``அம்பேத்கர் பெயரை எப்படி தவிர்க்க முடியும்?" - கொந்தளித்த அதிகாரி மன்னிப்பு கேட...
கரூர்: 4 பவுன் தங்க செயினைப் பறிக்க முயன்ற திருடன்; 20 நிமிடங்கள் போராடிய மூதாட்டி; என்ன நடந்தது?
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே வளையப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி மனைவி எரம்மாள் (வயது: 75). இவர்களுக்கு மகன், மகள் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
இருவருக்கும் திருமணம் ஆகிய நிலையில், மகன் திருச்சியிலேயே தங்கியுள்ளார். இந்நிலையில், முதிய தம்பதியினர் இரவு தங்களது வீட்டில் தனியாக இருந்தபோது இரவு சுமார் 11 மணி அளவில் முகமூடி அணிந்து வீடு புகுந்த மர்ம நபர், வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார்.
இந்நிலையில், அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியைத் தாக்கி, அவரது கழுத்தில் அணிந்திருந்த நான்கு பவுன் தங்கத் தாலி செயினைப் பறித்துச் சென்றுள்ளார்.
இதற்கிடையில், தாலி பறிக்க வந்த முகமூடி கொள்ளையனிடம் மூதாட்டி தாலி செயினைப் பறிக்கவிடாமல் போராடியதால் கொள்ளையன் அவரைச் சரமாரியாக சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாகத் தாக்கி சித்திரவதைக்கு உள்ளாக்கியுள்ளான்.

பின்னர், தாலியைப் பறித்துக்கொண்டு முகமூடி கொள்ளையன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான். சிறிது நேரம் கழித்து காயமடைந்து மயக்கம் தெளிந்த நிலையில் அருகில் இருந்த உறவினர்களிடம் தன்னைத் தாக்கி தாலி செயினைப் பறித்துக்கொண்டு சென்ற சம்பவத்தை அழுதவாறே கூறியுள்ளார்.
அவரது கன்னம், கழுத்து, மார்புப் பகுதிகளில் பலத்த காயமடைந்த நிலையில் இருந்தவரை அவரது உறவினர்கள் குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த குளித்தலை டி.எஸ்.பி செந்தில்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் கருணாகரன் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், கைரேகை நிபுணத்துவ போலீஸார் மற்றும் லக்கி போலீஸ் நாயுடன் விசாரணை மேற்கொண்டனர்.
அதோடு, அந்தப் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் சுற்றுப்புறப் பகுதியில் இருக்கும் சி.சி.டி.வி கேமரா காட்சிகளையும் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். அப்பகுதியில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக தெரு மின் விளக்குகள் எரியவில்லை.
இதனைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட முகமூடி கொள்ளையன் இரவு நேரத்தில் நோட்டமிட்டு மூதாட்டியின் வீட்டிற்குள் உறங்கி இருந்து பின்னர் அவரைத் தாக்கி தாலி செயினைப் பறித்துசென்றுள்ளான் என்பது போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.















