் பொண்ணுதாங்க முதல் குற்றவாளி. ரெண்டாவது குற்றவாளி, பொண்ணை அங்க கூட்டிட்டுப்போன அந்தப் பையன். மத்தபடி, அந்தப் பையனை அடிச்சிப் போட்டுட்டு, அந்தப் பொண்ணை பாலியல் வன்கொடுமை செஞ்ச அந்த மூணு பேரையும் நாங்க மூணாவதா தான் குற்றம் சொல்லுவோம்.' இப்படியும் பல சமூக வலைத்தள நீதிபதிகள்.
'அந்த மூணு பேரும் குற்றவாளிங்கதான். ஆனா, அவங்க குற்றம் செய்யுறதுக்கு வாய்ப்புக் கொடுத்தது அந்தப் பையனும் பொண்ணும்தான்.' இப்படியும் சில அர்த்தம் பொதிந்த(!) கருத்துகள்.
'சில நிமிஷ சொகத்துக்காக, பாலியல் வன்கொடுமை செஞ்ச குற்றவாளிங்க மூணு பேரும் தங்களோட வாழ்க்கையையே தொலைச்சிட்டானுங்க.' கருத்து சுதந்திரமே மிரண்டுபோன கருத்து இது.

கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக, நம்மைச் சேர்ந்தவர்களும், நம் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களும், நம் நண்பர்களும், ஏன் நம் வீட்டைச் சேர்ந்தவர்களும் (இருக்க வாய்ப்பிருக்கிறதுதானே), உதிர்த்த முத்துக்களில் சில உதாரணங்கள்தான் மேலே இருப்பவை.
அந்தப்பையனும், பொண்ணும். 'அண்ணன்களே என பன்மையில் அழைத்து, எங்களை விட்டுடுங்கன்னு கையெடுத்து கும்பிட்டு அழுதிருந்தா இப்படி நடந்தே இருக்காது'ன்னு யாராவது கருத்து சொல்லியிருந்தால், கல்வியில் சிறந்த தமிழ்நாடு நம் எல்லாரையும் நினைத்து பெருமையாக உணர்ந்திருக்கும்.
'அந்த ராத்திரி நேரத்துல இந்தப் பொண்ணு ஏன் அங்க போகணும்' என்றவர்களே, காலங்காலமாக காதலர்கள் ஒதுக்குப்புறமான இடங்களில்தானே காதலை வளர்த்தார்கள். இலக்கியங்களில் புன்னை மரங்களும், நம் ஊர்களின் சோளக்கொல்லைகளும், கரும்புக்கொல்லைகளும் காணாத காதல்களா..?
அவர்களிடம் அடாத வேலை செய்தால், மொத்த ஊரும் கட்டி வைத்து உதைக்கும் என்கிற பயமிருந்ததால், ஆணை அடிக்கவோ, பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்யவோ பயந்தார்கள். வன்மம் பிடித்தவர்களால்கூட, அவர்களுடைய வீட்டினரிடம் போட்டுக்கொடுத்து குளிர் காய முடியுமே தவிர, பெரும்பாலும் அத்து மீற முடியாது.

கோவை சம்பவத்தில் அந்தப்பெண் இரவில்தான் ஓர் ஆணுடன் இருந்தாள். அதுவும் ஓர் ஒதுக்குப்புறமான இடத்தில்தான் பேசிக்கொண்டிருந்தாள். அந்த ஆண் அவளை நேசிப்பவனாக இருக்கலாம். நட்புக்கும் காதலுக்கும் இடையில் அவர்களிடையே ஓர் உறவு இருந்திருக்கலாம். அதை முகம் பார்த்து சொல்வதற்காகக்கூட அன்றைய தினம் அவர்கள் சந்தித்திருக்கலாம். எதிர்காலம் குறித்துக்கூட அவர்கள் பேசிக்கொண்டிருக்கலாம். அவர்கள் அங்கு உறவுகொள்ளக்கூட வந்திருக்கலாம். உறவுகொண்டும் இருக்கலாம். ஆனால், அவையெல்லாமே அவர்கள் இருவருடைய பரஸ்பர விருப்பம். மனதுக்குப் பிடித்த ஆணுடன் ஒரு பெண் தனித்து இருப்பதாலேயே, அவளை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பீர்களென்றால், தனி மனித சுதந்திரம் பற்றிய உங்கள் கருத்துதான் என்ன..?
தெருவில் செல்கிற குழந்தையை நாய்க்கடிக்கிறது என்றால், 'நீ தெருவுல போனதால தான் நாய்க்கடிச்சிது என்று பாதிக்கப்பட்ட குழந்தையையே திட்டுவீர்களா..? அடுத்த வீட்டுக் குழந்தைகளையும் வீட்டுக்குள்ளேயே வைத்துக்கொள்ளுங்கள் என்று கருத்து சொல்வீர்களா..? உங்களுடைய மனப்பான்மையும், கருத்துக்களும் பொதுவெளியில் பரவினால், 'நான் கொலை செஞ்சதுக்கு அந்தப்படம் தான் காரணம்' என்று சில குற்றவாளிகள் சொன்னதுபோல, பாலியல் குற்றவாளிகளும், 'ஆமா, அந்தப்பொண்ணு ராத்திரி வெளியே வந்ததாலதான் பாலியல் வன்கொடுமை செஞ்சேன்' என்று சொல்ல ஆரம்பித்துவிடலாம். அதனால், பாதிக்கப்படப் போவது, இரவுப்பணி செய்துவிட்டு அதிகாலையில் வீடு திரும்புகிற உங்கள் மகளாகவும் இருக்கலாம். வேலை முடிந்து இரவு தாமதமாக வீட்டுக்கு வரும் உங்கள் சகோதரியாகவும் இருக்கலாம். உங்கள் மனைவியாகவும் இருக்கலாம்.
நம் வீட்டுப் பெண் குழந்தைகளுக்கு இப்படியொரு விபத்து நிகழ்ந்திருந்தாலும், 'ராத்திரி நேரம், போதை' என்றுதான் பொதுவெளியில் கருத்து சொல்லிக்கொண்டிருப்போமா..?
A 1 குற்றவாளிகளை A 3-க்கு வார்த்தை ஜாலங்களால் நகர்த்துகிற உங்கள் கருத்துக்களால், ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனையும் கடிக்கிற பழமொழிபோல, 'வீட்ல தனியா இருந்தா; பாலியல் வன்கொடுமை செஞ்சுட்டேன்... ஆளரவம் இல்லாத தெருவுல நடந்துபோனா; பாலியல் வன்கொடுமை செஞ்சுட்டேன்... என்னைவிட அதிகமா படிச்சிட்டா, அறிவா இருக்கிறா, என்னை லவ் பண்ணாம இன்னொருத்தனை லவ் பண்ணிட்டா; அதனால பாலியல் வன்கொடுமை செஞ்சுட்டேன்...' என்பார்கள். 'இப்படியெல்லாம் செய்வார்களா' என்று கேலியாக நகைத்தீர்களென்றால், பாலியல் குற்றங்களுக்கு நியாயம் சொல்கிறவர்களும், பாலியல் குற்றவாளிகளின் எதிர்காலத்துக்காக ஆதங்கப்படுகிறவர்களும், பாதிக்கப்பட்டவர்களின் மேலேயே குற்றத்துக்கான காரணத்தை சுமத்துபவர்களும் இன்னும் சில காலம் தங்கள் கருத்தை பொதுவெளியில் பதிவுசெய்துகொண்டே இருந்தால், மேலே சொன்னபடியும் நடக்கும்.
'ராத்திரி நேரத்துல வெளியே வந்தா இப்படித்தான் தண்டனை கொடுப்போம்' என, ஏற்கெனவே இருக்கிற ஆணாதிக்க நெருப்பில், 'அந்த ராத்திரி நேரத்துல இந்தப் பொண்ணு ஏன் அங்க போகணும்' என்கிற உங்கள் பழமையான கருத்துகள் இன்னுமே பெட்ரோலையே ஊற்றும்.

பாலியல் வன்கொடுமைகளுக்கு போதைதான் முக்கியமான காரணம் என்பதிலும், அதை அரசுதான் இரும்புக்கரத்துடன் அடக்க வேண்டும் என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை. அதே நேரம், 'அந்த நேரத்துல இந்தப் பொண்ணு ஏன் அங்க போகணும்; அவனுங்க போதையில இருந்தாங்க' என்பவர்களிடம் கேட்பதற்கு இரண்டு கேள்விகள் இருக்கின்றன.
முதல் கேள்வி, போதை பழக்கம் இருப்பவர்கள், அவர்கள் அம்மாவை 'அம்மா' என்றுதானே அழைக்கிறார்கள்..? இரண்டாவது கேள்வி, நம் வீட்டுப் பெண் குழந்தைகளுக்கு இப்படியொரு விபத்து நிகழ்ந்திருந்தாலும், 'ராத்திரி நேரம், போதை' என்றுதான் பொதுவெளியில் கருத்து சொல்லிக்கொண்டிருப்போமா..?
'இப்படி நடந்திடுச்சேன்னு ஓர் ஆதங்கத்துல தான் சொல்லிட்டோம்' என்பீர்களென்றால், உங்கள் ஆதங்கம் அடுத்தொரு பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை நிகழாமல் தடுக்கப்போவதில்லை. அதற்குபதிலாக, பாதிக்கப்பட்டப் பெண்களுக்கு எதிராக நீங்கள் பதிவிடுகிற அத்தனை கருத்துகளும் 'எவளை எங்கு விழுங்கலாம்' என்று காத்திருக்கிற ஆண்களின் உறுப்புக்களுக்கு இன்னும் விறைப்புத்தன்மையைத்தான் கூடுதலாக்கும். இதைவிட 'வயிறெரிந்த வார்த்தைகள்' சொல்ல முடியுமா என்பது தெரியவில்லை.
இது சுதந்திர நாடு; எக்காலத்திலும், எவ்வேளையிலும், எவ்விடத்திலும் நிற்போம். வாய்ப்புக் கிடைத்தால் குற்றமிழைப்போம் என்கிற எண்ணத்தில் இருப்பவர்களுக்கு 'குலை நடுங்குவதுபோல' ஒரு நல்ல தீர்ப்பை சட்டமும், அரசும் செயல்படுத்தட்டும்.
பாதிக்கப்பட்டப் பெண்ணையும், 13 அரிவாள் வெட்டு வாங்கிய ஆணையும், அவர்கள் உறவையும் கருத்து சுதந்திரம் என்கிற பெயரில், பொதுவெளியில் கொச்சைப்படுத்திக் கொண்டிருப்பது தவறு என்பது ஏன் நமக்கெல்லாம் புரியவில்லை..? இந்த சம்பவம், பாதிக்கப்பட்ட இருவருக்கும், அவர்களுடைய குடும்பத்தினருக்கும் வாழ்நாள் துயரம் என்பது ஏன் நமக்கெல்லாம் புரியவில்லை..?
இது, கோவை மாநகர காவல் ஆணையாளர் சரவண சுந்தர்போல, 'Privacy is there for everyone and no value judgement to be passed' என, நாம் அனைவரும் அவர்களுக்காக பேச வேண்டிய நேரம்... அவர்களுடன் மானசீகமாக நாம் அனைவரும் நிற்க வேண்டிய நேரம்... இது சுதந்திர நாடு; எக்காலத்திலும், எவ்வேளையிலும், எவ்விடத்திலும் பெண்கள் நிற்போம். வாய்ப்புக் கிடைத்தால் குற்றமிழைப்போம் என்கிற எண்ணத்தில் இருப்பவர்களுக்கு 'குலை நடுங்குவதுபோல' ஒரு நல்ல தீர்ப்பை சட்டமும், அரசும் செயல்படுத்தட்டும். அதை துரிதப்படுத்தும் கருத்துக்களை பொதுவெளியில் பகிர்வோம்.

அவை மட்டுமே, நம் வீட்டு மகள்களுக்கும், பேத்திகளுக்குமான பாதுகாப்பை பொதுவெளியில் உறுதிப்படுத்தும். 'அந்த ராத்திரி நேரத்துல இந்தப் பொண்ணு ஏன் அங்க போகணும்' என்கிற வார்த்தை, இனி கெட்ட வார்த்தை ஆகட்டும் நம் சமூக வலைத்தளங்களில்..!












