BB Tamil 9: `ஆட்டத்தை ஆரம்பித்த பழைய போட்டியாளர்கள்’ - மீண்டும் கலவரம் ஆகும் பிக...
நாகைமாவட்டம், கோழிகுத்தி : பாவங்கள் போக்கும் அத்திமரப் பெருமாள்; சனி தோஷம் நீக்கும் ஆஞ்சநேயர்!
வானமுட்டிப் பெருமாள்
தெய்வத்திருவுருக்கள் செய்ய ஏற்ற மரங்களில் ஒன்று அத்தி மரம். அத்தி மரத்துக்கு “ஔடும்பர விருக்ஷம்” என்ற பெயரே உண்டு. அதை விஷ்ணுவின் ரூபம் என்று சொல்லுவார்கள். ஆகையால், இந்த மரத்தில் செய்யும் திருவுருக்கள் மிகவும் மகிமை பொருந்தியவை.
காஞ்சி வரதராஜர் கோயிலில் உள்ள அத்திவரதர் மிகவும் புகழ்பெற்ற திருமேனி. அதேபோன்று பழமையும் மகிமையும் உடைய பெருமாள் திருமேனி ஒன்று உண்டு - அதுதான் கோழிக்குத்தி என்னும் ஊரில் அமைந்துள்ள வானமுட்டிப் பெருமாள்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில், மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், மூவலூருக்கு வடக்கே சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கோழிக்குத்தி கிராமம்.
சுமார் 14 அடி உயரம் கொண்ட பிரமாண்ட திருக்கோலத்தில் அருள்பாலிக்கும் இந்தப் பெருமாளை தரிசனம் செய்தாலே, திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்த பலன் கிடைக்கும் என்கிறார்கள்.
வாருங்கள், இத்தலத்தின் மகிமைகளையும் தல புராணத் தகவல்களையும் தெரிந்துகொள்வோம்.

‘கோடிஹத்தி’ எனும் பெயரே மருவி ‘கோழிக்குத்தி’ என ஆனது. இதை புராணக் காலத்தில் ‘சாபவிமோசனபுரம்’ என கூறுவர்.
பிப்பலர் என்ற மகரிஷி ஒரு முறை சரும நோயால் பெரிதும் பாதிக்கப்பட்டார். தமக்கு ஏன் இந்த நோய் ஏற்பட்டது என்பதை உணர்ந்து கொள்ள முடியாமல் திண்டாடினார். பெருமாளை மனம் உருக வேண்டிக் கொண்டார். அன்று இரவு பிப்பலரின் கனவில் எம்பெருமான் காட்சி தந்தார்.
முன்னஜன்மத்தில் அவர் செய்த பாவத்தைச் சுட்டிக்காட்டி, அதன்பலனாகவே இந்த வியாதி ஏற்பட்டுள்ளது என்பதை எடுத்துக் காட்டினார். “இந்த நோய் நீங்க வேண்டுமென்றால், காவிரிக்கரையோரம் உள்ள தலங்களுக்கு யாத்திரை செய்; அப்போது மூவலூர் எனப்படும் திருத்தலத்தில் உனக்கு விமோசனம் கிடைக்கும்” என்று கூறி அருளினார்.
கனவு கலைந்து எழுந்த பிப்பலர் மறுநாள் காலை தன் யாத்திரையைத் தொடங்கினார். வழியில் உள்ள தலங்களை எல்லாம் தரிசித்து உளமார வழிபட்டு மூவலூரை அடைந்தார். மூவலூரில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீமார்க்க சகாயேஸ்வரர் ஆலயத்தில் மனமுருக வேண்ட, ஈசன் மனம் மகிழ்ந்து, 'வடக்கு நோக்கிச் சொல்' என்று அசரீரியாக உரைத்தார்.
அதன்படி அவர் செல்ல ஓரிடத்தில் இருந்த அத்தி மரம் ஒன்றைக் கண்டார். அந்த மரத்தைச் சுற்றி ஒளி வீசுவதுபோல் தோன்ற பிப்பலர் பக்தியோடு அதை நெருங்கினார். அப்போது அந்த மரத்தில் இருந்து வெளிப்பட்டு விஸ்வரூப பெருமாள் ஒருகணம் காட்சி கொடுத்தார். அந்தக் காட்சியில் உடல் சிலிர்க்க நின்ற பிப்பலர் அடுத்த கணம் தன் சரும வியாதி நீங்கியிருப்பதை உணர்ந்தார்.

அவர் உடல் முன்னிலும் இளமையோடும் பொலிவோடும் திகழ்ந்தது. சரும நோயிலிருந்து விடுபட்ட பிப்பலர், பின்னர் அங்கேயே தங்கிப் பெருமாளை வழிபத்த் தொடங்கினார்.
அங்கு ஓடும் காவிரி நதிக்கு 'பிப்பல மகரிஷி தீர்த்தம்' என்றே பெயர் ஆனது. அங்கு அழைக்கிறார்கள். இங்கு காவிரியில் நீராடி பெருமாளை வழிபட்டால், பிணிகள் தீரும் என்கிறார்கள். அந்த இடத்திலேயே அத்தி மரத்தில் பெருமாளுக்குத் திருமேனி அமைந்து திருக்கோயிலும் எழுப்பட்டது.
வானம் முட்டும் என்பது போன்று பிரமாண்ட திருமேனியாக எழுந்தருளியிருக்கும் பெருமாள் என்பதால் வானமுட்டி பெருமாள் என்றே திருநாமம் ஏற்பட்டது. இவரது கம்பீரமான தோற்றத்தைக் கண்டாலே மனதில் மகிழ்ச்சியும் தைரியமும் அதிகரிக்கும்.
இங்கு, பெருமாளுக்கு இடப் பக்கத்தில் பூதேவித் தாயாரின் சிறு விக்கிரகம் உள்ளது. தாயாருக்கெனத் தனி சந்நிதி இல்லை. ஒரே ஒரு பிராகாரம்தான் இருக்கிறது. இத்தலத்தில் நரசிம்ம மூர்த்தியே உற்சவராக அருள்கிறார்.
இவரை வணங்கி வழிபட்டால், கிரக தோஷங்கள், பகைவர்கள் தொல்லை, கடன் பிரச்னை, வியாதிகளில் இருந்து நிவாரணம் ஆகியன கிடைக்கும் என்பது நம்பிக்கை.
கோழிகுத்தி ஸ்ரீவானமுட்டி பெருமாள் அத்திமரத்தால் ஆனவர் என்பதால் கருவறையில் தீபங்கள் ஏற்றப்படுவதில்லை. அபிஷேகங்களும் கிடையாது. தைலக்காப்பு மட்டுமே.
இந்தத்திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு ’சப்தஸ்வர ஆஞ்சநேயர்’ என்பது திருநாமம். இந்தத் திருமேனியின் மீது 7 இடங்களில் தட்டினால் 'சரிகமபதநி' என்று சப்தஸ்வரங்களும் எழுமாம்.
மேலும் ஆஞ்சநேயர் வாலில் கட்டப்பட்டுள்ள மணியைத் தன் தலைமீது தூக்கி வைத்துள்ள திருக்கோலத்தில் அருள்கிறார். சப்தஸ்வர ஆஞ்சநேயரை வழிபட்டால் ஏழரை சனி, அஷ்டமசனி, சனி தசை மற்றும் ஜாதகத்தில் சனிதோஷம் உள்ளவர்கள் வழிபட்டால் சனியின் பார்வையால் உண்டாகும் கெடுபலன்கள் குறையும். நற்பலன்கள் அதிகரிக்கும் என்கிறார்கள்.

இப்படி அற்புதத் திருமேனியோடு அருளும் பெருமாளை வாய்ப்பிருப்பவர்கள் ஒருமுறை வந்து தரிசித்துச் செல்லுங்கள். பெருமாளின் திருவருள் உங்கள் வாழ்வை சிறப்பாக்கும்.

















