TVK : 'கரூரில் திட்டமிடப்பட்ட பாதுகாப்பு குறைபாடு!' - தவெக தீர்மானம்!
BB Tamil 9 Day 30: கிளைமாக்ஸ் இல்லாத அடிதடி Prank; பாருவை பங்கமாகக் கலாய்த்த விருந்தினர்கள்!
இந்த எபிசோடில் ஹோட்டல் டாஸ்க். ‘ஆஹா.. ஓஹோ’ என்றொரு ஹோட்டல் முன்பொரு காலத்தில் புகழோடு இருந்ததாகவும், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல குறைந்து இப்போது வியாபாரம் ஈயோட்டும் நிலைமைக்கு ஆகி விட்டதாகவும் விவரித்தார் பிக் பாஸ்.
இது ஹோட்டலுக்கு மட்டுமல்ல, பிக் பாஸ் தமிழ் சீசனுக்கே பொருந்தும். கழுதை தேய்ந்து கம்பளிப்பூச்சியான கதையை சுயவாக்குமூலமாக சொன்னது பிக் பாஸின் நோ்மை.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 30
‘அவனை யாராவது தடுத்து நிறுத்துங்களேண்டா’ என்கிற மாதிரி தன் வழக்கமான அலப்பறையை செய்து கொண்டிருந்தார் திவாகர். “அதாவது அக்கா.. நான் வாட்டர் மெலன் ஸ்டார். ஹீரோ மெட்டீரியல். இதெல்லாம் மக்களா எனக்கு கொடுத்த பட்டம்” என்று சாண்ட்ராவிடம் அவர் அளந்து விட்டுக் கொண்டிருக்க “ரொம்ப கிரிஞ்சா இருக்கு” என்று சாண்ட்ரா சொன்னவுடன் நடிப்பு அரக்கனுக்கு கோபம் வந்து விட்டது. எனவே இருவருக்கும் வாக்குவாதம்.
“என்னை ஏன் bad character-ன்னு சொன்னீங்க?” என்று சாண்ட்ரா, திவாகரிடம் கேட்க ஆரம்பித்ததுதான் இந்த வினை. “நீங்க ஏன் என்னை கிண்டல் பண்ணீங்க?” என்று திவாகர் கேட்க “அதுக்கு bad character-ன்னா சொல்லுவாங்க.. அதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா?” என்று சாண்ட்ரா கேட்க சீரியஸ் காமெடியாக இருந்தது.
இதை தூரமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பிரஜின், மனைவிக்கு சப்போர்ட்டாக போகலாமா, போனால் தவறாகி விடுமா என்றெல்லாம் நினைத்துக் கொண்டே உலவிக் கொண்டிருந்தார் போல. ஒரு கட்டத்தில் மனம் பொறுக்காமல் அவரும் உள்ளே புகுந்து ‘bad character-ன்னு சொல்லலாமா?” என்று களம் இறங்கி விட்டார். “பொம்பளை முன்னாடி கைய நீட்டி பேசாதீ்ங்க” என்று சண்டை வலுக்க ‘தல’ திவ்யா இங்கேயும் வர வேண்டியிருந்தது. (பாருவை சமாளிக்கவே நேரம் போதல. இவங்க வேற!).
கிளைமாக்ஸ் இல்லாத அடிதடி Prank
நாள் 30. பிரவீன், பிரஜின், கம்ருதீன் ஆகிய மூவரும் கூடி கூடி பேசிக் கொண்டிருந்தனர். Prank செய்ய திட்டமிடுகிறார்களாம். இதை நமக்கு முன்பே சொல்லாமல் இருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும். “இதை நாம தத்ரூபமா செய்யணும்.. என்ன.. 1 டிஷர்ட் கிழியும். சண்டைல கிழியாத சட்டை இருக்கா?” என்றார் பிரவீன்.

Prank ஆரம்பித்தது. மெல்ல மெல்ல பில்டப் கொடுக்காமல் “அவ்ளதான் உனக்கு மரியாத” என்று பிரவீன் கோபமாக சொல்ல, கம்ருதீன் உடனே பாய்ந்து வந்து அடிப்பது போல் ஆக்ரோஷமானார். மற்றவர்கள் பதறி தடுக்க முயல, இதில் கம்ருதீனுக்கும் பிரஜினுக்கும் இடையே கூட மோதல் ஏற்பட, அவரது மனைவி சாண்ட்ரா கதறியழ ஆரம்பித்து விட்டார். (எல்லோரையும் தரதரன்னு வெளியே இழுத்து வந்து போட்டு பினாயில் ஊத்தி கழுவணும்ன்னு கெத்தா சொன்னவங்க!).
மூவரும் அப்படியே கன்ஃபெக்ஷன் ரூமிற்கு சென்று ‘கபகபகப’வென்று சிரித்தார்கள். “டேய் நெஜம்மாவே என்னை அடிச்சிட்டே” என்று முகத்தில் ஏற்பட்ட காயத்தை பிரவீன் காண்பிக்க “Prank-ஐ சாக்கா வெச்சு நான் போட்ட பிளான்டா அது’ என்பது கம்ருதீனின் மைண்ட் வாய்ஸாக இருந்திருக்க வேண்டும்.
“வெளிய பார்த்தத விட பாரு கொடூரமா இருக்கா” - சாண்ட்ரா
Prank என்பது மற்றவர்களை சிரிக்க வைப்பதாக இருக்கவேண்டும். இப்படி பதற வைக்கும் வகையில் இருக்கக்கூடாது. இதன் கிளைமாக்ஸே மற்றவர்கள் உண்மையை உணர்ந்து “ஏண்டா.. இப்படிப் பண்ணீங்க?” என்று சிரிப்பதுதான். ஆனால் இதை அப்படியே டீலில் விட்டு விட்டார்கள்.
“திவாகர்.. மைக்கை மாட்டுங்க” என்று பிக் பாஸ் ரீப்பீட்டாக எச்சரித்தார். பாரு, திவாகரை ‘அண்ணே..’ என்று அழைப்பது ‘டேய் வென்று’ என்பது போலவே இருக்கிறது. எனவே அதே டோனில்.. ‘அண்ணே.. மைக்கை இப்படி மாட்டுங்க’ என்று எரிந்து விழுந்தார். ‘தல’ திவ்யாவும் இதை திவாகரிடம் சொல்ல “எல்லாம் மாட்டுவாங்க. மாட்டுவாங்க. மாட்டாம எங்க போகப் போறாங்க” என்று வடிவேலு ஸ்லாங்கில் பாரு சொல்ல “நான் உன் கிட்ட பேசல.. திவாகர் அண்ணன்ட்டதான் பேசறேன்” என்று திவ்யா சொன்னாலும் பாரு அடங்கவில்லை.
பதிலுக்கு பதில் பேசிக் கொண்டே போக “வெளிய பார்த்தத விட கொடூரமா இருக்காளே?!” என்று பயத்துடன் வியந்தார் சாண்ட்ரா. (உங்க கிட்ட பாரு மாட்டலை. பாரு கிட்டதான் நீங்க மாட்டியிருக்கீங்க!)

வில்லத்தனமாக சிரித்து மகிழ்ந்த பாரு
ஹோட்டல் டாஸ்க் ஆரம்பித்தது. திவ்யா மேனேஜராம். உதவி மேனேஜராக பாருவை நியமித்து சரியாக கோத்துவிட்டார் பிக் பாஸ். அது சரியாகவே வேலை செய்தது. “டேய்.. கீழே தொடைடா.. நீ புடுங்கறதெல்லாமே தேவையில்லாத ஆணிதான்” என்று காண்டிராக்டர் நேசமணி மாதிரியே பாருவிடம் மாட்டிக்கொண்டு திவ்யா அல்லாட வேண்டியிருந்தது.
இந்த ஹோட்டல் டாஸ்க்கில் அதிக ஸ்டார் வாங்குபவர்கள், ‘தல’ டாஸ்க்கில் பங்கு பெறலாம்.
ஏதோவொரு அறிவிப்பை திவ்யா செய்ய “உங்க மைக்கை சரியா மாட்டுங்க” என்று பிக் பாஸ் சொல்ல, பாருவிற்கு சொல்லியா தர வேண்டும்? அவர் நக்கலாக சிரிக்க, திவ்யா காண்டாகி “ரொம்ப கேவலமா இருக்கு. மூடிட்டு உக்காரு” என்கிற மாதிரி சைகை காட்ட, இப்போது பாரு காண்டாகி “என்ன பண்ணீங்க..அது என்ன ஆக்ஷன்.. என் கிட்டலாம் வெச்சுக்காதீங்க” என்று அரைமணி நேரத்திற்கு அதையே புலம்பிக் கொண்டிருந்தார்.
“எனக்கு இந்தப் பதவி கொடுத்ததுக்கு லவ்யூ பிக் பாஸ். என்னோட ஃபுல் போகஸ் திவ்யாதான். மேனேஜர் சொல்றதைத்தான் செய்வேன்” என்று சர்காஸமாக சொல்லி வில்லத்தனமாக சிரித்துக் கொண்டிருந்தார் பாரு. விக்ரமிற்கு கூடுதல் பொறுப்பு தந்தார் பிக் பாஸ். விருந்தினர்களை என்டர்டெயின் செய்யும் வேலை. (பாவம் பிக் பாஸ். விக்ரமிடந்து காமெடியை பிழிந்தெடுக்க விதம் விதமாக மோட்டிவேட் செய்து பார்க்கிறார்.. ஆனால் ஒன்றும் நடக்கவில்லை!).

பாருவை பங்கமாகக் கலாய்த்த விருந்தினர்கள்
இருப்பதிலேயே பாவமான ரோல் சபரிக்கு. வெளியே சிலையாக நிற்க வேண்டும். “இங்க தலயா கூட இருந்துடலாம். ஆனா சிலயா நிக்கறது கஷ்டம்” என்று அவர் ரைமிங்கில் அடித்து விட அதையே வைத்து பாட்டு பாடினார் வினோத்.
‘விருந்தினர்கள் சில நிமிடங்களில் வந்து விடுவார்கள்’ என்கிற அறிவிப்பு வந்தது. மேனேஜர் என்கிற ஹோதாவில் “பாரு. எல்லா சரியா இருக்கான்னு பார்த்துட்டு வாங்க’ என்று திவ்யா சொல்ல “இப்பத்தான் பார்த்தேன். எல்லாம் சரியாத்தான் இருக்கு” என்று பாரு நகராமல் இருக்க ‘கடவுளே.. இவளை வெச்சிக்கிட்டு’ என்று தலையில் அடித்துக் கொண்டு திவ்யாவே உள்ளே சென்று டோர் மேட்களை இழுத்துப் போட்டு சரி செய்தார்.
வருகிற சிறப்பு விருந்தினர்கள் யாரென்று பார்த்தால், ஏற்கெனவே இந்த ஜெயிலில் இருந்து ரிலீஸ் ஆனவர்கள்தான். பிரியங்கா, மஞ்சரி, தீபக். இதில் மஞ்சரியும் தீபக்கும் பாருவை மறைமுகமாக கிண்டல் செய்ததுதான் நமக்கு சுவாரசியமாக இருந்தது. பாரு செய்கிற அடாவடிகளால் ஏற்படுகிற எரிச்சலுக்கு இதமாக இருந்தது.
“இங்க ஸ்பா இருக்கு.. தலவலி.. உடம்பு வலில்லாம் போயிடும்” என்று பாரு அமர்த்தலாக சொல்ல “காதுவலி போகுமா… அதுக்கு .. நீங்க பேச்சைக் குறைச்சுக்கணும்” என்று மஞ்சரி சொன்னது நல்ல கவுன்ட்டர்.

‘நடிப்பு அரக்கன்றது மக்கள் கொடுத்த பட்டம்’ - திவாகர் அலப்பறை
கிச்சன் ஏரியாவில் திவாகர் உண்மையாகவே ஈ ஓட்டிக் கொண்டிருந்தார். ‘மிச்சமிருக்கிற மானத்தை இவன் போக்கிட்டான்’ என்கிற காமெடியாக ஏற்கெனவே ஹோட்டல் நஷ்டத்தில் போய்க் கொண்டிருப்பதின் குறியீடு போல. ‘பரியேறும் பெருமாள்.. பி.ஏ.பி.எல்.. மேலே ஒரு கோடு’ என்பது போல எப்போது தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாலும் ‘டாக்டர் திவாகர் BPT.. மக்கள் கொடுத்த பட்டம்.. வாட்டர் மெலன் ஸ்டார்.. நடிப்பு அரக்கன்’ என்று சொல்லி இம்சை செய்கிறார்.
“வாட்டர் மெலன் ரீல்ஸ் போடறேன்னு சொல்லி.. கையை நீட்டி நீட்டி மத்தவங்க கண்ணைக் குத்திடுவாரு. இவருக்கு இதான் வேலை” என்று டைமிங்கில் கிண்டலடித்தார் வினோத். ‘டாக்டரா இருந்து இங்க வந்து ஷெஃப் ஆயிட்டாரு” என்றதும் சுவாரசியம். “எங்க மெனுல.. புளி சாதம்.. தயிர்சாதம்லாம் இருக்கு” என்று அடுக்கிக் கொண்டு போனார். வியன்னா. (அதென்ன ஹோட்டலா.. இல்ல கோயில் பிரசாதம் தர்ற இடமா.. இப்பத்தான் தெரியுது. ஏன் பிஸ்னஸ் லாஸ் ஆச்சுன்னு!).
சிம்பு ரசிகனான துஷார் ‘பன்ச்’ டயலாக் பேசி விட்டு நடனம் ஆடி விருந்தினர்களை மகிழ்வித்தார். ரிமோட் காலியாகும் சமயத்தில் பொம்மை ஆடியதைப் போலவே இருந்ததை அரோரா பெருமையுடன் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.
“நீ ரூம் சர்வீஸ்தான். கெஸ்ட்டுங்க கிட்ட போய் மெனு சொல்லக்கூடாது” என்று அஸிஸ்டென்ட் மேனேஜர் பாரு கெத்துடன் சொல்ல “அதெல்லாம் நான் பண்ணுவேன். சீ பே’ என்கிற மாதிரி பதிலடி தந்தார் பிரவீன். இருவரும் ரகசியமாக சண்டை போட்டுக் கொண்டார்கள். ‘அந்த பயம் இருக்கணும்’ என்று பிரவீன் சொல்ல ‘பயமா. எனக்கா. யார்ட்ட’ என்கிற மாதிரி திரும்பி வந்தார் பாரு.

‘திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்’ - பாருவிற்கு ஊமைக்குத்து
“ஏதாவது பாட்டு பாடுங்க. பாரு.. நானே எடுத்துக் கொடுக்கறேன்.. திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்”.. என்று பாருவிற்கு ஊமைக்குத்தாக குத்தினார் தீபக். இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொண்ட கனி, தன் பரம எதிரியான பாருவிற்கு எதிராக உற்சாகமாக பாடி இணைந்து கொண்டார். பதிலடியாக பாரு எதையாவது செய்ய வேண்டும் அல்லவா? ஆனால் சொதப்பலாக ‘நான் ஆணையிட்டால்’ பாடலை தப்பும் தவறுமாக பாடினார். இப்படியே இந்த அந்தாக்ஷரி “போடா.. போடா.. புண்ணாக்கு.. போடாத தப்புக் கணக்கு’ என்று நீண்டது.
“சபரிக்கு பதிலாக பாருவை சிலையாக நிக்க வைத்திருக்கலாம். அவளை வெச்சிட்டு எங்களால முடியல. இம்சையா இருக்கு” என்று விருந்தினர்களிடம் வேண்டுகோள் வைத்துக் கொண்டிருந்தார் விக்ரம். (நல்ல ஐடியா!). அதையே பலமாக ஆமோதித்தார் திவ்யா.
“ஓகே.. எல்லோரும் ஒரு நிமிஷம் மௌனமா இருக்கலாமா.. பார்வையாளர்களுக்கும் கொஞ்சம் ஆசுவாசமா இருக்கும்” என்று மஞ்சரி சர்காஸமாக சொல்ல, அனைவரும் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினார்கள். (இந்த சீசனுக்கான குறியீடு போல!) “நீங்க செய்யற சர்வீஸ் பார்த்து நாங்க ஸ்டார்ஸ் கொடுப்போம்.. பிடிக்கலைன்னா அதை பறிக்கவும் செய்வோம்.. பார்த்து நடந்துக்கங்க” என்று விருந்தினர்கள் எச்சரிக்கை தந்தார்கள்.
‘நீலாம்பரி’ பாத்திரத்தில் நடனமாடிய பாரு
சிறப்பு விருந்தினர்கள் மூவரும் தனியாக அமர்ந்து பேசினார்கள். “நாம எவ்ளதான் டிரிக்கர் பண்ணினாலும் கோபப்படமா பணிவா இருக்காங்க. கவனிச்சியா?” என்று பிரியங்கா கேட்க “ஸ்டார்ஸ் வேணுமில்ல.. அதான் காரணம்.. இல்லாட்டி இவங்களா இப்படி இருப்பாங்க?” என்றார் மஞ்சரி. ‘கனிக்கும் பாருவிற்கும் இடையில் பனிப்போர்’ என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. ‘இந்த துஷார் பய.. உண்மையிலே மந்தமா.. அல்லது அப்படி நடிக்கறானா?” என்றும் அலசப்பட்டது.
படுக்கை விரிப்புகளை கலைத்துப்போட்ட பிரியங்கா “எனக்கு swan மாதிரி பண்ணிக் கொடுங்க” என்று கேட்க வினோத்தும் சுபிக்ஷாவும் உள்ளே வந்து அதைச் செய்ததில் ‘ஸாரி மேடம். ரெட்டைத் தலை பாம்பு மாதிரி வந்துடுச்சு” என்று வினோத் சொல்ல அடக்க முடியாமல் சிரித்தார் பிரியங்கா.

‘மின்சார பூவே’ பாடலுக்கு நடனமாடினார் பாரு. (இன்னமும் என்னென்ன கொடுமைகளை பார்க்கணுமோ?!) நீலாம்பரி பாத்திரம் மிகப் பொருத்தமானது. அந்த கலை நிகழ்ச்சியில் மனம் ஒன்றி பங்கேற்காத பிரஜினிடம் பாரு சண்டை போட “அந்த கேரக்டர் என்னன்னு பாரு..” என்று சமாளித்துக் கொண்டிருந்தார் பிரஜின்.
வறண்டு போய்க் கொண்டிருந்த இந்த சீசனில் ‘ஹோட்டல் டாஸ்க்’ கொஞ்சம் சுவாரசியத்தை ஏற்படுத்தியது. அதிலும் பாரு கலாய்க்கப்படும் போதெல்லாம் ‘இன்பத் தேன் வந்து பாய்ந்தது காதினிலே’ மொமன்ட்.















