செய்திகள் :

காஞ்சிபுரம் கயிலாசநாதர் கோயில்: போரை நிறுத்திய பொக்கிஷம்; இந்த ஈசனை சுற்றி வந்தால் மறுபிறவி இல்லை!

post image

காஞ்சியின் பெருமைக்குப் பெருமை சேர்க்கும் அதிசயம் கயிலாசநாதர் கோயில் என்பர்.

இந்தக் கயிலாசநாதர் கோயிலின் பிரமாண்ட வடிவமே பின்னர் உருவான தஞ்சை பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் போன்ற பிரம்மாண்ட கோயில்களின் எழுச்சிக்கு அடிப்படையாக அமைந்தது என்றும் சொல்வார்கள்.

இந்த ஆலயத்தைப் பற்றிச் சொல்ல ஆயிரம் ஆயிரம் விஷயங்கள் உண்டு. இன்னும் அபூர்வமான சூட்சும வடிவங்களை இந்தக் கோயில் தாங்கிக் கொண்டுள்ளது என்றே ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

காஞ்சிபுரம் நகரின் மத்தியிலிருந்து சுமார் 1 மைல் தூரத்தில் அமைந்துள்ளது இந்தக் கோயில். மூலக் கோயிலைச் சுற்றி 58 சிறு கோயில்கள் அமைந்துள்ளன. இதில் ஒவ்வொரு வடிவிலும் ஈசன் அமர்ந்து அருள்கிறார்.

பிராகாரச் சுவர்களில் சப்தமாதர், கணபதி, திருமால் போன்ற சிறு தெய்வங்களும் உள்ளனர். 58 சிறு கோயில்களின் இரு பக்கவாட்டில் உள்ள பாறை குடைவுகளில் ஒருவர் அமர்ந்து தியானம் செய்யும் வகையில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

அதாவது, ஒரேவேளையில் எண்பதற்கும் மேற்பட்ட தவசிகள் இந்தச் சிறு ஆலய குடைவரையில் அமர்ந்து தியானம் செய்யலாம் என்பது அதிசயமான இந்த ஆலயத்தின் அமைப்பு என்கிறார்கள்.

காஞ்சிபுரம் கயிலாசநாதர் கோயில்
காஞ்சிபுரம் கயிலாசநாதர் கோயில்

கி.பி. 700-ம் ஆண்டின் பல்லவ மன்னன் ராஜசிம்மனால் உருவாக்கப்பட்ட ஆலயம் இது. இது சுதை வடிவில் உருவான பிரம்மாண்ட கோயில். சுவாமி இங்கே குடமுழுக்குக்கு வராமல் திருநின்றவூர் பூசலார் மனதில் உண்டாக்கிய கோயிலுக்கு எழுந்தருளச் சென்றார் என்கிறது சமயநூல்கள்.

இதைப்போன்றே ஒரு வியக்க வைக்கும் ஒரு சரித்திர உண்மையும் உண்டு. இந்த நகரையே அழிக்க வெறிகொண்டு வந்த மன்னன், தன்னையே மறந்து இந்தக் கோயிலுக்கும் கயிலாசநாதருக்கும் அடிமையான வரலாற்றுச் சம்பவம் அதிசயத்திலும் அதிசயம்.

642-ஆம் ஆண்டு பல்லவ தளபதி, மேலைச் சாளுக்கியத்தின் தலைநகரும் கலைநகருமான வாதாபியை வென்று தீக்கிரையாக்கினான். சாளுக்கிய அரசன் இரண்டாம் புலிகேசியையும் கொன்று அழித்தான் என்கிறது வரலாறு.

அதன் பிறகு காலங்கள் பல சென்ற பிறகு இரண்டாம் புலிகேசியின் மகன் முதலாம் விக்ரமாதித்தன் சாளுக்கிய அரசனானான். அவனுக்குப் பிறகு வினயாதித்தன், விஜயாதித்தன் காலத்துக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தான் மாவீரன் இரண்டாம் விக்ரமாதித்தன்.

740-ஆம் ஆண்டு கயிலாசநாதர் கோயில் கட்டிய ராஜசிம்மனது மகன் இரண்டாம் பரமேஸ்வர வர்ம பல்லவன் ஆட்சி செய்த போது, சாளுக்கிய மன்னன் இரண்டாம் விக்ரமாதித்தன் மீண்டும் பல்லவர் மீது படையெடுத்துத் தாக்கினான். காஞ்சி வீழ்ந்தது.

காஞ்சியைக் கைப்பற்றியதும் விக்ரமாதித்தனும் வாதாபியைப் போலவே எழில் மிகுந்த காஞ்சியையும் தீக்கிரையாக்கிவிடவே ஆத்திரம் கொண்டான். அங்கேதான் ஈசனின் கருணை அவனை மாற்றியது.

பல்லவ அரசன் ராஜசிம்மன் சற்று காலத்திற்கு முன்பு எழுப்பியிருந்த காஞ்சி கயிலாசநாதரைக் கண்டவன், அதன் அழகிலும் சுவாமியின் கருணையிலும் நெகிழ்ந்து சிவபக்தனானான். சிவாலயங்கள் நிறைந்த காஞ்சியை அழிக்க எண்ணியதை உணர்ந்து வெட்கப்பட்டான்.

எந்தக் காஞ்சியைத் தரைமட்டமாக மண்ணோடு மண்ணாக அழிக்க படையெடுத்து வந்தானோ, அதைப் புனரமைக்கும் பணியிலும் ஈடுபட்டான்.

'நாம் எப்போது இந்த ஊரை வென்றோமோ அப்போதே இந்த ஊரும் நம் சொந்த ஊர் ஆகிவிட்டது, நம்முடைய மக்களை நாமே கொடுமை செய்யக்கூடாது, இது சிவம் வாழும் நகரம், இதைக் காப்பது நம் கடமை' என்று கூறித் தன் படையினரை போரால் அழிந்த பகுதிகளைப் புனரமைக்க உத்தரவிட்டான்.

காஞ்சிபுரம் கயிலாசநாதர் கோயில்
காஞ்சிபுரம் கயிலாசநாதர் கோயில்

இது கண்டு அவன் படைவீரர்கள் மட்டுமல்ல பல்லவ தேசமும் நெகிழ்ந்து போனது. காஞ்சி மக்களுக்குப் பல தான தர்மங்களைச் செய்தான். கயிலாசநாதர் கோயிலுக்கும் திருப்பணிகள் பல செய்தான்.

ஏற்கெனவே வேறு தேசங்களில் வென்றெடுத்த செல்வங்களைக் கூட காஞ்சியில் இருந்த கோயில்களைப் புனரமைக்கச் செலவிட்டான்.

இந்த விவரங்களைக் கன்னடத்தில் கயிலாசநாதர் கோயிலுக்கு முன்னால் இருக்கும் மண்டபத்தின் தூண் ஒன்றில் பொறித்தும் வைத்தான். அறக்கருணை கொண்ட விக்ரமாதித்தனை காஞ்சி மக்களும் வரலாறும் ஒரு சேரப் பாராட்டின.

அழிக்க வந்தவன் ஆதரித்த காரணம் காஞ்சி கயிலாசநாதர் மட்டுமல்ல, பல ஆண்டுகளுக்கு முன்பே காஞ்சியைக் குறித்து வருத்தப்பட்ட பரஞ்சோதியின் அக்கறையும் வேண்டுதலும் கூடத்தான் எனலாம்.

கலைகளின் பொக்கிஷமான காஞ்சி மாநகரைக் காப்பாற்ற உதவியது எனலாம். காஞ்சியின் கயிலாசநாதர் கோயில் அவனைப் பெரிதும் மயக்கியது என்பதால் அந்த ஊரை விட்டுச் செல்லவே அவனுக்கு மனமில்லையாம்.

ஊர் திரும்ப வேண்டிய அவசியம் உண்டான போது அந்தக் கோயிலைக் கட்டிய சிற்பிகளைப் பெரும் மரியாதையோடு சாளுக்கிய தேசத்திற்கு அழைத்துச் சென்றான். அங்கே ஏறக்குறைய கயிலாசநாதர் கோயில் போல அதன் அச்சாகவே பட்டடக்கல்லில் 'விருபாட்சர் கோயில்' ஒன்றையும் கட்டினான் என்கிறது வரலாறு.

அவனது மனைவி லோகமாதேவியின் இஷ்ட தெய்வமான விருபாட்சரை அங்கே எழுந்தருளச் செய்தான். 'இது நமது மன்னனின் பொக்கிஷம், இதைப் பாதுகாப்பது நமது கடமை' என்று கல்லில் எழுதி வைத்த பல்லவனின் எதிரியும் போற்றிய ஆலயம் கயிலாசநாதர் திருக்கோயில்.

தென்திசைக் கயிலாயம் என்றும் அழைக்கப்படுகின்ற இக்கோயிலின் அமைப்பு மாமல்லபுரத்தில் உள்ள சிற்பக் கோயில்களைப் போல் அமைந்துள்ளது. மூன்று தளங்களைக் கொண்டு விளங்கும் இக்கோயிலில்தான் முதன் முதலாக கருவறையைச் சுற்றி வரும் பாதையான, 'சாந்தார நாழிகை' இடம் பெற்றது.

காஞ்சிபுரம் கயிலாசநாதர் கோயில்
காஞ்சிபுரம் கயிலாசநாதர் கோயில்

நாரத முனிவர் பூஜித்ததாகக் கூறப்படும் மூலவரின் சிவலிங்கத் திருமேனி 16 பட்டை கொண்ட ஷோடசலிங்கம், பளபளப்பான கறுப்புக்கல்லினாலான பெரிய திருமேனி.

கருவறையைச் சுற்றி அமைந்துள்ள குறுகிய திருச்சுற்று, புனர்ஜனனி என்று அழைக்கப்படுகிறது. அதன் உள், வெளி வாயில்கள் மிகவும் குறுகலாக இருந்து, தரையில் படுத்தபடியே ஊர்ந்து சென்று, மீளும்போது, புனர்ஜன்மம் எடுத்து வந்த உணர்வே மேலோங்கி வரும். இதனைச் சுற்றி வந்தால் “மறுபிறவி இல்லை, பிறப்பறுத்து முக்தி கிடைக்கும்” என்பது ஐதிகம்.

கோயிலின் வெளிப்புறம் அழகான நந்தவனம்... பின்புறத்தில் ஒரு சுரங்கப்பாதை என ஆலயத்தின் அமைப்பு வியக்க வைக்கிறது. இந்தச் சுரங்கப்பாதை ஏகாம்பர நாதர் கோயிலில் சென்று முடிகிறது என்று கூறுகிறார்கள். இந்தக் கோயிலைக் கட்டிய ராஜ சிம்ம பல்லவன் கட்டுமான பணியில், தான் மட்டும் ஈடுபடாமல் தன் மனைவி மக்களையும் ஈடுபடுத்தியதாகக் கூறப்படுகிறது.

இங்குள்ள கல்வெட்டுகள் பல்லவ கிரந்த எழுத்துகளில் மயில்தோகை போன்றும், அன்னப்பறவை இறகு போன்றும் அமைந்துள்ளன. இவ்வகை கிரந்த எழுத்துக்கள் காலத்தால் முந்தியவை. இவை பல்லவர்களின் கல்வெட்டு கலைத்திறனின் கைவண்ணத்தைக் காட்டுபவை.

வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றிருக்கும் இந்தக் கோயிலை வாய்ப்பிருப்பவர்கள் ஒருமுறை சென்று தரிசனம் செய்துவாருங்கள். ஈசனின் அருளுக்குப் பாத்திரம் ஆவதோடு தமிழகத்தின் கட்டடக் கலையின் சிறப்பை அறிந்து பெருமை கொள்வீர்கள்.

வேலூர் மாவட்டம் பாலமதி முருகன் கோயில்: குழந்தையாக அருளும் குமரன்; தரிசித்தாலே நிம்மதி கிடைக்கும்!

மலைக்கு மேல் ஏறிச் சென்று வணங்கினால் நம்மை வாழ்க்கையிலும் ஏற்றிவிட்டு அழகு பார்ப்பான் முருகன். அப்படி அவன் கோயில் கொண்ட தலங்கள் ஏராளம். அவற்றுள் இயற்கை அழகு சூழ்ந்த ஒரு தலம்தான் பாலமதி.மலைகள் சூழ்ந்த ... மேலும் பார்க்க

திருச்செந்தூர் முருகன் கோயில் பெயரில் மோசடி; பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் எச்சரிக்கை;பின்னணி என்ன?

இதுகுறித்து திருக்கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலின் பெயர் மற்றும் அடையாளத்தை கோயில் நிர்வாகத்தின் எந்தவிதமான அனுமதியும் இன்றி பயன்படுத்த... மேலும் பார்க்க

தென்காசி மாவட்டம், சாம்பவர் வடகரை சுதந்திர ஐயப்பன்: நெய் அபிஷேகம் சுவாமிக்கு நீங்களே செய்யலாம்!

சுவாமி ஐயப்பனைத் தரிசிக்க ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு யாத்திரை செல்கிறார்கள். அதேபோன்று சுவாமி ஐயப்பனுக்கு என்று சபரிமலை, எருமேலி, ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்புழா மற்றும் ப... மேலும் பார்க்க

திருநெல்வேலி: நெல்லையப்பர் - காந்திமதி அம்மன் திருக்கோயில் வெள்ளி ரதம் வெள்ளோட்டம் விழா.!

திருநெல்வேலி: நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் திருக்கோயில் வெள்ளி ரதம் வெள்ளோட்டம் விழா.! மேலும் பார்க்க

திருநெல்வேலி: ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் திருக்கோயில் திருவாதிரை தேரோட்டம் திருவிழா.!

திருநெல்வேலி: ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் திருக்கோயில் திருவாதிரை தேரோட்டம் திருவிழா.! மேலும் பார்க்க

அரியலூர் திருமழபாடி வைத்தியநாதர் கோயில்: குழிகளாக நவகிரக சந்நிதி... நோய் தீர்க்கும் ஈசன்!

காவிரிக்கரை எங்கும் ஈசன் கோயில் கொண்ட தலங்கள் ஏராளம். தேவார மூவரும் பாடிப் பரவி அத்தலங்கள் மிகவும் சிறப்பும் மகிமையும் வாய்ந்தவை. இத்தலங்களுக்குச் சென்றாலும் அங்கு வாழ்ந்தாலும் மனதால் நினைத்தாலுமே புண... மேலும் பார்க்க