``சாலைகள் மோசமாக இருந்தால் விபத்துகள் குறைவாக நடக்கின்றன" - பாஜக எம்.பி சர்ச்சைக...
``சாலைகள் மோசமாக இருந்தால் விபத்துகள் குறைவாக நடக்கின்றன" - பாஜக எம்.பி சர்ச்சைக் கருத்து
தெலங்கானாவில் திங்களன்று அரச பேருந்தும், ஜல்லி கற்களை ஏற்றிச் சென்ற லாரியும் செவெல்லா மண்டலத்தில் நேருக்கு நேர் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில், பேருந்து மற்றும் லாரி ஓட்டுநர்கள், தாயுடன் 10 மாத குழந்தை உட்பட 20 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், செவெல்லா மக்களவைத் தொகுதியின் பா.ஜ.க எம்.பி கொண்டா விஸ்வேஷ்வர் ரெட்டி, சாலை விபத்து குறித்துப் பேசியிருக்கும் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
திங்களன்று நிகழ்ந்த விபத்துக்கு கடந்த பி.ஆர்.எஸ் ஆட்சியைக் குற்றம்சாட்டி நேற்று பேசிய கொண்டா விஸ்வேஷ்வர் ரெட்டி, ``இப்போதெல்லாம் சாலைகள் மோசமாக இருந்தால், வாகனங்கள் மெதுவாகச் செல்வதால், விபத்துக்கள் குறைவாக நிகழ்கின்றன.
அதேசமயம் சாலைகள் நன்றாக இருந்தால் பெரிய விபத்துக்கள் ஏற்படுகின்றன.
பிஜப்பூர் தேசிய நெடுஞ்சாலைத் திட்டம் 2016-ல் அறிவிக்கப்பட்டது. ஆனால், அப்போதைய பி.ஆர்.எஸ் அரசு ரியல் எஸ்டேட் நலன்களில் கவனம் செலுத்தியதால் சாலைக்கான நிலம் கையகப்படுத்துதலை முடிக்க முடியாமல் தாமதமானது.
இந்தப் பேருந்து பி.ஆர்.எஸ் அரசின் அலட்சியத்தின் நேரடி விளைவு.
முந்தைய ஆட்சி பொது பாதுகாப்பை விட ரியல் எஸ்டேட் ஆதாயங்களுக்கு முன்னுரிமை அளித்தது.
சாலைப் பாதுகாப்பு விஷயத்தில் அந்த அரசுக்குப் பலமுறை கடிதங்கள் எழுதினேன். இப்போது பல வளைவான சாலைகளுக்குப் பதில் நேரான நெடுஞ்சாலையை அமைக்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறேன்" என்று கூறினார்.
கொண்டா விஸ்வேஷ்வர் ரெட்டியின் இத்தகையப் பேச்சுக்கு பி.ஆர்.எஸ் நிர்வாகி கார்த்திக் ரெட்டி இன்று கடுமையான எதிர்வினையாற்றியிருக்கிறார்.

தெலங்கானா பவனில் பேசிய கார்த்திக் ரெட்டி, ``தேசிய நெடுஞ்சாலை அமைப்புகளை மத்திய அரசின் பொறியாளர்கள்தான் முடிவு செய்கிறார்கள் என்பது தெரியாமல் நீங்கள் எப்படி எம்.பி. ஆனீர்கள்?
அந்தத் திட்டத்தை நிறுத்தியதற்கு உங்கள் சொந்த அரசாங்கத்தையே (மத்திய பா.ஜ.க அரசு) குறை கூறுகிறீர்களா?
நீங்கள் சொன்ன லாஜிக் படி பார்த்தால், உணவு இல்லை என்றால் யாரும் பசியால் வாட மாட்டார்கள். வீடு இல்லை என்றால் புயல் தாக்காது. மின்சாரம் இல்லையென்றால் ஷாக் அடிக்காது" என்று விமர்சித்தார்.













