Udhayanidhi: திமுக இளைஞரணிச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுகிறாரா உதயநிதி ஸ்டால...
கருணாஸ் தயாரிப்பில் கென் கருணாஸ்; வெற்றிப்பட இயக்குநருடன் இணையும் கென்! | Exclusive Update
'யூத்' படத்தின் மூலம் இயக்குநராக, ஹீரோவாக கவனம் ஈர்த்தவர் கென் கருணாஸ். அந்தப் படத்தை அடுத்து சத்தமில்லாமல் வெற்றிமாறனின் இயக்கத்தில் 'ராஜன் வகையறா'வில் நடித்து வருகிறார்.
காதலும், ஃபேமிலி சென்டிமென்ட் கதையைக் கொடுத்த கென் கருணாஸ், அடுத்து இதே போல் ஒரு ஜானரைத் தொடாமல் 'வடசென்னை' சீக்குவென்ஸ் கதைக்குள் நடித்து வருவது பலரையும் புருவம் உயர்த்த வைத்தது.
இந்நிலையில் 'கட்டா குஸ்தி, 'கட்டா குஸ்தி 2' படங்களின் இயக்குநர் செல்லா அய்யாவுடன் கைக்கோர்த்திருக்கிறார் கென் கருணாஸ்.

கென் கருணாஸின் 'யூத்' படத்தில் பிரவீனாகக் கலக்கியிருந்தார் கென். மேல்நிலைப் படிப்புக்குச் செல்லும் பிரவீனுக்கு அங்கு அடுத்தடுத்து மூன்று காதல்கள் அரங்கேறுகின்றன. படிப்பில் கவனம் செலுத்தாமல் முழுக்க முழுக்க 'லவ் லவ் லவ்' என மூழ்கிக்கிடக்கிறார் பிரவீன்.
இந்தக் காதல்கள் அவருக்குள் எப்படியான தாக்கங்களையும், மாற்றங்களையும் கொண்டு வருகின்றன என்பனதான் 'யூத்'தின் கதை. இந்தப் படம் வெற்றிமாறன், தனுஷ் எனப் பிரபலங்கள் பலரையும் கவர்ந்து இழுந்துவிட்டது. 'யூத்'தைத் தொடர்ந்து வெற்றிமாறனின் 'ராஜன் வைகையறா'வில் நடித்து வருகிறார் கென்.
இதன் படப்பிடிப்பு மும்முரமாக ஒரு பக்கம் நடந்து வருகிறது. இதற்கிடையில் தனது அடுத்த படத்தை அறிவிக்க உள்ளார் கென். அடுத்து அவர் செல்லா அய்யாவின் இயக்கத்தில் நடிக்கிறார்.

இதைப் போல சமீபத்தில் வெளியாகி இன்னமும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'கட்டா குஸ்தி 2' இயக்குநர் செல்லா அய்யாவு, மீண்டும் விஷ்ணு விஷாலுடன் கைகோர்ப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
இந்நிலையில்தான் அடுத்து அவர் கென் கருணாஸை வைத்து இயக்குகிறார். செல்லா அய்யாவின் முந்தைய படங்களைப் போல, இதுவும் காமெடி, ஃபேமிலி, எமோஷனல் டிராமாவாக இருக்கும் என்கிறார்கள்.
'கட்டா குஸ்தி'யின் பாகங்களில் தனி கவனம் ஈர்த்திருந்தார் கருணாஸ். அவரின் குட் புக்கில் செல்லா அய்யாவும் இருந்து வருவதால் கென் - செல்லா இணையும் படத்தைத் தயாரிக்கிறார் கருணாஸ். நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம் அடுத்தடுத்து வெளியாகும் எனத் தெரிகிறது.

கருணாஸ் இதற்கு முன் பிரசாந்தின் 'தகப்பன் சாமி', ராம் இயக்கத்தில் ஜீவா நடித்த 'கற்றது தமிழ்' உள்பட பல படங்களை விநியோகம் செய்திருக்கிறார். சமீபத்தில் வெளியான 'சல்லியர்கள்' படத்தையும் தயாரித்திருந்தார். அப்பாவின் நிறுவத்திற்காக இப்போது அடுத்த படம் செய்து கொடுக்கிறார் கென். இந்தப் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தகவல்.





















