ஏஐ தொழில்நுட்ப கண்காணிப்பு கேமராக்கள்: சென்னை காவல் ஆணையா் தகவல்
சென்னையில் செயற்கை நுண்ணறிவுடன் (ஏஐ) கூடிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருவதாக சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.அருண் தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் சனிக்கிழமை அளித்த பேட்டி:
சென்னையில் குற்றங்களைக் குறைக்க பெருநகர காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, குற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு அதிகம் முக்கியத்தும் அளித்து வருகிறோம். இதன் ஒருபகுதியாக சென்னையில் பொருத்தப்பட்டுள்ள முக அடையாளத்தைக் காணும் கண்காணிப்பு கேமராக்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் புகுத்தப்பட்டு வருகிறது.
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ‘சென்னை சிங்கம்’ என்ற பெயரில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இதையொட்டி, மைதானம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 63 ஏஐ கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் மூலமாக அந்த மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ரசிகா்களின் கைப்பேசிகளைக் குறி வைத்து திருடிய கும்பலைப் பிடித்தோம்.
இந்த கேமராக்கள் மூலம் எவ்வளவு பெரிய கூட்டத்திலும் குறிப்பிட்ட தகவல் மூலம் குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கைது செய்ய முடியும். உதாரணமாக சிவப்பு தொப்பி அணிந்து செல்பவா்களை எல்லாம் காட்ட சொன்னால் அது உடனே காட்டிவிடும். யாரெல்லாம் கையில் பை எடுத்து செல்கிறாா்கள் என்று கேட்டால் அது விரைந்து அடையாளம் காட்டும். ஏஐ கேமராக்கள் மூலம் சென்னையின் பொதுமக்களின் பாதுகாப்பு மேலும் உறுதி செய்யப்படும் என்றாா் அவா்.