Sheikh Hasina: வன்முறை டு மரண தண்டனை - வங்கதேச தந்தையின் மகளுக்கு நடந்தது என்ன?
`இறந்துவிட்டார்' என நினைத்த நபரை 28 ஆண்டுகள் கழித்து வீட்டிற்கு இழுத்து வந்த SIR! - என்ன நடந்தது?
மேற்கு வங்கம், தமிழ்நாடு உட்பட சில மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட்டு வருகிறது. இதற்காக SIR படிவம் கொடுக்கப்பட்டு, வாக்காளர்களிடம் நிரப்பி வாங்கப்படுகிறது. இதனால் வெளியூரில் இருப்பவர்கள் கூட சொந்த ஊருக்கு வந்து இப்படிவத்தை நிரப்பிக் கொடுத்துக்கொண்டிருக்கின்றனர்.
மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள பாக்தா என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஜகபந்து மண்டல். இவர் கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு தனது வீட்டை விட்டு வேலைக்காக வெளியூர் சென்றார். அப்போதே ஜகபந்துவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்தன.

ஜகபந்துவை அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் பல இடங்களில் தேடினர். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை. இதனால் ஜகபந்துவின் மனைவி தனது கணவர் இறந்துவிட்டதாக கருதி சடங்குகளைச் செய்துவிட்டு, இரண்டு குழந்தைகளையும் தனியாக வளர்க்க ஆரம்பித்தார்.
28 ஆண்டுகள் கழித்து, ஜகபந்து திடீரென காலை நேரத்தில் தனது வீட்டிற்கு வந்தார். அவரைப் பார்த்தவுடன் ஆரம்பத்தில் யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. அவர் தான் யார் என்று சொன்னவுடன் அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது. அவரை ஜகபந்து என்று நம்பவே முடியவில்லை.
வீட்டில் இருந்த அவரது மனைவி, தந்தை மற்றும் சகோதரர்கள் அவரிடம் பேசிய பிறகு, அவர் ஓடிப்போன ஜகபந்து என்பதில் உறுதியாகினர். இது குறித்து ஜகபந்துவின் மனைவி சுப்ரியா கூறுகையில், “முகம் இப்போது கொஞ்சம் மாறியிருந்தாலும், அது அவர்தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அவரிடம் பேசிப் பார்த்த பிறகு, அவர் என் கணவர்தான் என்பதை உறுதியாக நம்புகிறேன்” என கூறினார்.

இறந்துவிட்டதாக சொன்ன ஜோதிடர்
அவரது தந்தை பிஜோயும் ஓடிப்போன தனது மகனை அடையாளம் கண்டதாக தெரிவித்தார். ஜகபந்து 1997 ஆம் ஆண்டு உள்ளூர் இளைஞர்கள் சிலருடன் வேலை தேடி குஜராத்துக்கு செல்வதாகக் கூறிச் சென்றதாகவும், அதன் பிறகு மீண்டும் தொடர்பு கொள்ளவில்லை என்றும் ஜகபந்துவின் சகோதரர் நிரூபம் கூறினார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஜோதிடரை அணுகி ஜகபந்து குறித்து குடும்பத்தினர் கேட்டபோது, ஜோதிடர் ஜகபந்து இறந்துவிட்டதாக கூறியதாகவும், அதன் பின்னர் அவரது மனைவி விதவைக் கோலம் பூண்டதாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
ஜகபந்து தனது குடும்பத்தினரிடம் ஆரம்பத்தில் தான் குஜராத் சென்றதாகவும், அங்கிருந்து பின்னர் மும்பை சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதன் பிறகு மேற்கு வங்கத்தில் உள்ள பங்குராவிற்கு வந்ததாகவும், அங்கிருந்து மீண்டும் சத்தீஸ்கர் சென்று அங்கேயே தங்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

வாக்களிப்பதற்காக திரும்ப வந்த ஜகபந்து மண்டல்
சத்தீஷ்கரில் வேலை பறிபோனதால், மீண்டும் சொந்த ஊர் திரும்ப முடிவு செய்ததாகவும், இப்போது வாக்காளர் பட்டியல் சரி செய்யப்பட்டு வருவதால் எனது பெயர் சொந்த ஊரில் இருக்கும் என்றும் அதனை தக்கவைத்துக் கொள்ள திரும்ப வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் பங்குராவில் அவர் சில காலம் தங்கி இருந்தபோது அங்கு அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. அதோடு வாக்காளர் பட்டியலில் அவரது பெயருக்கு அருகில் சுலேகா மண்டல் என்ற மற்றொரு பெயர் உள்ளது. அந்த பெண் தனது கணவர் பெயரை ஜகபந்து மண்டல் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் தான் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவே இல்லை என்று ஜகபந்து திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அவரது சொந்த ஊரில் வாக்காளர் பட்டியலில் இருந்து அவர் இறந்துவிட்டதாக கூறி பல ஆண்டுகளுக்கு முன்பே அவரது பெயர் நீக்கப்பட்டு விட்டதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
2002 ஆம் ஆண்டே அவரது பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விட்டது. சொந்த குடும்பத்தினரே ஜகபந்து இறந்துவிட்டார் என்று சொன்ன பிறகு இனி எப்படி அவருக்கு வாக்காளர் அடையாள அட்டை கொடுக்க முடியும் என்று உள்ளூர் வாக்குச்சாவடி அதிகாரி தெரிவித்தார்.
அவர் உயிரோடு இருக்கிறார் என்பதை நிரூபித்து போதிய ஆவணங்களை கொடுத்தால் மட்டுமே மீண்டும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முடியும் என்று தெரிவித்துள்ளனர்.



















