அரசியல்வாதிகள் - போலீஸ் கூட்டணி: தொழிலதிபர்களை மிரட்டி ரூ.100 கோடி சேர்த்த உ.பி....
கன்னியாகுமரி, குகநாதீஸ்வரர் : 1,000 ஆண்டுப் பழைமை, சோழர்கால மூர்த்தி; வேண்டும் வரம் கிடைக்கும்!
முருகப்பெருமான் சிவனை வழிபட்ட தலங்கள் இந்த தேசம் முழுவதும் உள்ளன. அப்படிப்பட்ட தலங்களில் சென்று வழிபடும்போது சிவனருளும் முருகப்பெருமானின் அருளும் பரிபூரணமாகக் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அப்படி முருகப்பெருமான் லிங்கப் பிரதிஷ்டை செய்து சிவபெருமானை வழிபாடு செய்த தலம்தான் கன்னியாகுமரியில் உள்ள குகநாதீஸ்வரர் கோயில்.
இயற்கை எழில் கொஞ்சும் கன்னியாகுமரியில் ரயில் நிலையம் அருகிலேயே அமைந்திருக்கிறது இந்தத் திருக்கோயில். ஒரு காலத்தில் சோழ மன்னர்கள் பலரும் வந்து வழிபட்டுத் திருப்பணி செய்த இந்தத் திருக்கோயில் கால வெள்ளத்தில் சிதைந்துபோனது. திருவிழாக்கள் உற்சவங்கள் எனக் கொண்டாடப்பட்ட ஈசனின் ஆலயம் புதர் மண்டிப்போய் மனிதர்கள் அணுக முடியாதபடிக்கு ஆனது.

ஈசன் தன்னை மீண்டும் வெளிப்படுத்திக்கொள்ளத் தயாரானார். 30 ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வேயில் பணிபுரிந்த சிவபக்தர் ஒருவர் ஈசனின் கோயிலின் நிலையைக்கண்டு மனம் வருந்தினார். மீண்டும் அதில் பூஜைகள் நடைபெற வேண்டும் என்ற எண்ணம் கொண்டார்.
தன் நண்பர்கள் சிலரைத் துணைக்கு அழைத்துக்கொண்டு சிவாலயத்தை மீட்டெடுத்தார். அங்கே பூஜை நடத்தவும் ஏற்பாடு செய்தார். அதன்பின் பக்தர்கள் ஒவ்வொருவராக வரத்தொடங்க ஈசனின் கருணையால் ஆலயம் மீண்டும் புத்துயிர் பெற்றது.
இங்கே ஈசன் கோனாண்டேஸ்வரன் என்றும், குகனாண்டேஸ்வரன் என்றும் அழைக்கப்படுகிறார். கோயிலின் கருவறை குகை போன்று அமைத்துள்ளதாலும், பிராகாரம் குறுகியிருப்பதாலும், குகநாதீஸ்வரர் என்றே பலராலும் அழைக்கப்படுகிறார்.
ஈசன் மிகப்பெரிய லிங்கமாக இங்கே அருள்பாலிக்கிறார். பார்ப்பவர் மனம் நிறைந்து கண்ணீர் மல்கும். அத்தகைய கருணாமூர்த்தியாகத் திகழ்கிறார் ஈசன். அம்பிகை பார்வதி தேவியாக அருள்பாலிக்கிறார். இத்தல அம்பிகையை வேண்டிக்கொண்டால் திருமணவரம் உடனே கிடைக்கும் என்கிறார்கள்.
மேலும் இந்த ஆலயத்தின் பிராகாரங்களில் நவகிரகங்கள், கன்னி விநாயகர், தட்சிணாமூர்த்தி, கால பைரவர், சண்டிகேஸ்வரர், துர்கை ஆகிய பரிவார மூர்த்தங்களுக்கான சந்நிதிகளும் அமைந்துள்ளன.
இத்தலம் குறித்த செய்தி பகவதி அம்மன் கோயில் தலபுராணத்தில் உள்ளது. அதன்படி குகன் (முருகன்) தன் தந்தையை (சிவன்) வழிபட்ட இடம் இந்த குகநாதீஸ்வரர் கோயில் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வெட்டுகள் கூறும் வரலாறு
இந்த ஆலயத்தில் பல்வேறு கல்வெட்டுக் குறிப்புகளும் கிடைக்கின்றன. கி.பி. 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று, இத்திருக்கோயிலில் உள்ளது. அதில், இத்திருக்கோயில் இறைவனை ‘ராஜராஜப் பாண்டிநாட்டு உத்தமசோழ வளநாட்டு புறத்தாயநாட்டு அழிக்குடி ராஜராஜேஸ்வர முடையார்’ என நீண்ட அடைமொழியோடு குறிப்பிடப்பட்டுள்ளது.
பிற்காலச் சோழர்களின் ஆட்சி கன்னியாகுமரி பகுதியில் நிலவியபோது இந்த குகநாதீஸ்வரர் கோயிலுக்கு திருப்பணிகள் செய்யப்பட்டதாகக் கல்வெட்டுக் குறிப்பில் காணப்படுகிறது.
எனவே, கி.பி.10-ம் நூற்றாண்டுக்கு முன்பே இக்கோயிலில் வழிபாடுகள் நடந்திருக்கலாம் என்று கல்வெட்டு ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
இக்கோயிலில், முதலாம் ராஜேந்திரன், இரண்டாம் ராஜேந்திரன், முதலாம் ராஜாதிராஜன் ஆகிய மன்னர்களின் காலத்தைச் சேர்ந்த சில கல்வெட்டுகள் உள்ளன. அவற்றில் ஒரு கல்வெட்டில், ‘ஒரு செவ்வாய்க்கிழமையில் பூச நட்சத்திரத்தன்று கோயிலின் முக மண்டபத்தில் சபை கூடியது; பக்தர்களும் கூடினர்; இவர்களின் முன்னிலையில் கங்கைகொண்ட சோழபுரத்தைச் சேர்ந்த வியாபாரி ஆச்சான் மாற்றிலி என்பவன் இத்திருக்கோயிலுக்கு நன்கொடை கொடுத்தான்’ என்ற செய்தி குறிப்பிடப் பட்டுள்ளது.
இந்தக் கோயிலிலுக்கு நிவந்தங்கள் அளித்ததவர்கள் விவரமும் கல்வெட்டில் முழுமையாகக் குறிக்கப் பட்டுள்ளது.
பிரார்த்தனைச் சிறப்புகள்
கோடையில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்போது, கோடை வெப்பம் நீங்கி, நாட்டில் நல்ல மழைபெய்ய வேண்டி இக்கோயிலில் 1008 இளநீர் அபிஷேக பூஜை வெகுவிமரிசையாக நடைபெறுவது மிகச் சிறப்பு.
திரளான பக்தர்கள் கலந்துகொள்ளும் இந்த பூஜையில் அபிஷேகம் செய்யப்பட்ட இளநீரை பாட்டில்களில் நிரப்பி, பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்குவர்.
இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று 1008 சங்காபிஷேகம் நடப்பது வழக்கம். அன்றைய தினத்தில் கணபதி ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம், கோமாதா பூஜை, சங்கு பூஜை ஆகியவை தொடர்ந்து நடைபெறும். அன்றைய தினம் 12.30 மணிக்கு ரிஷப வாகனத்தில் நடராஜர் எழுந்தருளி, மேளதாளம் முழங்க கோயிலின் வெளிப்பிராகாரத்தைச் சுற்றி பவனி வரும் நிகழ்ச்சி வெகு பிரபலமாகும்.
ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தன்று நடைபெறும் அபிஷேகம் வெகு சிறப்பானது. அன்றைய தினம் விரதமிருந்து குகநாதீஸ்வரரை வழிபட்டால், குடும்ப பிரச்னைகள் நிவர்த்தியாகும் என்பது ஐதிகம்.

கார்த்திகை மாதம் சோமவாரம் திங்கட் கிழமை மூலவருக்கு சிறப்பு ஆராதனை நடைபெறும். அப்போது கிரிதாரை, நெய் தாரை, இளநீர்தாரை போன்ற நேர்ச்சை அபிஷேகங்கள் தொடர்ச்சியாக நடைபெறும். பொதுவாக, ஆண்களைவிட பெண் பக்தர்களே இக்கோயிலுக்கு அதிக அளவில் வருகின்றனர். பெண் பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறினாலே குடும்பம் தழைக்கும் என்பது இத்திருக் கோயிலுக்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை.
மேலும் குகநாதீஸ்வரரிடம் மனமுருகி வேண்டினால், நமது வேண்டுதல்கள் நிறைவேறுவதோடு தொலைந்த பொருள்களும் சீக்கிரம் கிடைக்கும் என்கிற நம்பிக்கையும் உள்ளது. அதற்கு இந்தப் பகுதியில் வாழும் பக்தர்கள் பலரும் சாட்சிகள் பகர்கின்றனர். இப்படிப்பட்ட அற்புதமான பலன்களை அருளும் திருக்கோயிலுக்கு நாமும் சென்று வழிபடுவோம். குகநாதீஸ்வரர் நம் மனத்தின் வேண்டுதல்களை எல்லாம் நிறைவேற்றி அருள்வார்.



















