குளித்தலை: `ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்; யாருக்காக ஆட்சி நடத்துகிறது திமுக?' -...
கல்குவாரிக்குச் செய்தி சேகரிக்கச் சென்றவர்கள் மீது தாக்குதல்; திமுக எம்.எல்.ஏ மீது குற்றச்சாட்டு!
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் தொகுதியின் தி.மு.க சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பழனியாண்டி. இவருக்குச் சொந்தமான கல்குவாரி, கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, சிவாயம் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தக் கல்குவாரியில் செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் தொலைக்காட்சியின் திருச்சி மாவட்டச் செய்தியாளர் கதிரவன், கேமராமேன் செபாஸ்டின், சமூக ஆர்வலர் சுடலைக்கண்ணு, வழக்கறிஞர் திருமலை ராஜன், உதவியாளர் ராஜமாணிக்கம் ஆகிய 5 பேர் சென்றிருக்கின்றனர்.
அப்போது, குளித்தலை - மணப்பாறை நெடுஞ்சாலையில் இருந்து ட்ரோன் மூலம் முழுவதுமாக எம்.எல்.ஏ-வின் கல்குவாரியை கவர் செய்து வீடியோ, போட்டோ எடுத்துள்ளனர்.

நெடுஞ்சாலைக்கும், குவாரிக்கும் இடையே 8 கிலோ மீட்டர் இடைவெளி உள்ளது. அப்போது, அந்த ட்ரோன் பறந்து கொண்டு வருவதைப் பார்த்த ஒருவர் மூலமாக, குவாரிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அங்கிருந்து கிளம்பி வந்த 50-க்கும் மேற்பட்ட நபர்கள், அவர்களை கடுமையாகத் தாக்கி அவர்கள் கைவசம் வைத்திருந்த 2 கேமராக்கள், ட்ரோன் ஆகியவற்றையும் சுக்குநூறாக அடித்து உடைத்ததோடு, அவர்களை கடத்தியும் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு ஸ்ரீரங்கம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ பழனியாண்டி சுமார் 50 அடியாட்களை வைத்து தாக்குதல் நடத்த வைத்ததாகக் காயமடைந்தவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். 2 மணி நேரத்திற்கும் மேலாக பத்திரிகையாளர்களை தொடர்பு கொள்ள முடியாத சூழல் இருந்து வந்தது.
இது குறித்து கரூர் மாவட்ட எஸ்.பி ஜோஸ் தங்கையா உத்தரவின் பெயரில், குளித்தலை டி.எஸ்.பி செந்தில்குமார் தலைமையில் காவல்துறையினர் பத்திரிகையாளர்களை மீட்கச் சென்றனர். அதனைத் தொடர்ந்து, செய்தியாளர் கதிரவன், கேமராமேன் செபாஸ்டின் உள்ளிட்ட இருவரையும் குளித்தலை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த வழக்கறிஞர் திருமலை ராஜன், உதவியாளர் ராஜமாணிக்கம் ஆகிய இருவரும் குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், நிருபர் மற்றும் ஒளிப்பதிவாளரை தாக்கிய எம்.எல்.ஏ தரப்பு மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.















