`பசிக்கு மதம் தெரியாது’- 25 ஆண்டுகளாக வடலூர் சபை அன்னதானத்திற்கு அரிசி, காய்கறி ...
கானல் நீராக பன்னீரின் நிலை; காத்திருப்புக்குப் பலன் கிடைக்குமா?!
மூன்று முறை முதல்வர் நாற்காலியை அலங்கரித்தவர், நீண்ட கால சட்டமன்ற உறுப்பினர், அ.தி.மு.க வின் முக்கிய முகமாக இருந்து அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்கிற உச்சபட்ச பதவியை அடைந்தவர்... இப்படி அ.தி.மு.கவிற்கும் பன்னீருக்கும் பந்தங்கள் பல. ஆனால் இவை எல்லாமே கடந்தகால கதையாகிவிட்டது. நிகழ்கால பன்னீரின் நிலை பரிதாபம்தான்.
தன்னை நம்பி வந்தவர்களுக்கு சரியான வழியைக் காட்டமுடியாமல் போனதால், பன்னீர் பின்னால் அணிவகுத்தவர்கள் எல்லாம் அவரவர் வழியைத் தேடிச் சென்றுவிட்டனர். இன்றைய நிலையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினால்கூட இவருக்கு இவர்தான் ஆலோசனை சொல்ல வேண்டிய நிலையே இப்போதுள்ளது. ``இந்த நிலைக்கு பன்னீர் வரக் காரணமே, பன்னீர் செல்வம்தான்” என்று முன்னுரை கொடுக்கிறார், பன்னீருக்கு நெருக்கமாக இருந்து இப்போது எடப்பாடி அணிக்குத் தாவியவர்.

`` `அண்ணன் எடப்பாடி' என்றுகூட இறங்கி வந்து பேசிவிட்டார். ஆனாலும் அ.தி.மு.க-வில் பன்னீருக்கு இடமில்லை என்று எகத்தாளமாக பதில் சொல்லியிருக்கிறார் எடப்பாடி. பன்னீரை நம்பி பின்னால் வந்த மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் தாய் கழகமான தி.மு.க பக்கம் கரை ஒதுங்கிவிட்டார்கள். அவர்கள் இருவருக்கும் எம்.எல்.ஏ-சீட்டும் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. பன்னீரின் மற்றொரு தளபதியாக இருந்த ஜே.சி.டி.பிரபாகர் த.வெ.க பக்கம் சாய்ந்துவிட்டார். பன்னீரால் எம்.பி பதவிக்கு வந்த தர்மரும் எடப்பாடி பக்கம் போய்விட்டார். இப்படி தளபதிகள் இல்லாத தனிமரமாக இப்போது நிற்கிறார் பன்னீர்.
பா.ஜ.க-வின் பேச்சை நம்பியே எந்த முடிவையும் எடுத்துவந்தார் பன்னீர். ஒருகட்டத்தில் டி.டி.வி.தினகரனின் ஆலோசனைகளைக் கேட்டுத்தான் அ.தி.மு.க உரிமைமீட்புக் குழுவை ஆரம்பித்தார். தனியாக ஓர் அமைப்பை ஆரம்பித்தால், அதையே ஒரு காரணமாக வைத்து எடப்பாடி தன்னை அ.தி.மு.க-விற்குள் வரவிடாமல் தடுத்துவிடுவார் என்று கருதினார்.

ஆனால், டி.டி.வி.தினகரன் தனது கட்சியை அ.தி.மு.க கூட்டணியில் இணைக்க காட்டிய வேகத்தை, பன்னீர் விஷயத்தில் காட்டவில்லை என்கிறார்கள். இதனால் அதிக அப்செட்டில் உள்ள பன்னீர், இப்போது பா.ஜ.க-வின் புள்ளிகளைச் சந்தித்துப் பேசிவருகிறார். அவர்கள் தரும் ஆலோசனையே `நீங்கள் இப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துவிடுங்கள். நீங்கள் கூட்டணிக்கு வருவதை எடப்பாடி எதிர்க்கவில்லை. அதற்கு முன்பாக நீங்கள் அ.தி.மு.க மீது தொடர்ந்துள்ள வழக்குகளை வாபஸ் வாங்கிவிடுங்கள். சுயேச்டை சின்னத்தில்கூட போட்டியிடுங்கள். ஆனால் இரட்டை இலையில் போட்டியிட எடப்பாடி விரும்பவில்லை' என்று சொல்லியுள்ளார்கள்.

மற்றொருபுறம் டி.டி.வி.தினகரனும், `எடப்பாடிக்காகக் காத்திருக்க வேண்டாம். நீங்கள் தே.ஜ கூட்டணிக்குள் வாங்க... ஒற்றை இலக்கத்தில் உங்கள் ஆட்களுக்கு சீட் வாங்கிடலாம். வேண்டும் என்றால் குக்கர் சின்னத்தில் நில்லுங்கள்' என்று மீண்டும் ஆலோசனை கொடுத்துள்ளார்.
ஆனால் பன்னீர் செல்வமோ, `இந்த முறை வேறு ஒரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டால் அதை வைத்தே முழுமையாக எடப்பாடி அ.தி.மு.க-வில் இணைவதை தடுத்துவிடுவார். அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது' என்று தனக்கு நெருக்கமானவர்கள் சொன்னவர், மேலும், `தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையும் முடிவை நான் எடுத்தால், அது அ.தி.மு.கவுடன் இணைப்பை நடத்திய பிறகே நடக்கும்' என்கிற முடிவை சொல்லியுள்ளார். ஆனால் அதற்கான வாய்ப்பு இனி மிகவும் குறைவு என்கிறார்கள் அ.தி.மு.க-வினர்.
அதே நேரம் எடப்பாடி தனக்கு நெருக்கமானவர்களிடம் பேசும்போது, `பன்னீர் கூட்டணிக்குள் வருவதில் எந்தச் சிக்கலும் எனக்கு இல்லை. ஆனால், அவரை கட்சியில் சேர்ப்பது என்பது நடக்காத காரியம். கட்சியை இப்போதுதான் என் முழுக்கட்டுபாட்டில் வைத்திருக்கிறேன்.
அவரை உள்ளே விட்டால் ஆபத்தில் முடிந்துவிடும்' என்று சொல்லியிருக்கிறார்.
பன்னீர் செல்வத்திற்கு இந்த தகவல்கள் எல்லாம் வந்து சேர்ந்த பிறகு மௌனமாக அனைத்தையும் கேட்டுள்ளார். `நான் கட்சித் தலைவர் பதவியை எல்லாம் கேட்கவில்லை. அவைத் தலைவர் பதவியைக் கொடுத்தால்கூட போதும்.

ஆனால் கூட்டணியில் இணைவதற்கே வழக்குகளை வாபஸ் வாங்கச் சொல்கிறார்கள். இவர்களை நம்பி வழக்குகளை வாபஸ் வாங்கினால் எதிர்காலத்தில் எனக்கும் அ.தி.மு.க-வுக்கும் உள்ள உறவே முழுமையாக துடைக்கப்படும். அதற்கு நான் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக்கூட இருந்துவிடலாம். தேர்தல் முடிவுக்குப் பிறகு கட்சியில் இணைவதைப் பற்றி எல்லோரும் பேசும் நிலை வந்துவிடும்' என்று எடப்பாடியிடமிருந்து வந்த துாதுக்கு, பதில் சொல்லியிருக்கிறார்" என்றனர் விரிவாக.
தி.மு.க தரப்பிலும் பன்னீர் ஆலோசனை செய்துள்ளார். அங்கிருந்து சாதகமான பதில் வரவில்லை. எனவே எப்படியாவது அ.தி.மு.க வில் இணைவது மட்டுமே தனக்கும் தனது வாரிசுகளுக்கும் எதிர்காலத்தில் பாதுகாப்பு என்கிற முடிவிற்கு வந்துள்ளார். அதற்கான காத்திருப்பைத்தான் பன்னீர் இப்போது மேற்கொண்டுவருகிறார். பன்னீரின் காத்திருப்புக்குப் பலன்கிடைக்குமா? அல்லது கானல்நீராக மாறுமா.. என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.















