IPL 2026: `தலையாகவோ, வாலாகவோ இருக்க நான் சிஎஸ்கேவுக்கு போகலை, அங்க..!' - தோனி கு...
``எனக்கு `அந்த' நடிகை வேண்டும் எனக் கேட்டால்.!" - சி.வி.சண்முகம் சர்ச்சைப் பேச்சு
விழுப்புரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் ஆகியவற்றை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க அரசை கண்டித்து சி.வி சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய சி.வி.சண்முகம், ``ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசைத் தூக்கி எறியக்கூடிய ஒரு அருமையான வாய்ப்பு தற்போது நமக்குக் கிடைத்திருக்கிறது.

இங்கு வருகை தந்திருக்கின்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அனைத்துப் பொறுப்பாளர்களும், நிர்வாகிகளும் மிகுந்த ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும்.
வேட்பாளர் யார் என்பது நமக்கு முக்கியமல்ல. இந்த மக்கள் விரோத அரசை வீழ்த்துவது மட்டுமே நமது லட்சியமாக இருக்க வேண்டும். இந்த அரசு ஒரு கஞ்சா அரசு, போதை அரசு மற்றும் ஏழைகளைப் பற்றிச் சிந்திக்காத அரசு. ஸ்டாலின் அரசை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்தை மக்களிடமும், வாக்காளர்களிடமும் கொண்டு செல்லுங்கள்.
இந்த அரசு செய்யும் தவறுகளையும், குறைகளையும் மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். நீங்கள் உண்மையிலேயே நல்ல நிர்வாகம் செய்திருந்தால், உங்கள் ஆட்சியின் மீது நம்பிக்கை இருந்திருந்தால், எதற்காக இப்போது 5000 ரூபாய் கொடுக்கிறீர்கள்? இது யாருடைய பணம்? மக்களின் பணத்தை மக்களிடமே கொடுத்து ஓட்டு கேட்பது என்ன விதமான நியாயம்? நீங்கள் நேர்மையானவராக இருந்தால், கடந்த 28 மாதங்களாக வழங்காமல் நிறுத்தி வைத்திருந்த பணத்தைக் கொடுத்திருக்க வேண்டும்.

அதைச் செய்யாமல், இப்போது அடுத்த மாதம் பணம் தருவதாகக் கூறி 2000 ரூபாய் கொடுக்கிறீர்கள். இந்தத் தொகையை வைத்துக்கொண்டு மக்கள் கோடை வெயிலுக்கு ஊட்டி, கொடைக்கானல் செல்ல முடியுமா? இந்த 2000 ரூபாய் ஒரு கடைத்தெருவுக்குச் சென்று வரக் கூடப் பத்தாது. இப்படித்தான் இந்த அரசு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.
தினந்தோறும் வசனம் பேசுவதையும், கவிதை சொல்வதையுமே இவர்கள் வேலையாக வைத்திருக்கிறார்கள். அப்துல் கலாம் அவர்கள் 'கனவு காணுங்கள்' என்று சொன்னார். ஆனால் இவர் ஒரு படி மேலே போய், 'உங்கள் கனவைச் சொல்லுங்கள், நான் நிறைவேற்றுகிறேன்' என்கிறார். ஒருவர் தனக்கு 'பிரபலமான நடிகை ஒருவர் வேண்டும்' என்று கேட்டால் இவரால் அந்தக் கனவை நிறைவேற்ற முடியுமா?

இப்படி வேடிக்கையான வாக்குறுதிகளை ஆட்சி முடியும் காலத்தில் கொடுக்கிறார். கடந்த ஐந்து ஆண்டுகளாக இவர் என்ன செய்தார் என்று தெரியவில்லை. ஐந்து ஆண்டுகளாக எதையும் செய்யாமல், இப்போது ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, பைக் மற்றும் கார் ஓட்டுவது என விளம்பரம் தேடுகிறார். ராக்கெட் ஒன்றுதான் இன்னும் ஓட்டவில்லை. இவரை ராக்கெட்டில் வைத்துத் திரும்ப வராத இடத்திற்கு அனுப்பிவிட வேண்டும். மக்களைத் திட்டமிட்டு ஏமாற்றிக் கொண்டிருக்கும் இந்த அரசை அகற்ற அனைத்துக் கழக நிர்வாகிகளும் பாடுபட வேண்டும்." என உரையாற்றினார்.















