Rain Upadate: 'இன்று இடியுடன் கூடிய கனமழை' - எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்...
குடும்பப் பிரச்னையைக் கண்டித்த தலைமைக் காவலர்; காவல் நிலையத்திற்குள் புகுந்து வெட்டிய கும்பல்
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அடுத்த பொத்தைப் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிபாண்டி. இவர், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்துள்ளார்.
குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அந்தப் பெண் கோபித்துக்கொண்டு நெட்டூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
டிசம்பர் 2ஆம் தேதி இரவு இசக்கிபாண்டி தனது நண்பருடன், நெட்டூரில் உள்ள தனது மனைவியின் வீட்டிற்குச் சென்று, தன்னுடன் வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார்.
அவர் வர மறுக்கவே, மதுபோதையிலிருந்த இருவரும் ரகளையில் ஈடுபட்டனர். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள், நெட்டூர் புறக்காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர்.
தகவலின் அடிப்படையில், இரவுப் பணியிலிருந்த கடங்கநேரிப் பகுதியைச் சேர்ந்த தலைமைக் காவலர் முருகன், ஒரு பெண் காவலருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இசக்கிபாண்டியைக் கண்டித்தார். இதையடுத்து இருவரும் அங்கிருந்து சென்றனர்.

எனினும், ஆத்திரத்திலிருந்த இசக்கிபாண்டி, தனது கூட்டாளிகள் நான்கு பேருடன் மீண்டும் நெட்டூர் புறக்காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த தலைமைக் காவலர் முருகனை, அந்தக் கும்பல் அரிவாளால் ஓட ஓட வெட்டியுள்ளது.
உடனே அவர் துப்பாக்கியை எடுக்கவே, அந்தக் கும்பல் சுதாரித்துக்கொண்டு அவரைக் கீழே தள்ளிவிட்டுத் தப்பிச் சென்றது.
இந்தச் சம்பவத்தை அறிந்த ஆலங்குளம் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அரிவாள் வெட்டில் காயமடைந்த காவலர் முருகனை மீட்டு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், துணைக் காவல் கண்காணிப்பாளர் கிளாட்சன் ஜோஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தலைமைக் காவலர் முருகனை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பிச் சென்ற இசக்கிபாண்டி கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
















