பகவத் கீதை: "மில்லியன் மக்களுக்கு உத்வேகமளிக்கும் நூல்" - ரஷ்யப் பிரதமர் புதினுக...
Choking: தொடரும் சோக்கிங் மரணங்கள்; எப்படித் தவிர்ப்பது; எப்படி முதலுதவி செய்வது?
செவ்வாழைப்பழம் தொண்டையில் சிக்கி கல்லூரி மாணவி பலி, ரம்புட்டான் பழத்தின் விதை தொண்டையில் சிக்கி சிறுவன் பலி, பரோட்டா தொண்டையில் சிக்கி ஆண் பலி என, ஏதோவொரு உணவுப்பொருள் தொண்டையில் சிக்கி இறப்பவர்களைப்பற்றிய செய்திகள் அடிக்கடி கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கின்றன. இதோ, இப்போது ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 5 வயது சிறுவன், தொண்டைக்குழியில் வாழைப்பழம் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணமடைந்திருக்கிறான்.
மனைவியிடம் போன் பேசியபடியே பரோட்டா சாப்பிட்டார் என்பது அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது!

இதில், குழந்தைகளுக்கு எதிர்பாராவிதமாக நடந்தது என்றால், பெரியவர்கள் மற்றவர்களுடன் பேசிக்கொண்டே சாப்பிடும்போதுதான் இப்படி நிகழ்ந்திருக்கிறது.
சில வருடங்களுக்கு முன்னால், சட்டக்கல்லூரி மாணவி ஒருவருக்கு வாழைப்பழம் சாப்பிடும்போது வலிப்பு வந்திருக்கிறது. விளைவு, தொண்டைக்குழியில் சிக்கி மரணம்.
பரோட்டா தொண்டையில் சிக்கி பலியானவர், மனைவியிடம் போன் பேசியபடியே பரோட்டா சாப்பிட்டார் என்பது அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.
தொண்டையில் ஏதோவொரு உணவுப்பொருள் சிக்கிக்கொண்டால், உடனடியாக என்ன செய்ய வேண்டும் என சிவகங்கையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் அ.ப. ஃபரூக் அப்துல்லா விளக்குகிறார்.
உணவுப்பொருள் தொண்டையில் சிக்காமல் இருக்க

''நாம் சாப்பிடுகிற எந்த உணவுப்பொருளும் இப்படியோர் ஆபத்தை விளைவிக்கலாம். இதற்கு வயது வித்தியாசமும் கிடையாது. என்றாலும், சிறுவர்களுக்கும் முதியவர்களுக்கும் உணவை விழுங்குவதில் சிக்கல் இருக்கும் என்பதால், அவர்களுக்கு தொண்டையில் அடைப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம்.
இது நிகழாமல் இருக்க வேண்டுமென்றால், ஒன்று, சாப்பிடும்போது பேசக்கூடாது. இரண்டு, அவசர அவசரமாக சாப்பிடவே கூடாது. இவையிரண்டும்தான் உணவுப்பொருள் தொண்டையில் சிக்கும் ஆபத்தை அதிகரிக்கும்.
உணவுப்பொருளோ அல்லது வேறு ஏதேனும் பொருளோ, தொண்டையை அடைத்துக்கொண்டு மூச்சுப் பாதையில் தடை ஏற்படுத்துவதை 'சோக்கிங்' (Choking) என்போம்.
இந்த மெடிக்கல் எமர்ஜென்சி யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் நிகழலாம் என்பதால், இதற்கான முதலுதவியை நாம் அனைவரும் அறிந்து வைத்திருப்பது அவசியம்'' என்றவர், அதுபற்றி விளக்க ஆரம்பித்தார்.
இருமலும், முதுகுத்தட்டலும்

இருமும்போது சுவாசப்பாதையில் அடைத்துக்கொண்டிருக்கும் பொருள் வெளியேறுவதற்கு வாய்ப்பு அதிகம் என்பதால், பாதிக்கப்பட்டவர்களால் முடிந்தால் தொடர்ந்து இரும சொல்லலாம்.
ஒருவேளை அவர்களால் இருமவோ, பேசவோ, கத்தவோ முடியவில்லையென்றால், அவருக்கு பக்கவாட்டில் நின்றுகொண்டு, அவருடைய நெஞ்சுப்பகுதியை கைகளில் தாங்கிக்கொண்டு, அவரை இடுப்புப்பகுதி வரை குனிய வைக்க வேண்டும்.
பிறகு, அவருடைய முதுகுபக்கத்தில் இரண்டு தோள் பட்டைகளும் சேரும் இடத்தில், உள்ளங்கையை வைத்து ஐந்து முறை நன்றாக அடிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் தொண்டையில் அடைத்துக்கொண்டிருக்கிற பொருள் வெளியேற வாய்ப்பு அதிகம்.
ஹெம்லிச் (Heimlich)

மேலே சொன்ன முதலுதவி பயன்கொடுக்கவில்லை என்றால், மூச்சுத்திணறல் ஏற்பட்டவரின் பின்புறம் நின்றுகொண்டு, அவரது இடுப்பை, பின்புறத்தில் இருந்து ஒரு கையால் அணைத்துக்கொள்ள வேண்டும். பிறகு, இன்னொரு கையின் ஐந்து விரல்களையும் குத்துவதற்கு தயாராவதுபோல ஒன்றாக இணைத்துக் கொள்ள வேண்டும். இணைத்த இந்தக் கையை சரியாக அவரின் மேல் வயிற்றுப்பகுதியில் இருக்குமாறு வைக்கவேண்டும். இந்தக் கையை அணைத்துள்ள கை இறுக்கமாகப் பற்றிக்கொள்ள வேண்டும்.
பிறகு, பாதிக்கப்பட்டவரின் வயிற்றுப்பகுதியை அழுத்தியபடி, வேகமாக உங்கள் இரண்டு கைகளையும் மேல்நோக்கி தூக்க வேண்டும். இப்படி செய்யும்போது, பாதிக்கப்பட்டவரை சிறு உயரம் தூக்கி கீழே விடுவது போல இருக்கும். இதைத் தொடர்ந்து 5 முறை வேக வேகமாக செய்ய வேண்டும்.
நான் மேலே சொன்ன, இரண்டு தோள் பட்டைகளும் சேரும் இடத்தில் தட்டுவதையும், ஹெம்லிச் செய்முறையையும் தொடர்ந்து செய்துகொண்டே இருக்க வேண்டும்.
மூர்ச்சை நிலைக்கு சென்றால்

ஒருவேளை பாதிக்கப்பட்டவர் மூர்ச்சை நிலைக்கு சென்றுவிட்டால், அவரின் முதுகுப்பகுதி தரையில் இருக்குமாறு படுக்க வைத்து, அவருடைய வாயை கவனிக்க வேண்டும். மூச்சுத்திணறலை ஏற்படுத்திய பொருள் கண்ணுக்குத் தெரிந்தால், அதை லாகவமாக எடுத்துவிடலாம்.
கண்ணுக்குத் தெரியாத பொருளை எடுக்க வாய்க்குள் விரலைவிட்டால், அடைத்துக்கொண்டிருக்கிற பொருள் இன்னும் உள்ளே சென்று பிரச்னையை அதிகமாக்கி விடலாம்.
மூர்ச்சை நிலை தொடர்ந்தால், சிபிஆர் எனும் உயிர்காக்கும் முதலுதவியை செய்ய வேண்டும்.
நமக்கு நாமே எப்படி செய்துகொள்வது..?

ஒருவேளை யாருமே இல்லாத இடத்தில் நமக்கே இந்த நிலை ஏற்பட்டால், நம் கைகளை இணைத்து வயிற்றுப்பகுதியில் வைத்து, நாற்காலி அல்லது மேஜை போன்ற கடினமான சமதளத்தில் அழுத்த வேண்டும்.
குழந்தைகளுக்காக சில டிப்ஸ்..!
பொதுவாக குழந்தைகள் கண்ணில்படுகிற சின்னச்சின்னப் பொருள்களை வாயிலோ அல்லது மூக்கிலோ போட்டுக்கொள்வார்கள் என்பதால், அப்படிப்பட்டப் பொருள்கள் வீட்டில் இல்லாமலோ அல்லது குழந்தைகள் கைக்கு எட்டாமலோ பார்த்துக்கொள்ள வேண்டும்.
குறிப்பாக, பட்டன் பேட்டரி, உடைந்த கிரையான்ஸ் துண்டுகள், உடைந்த பொம்மையின் பாகங்கள் போன்றவை குழந்தைகளின் கையில் சிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
பட்டாணி, வேர்க்கடலை, ராஜ்மா போன்ற சுண்டல் வகைகளை குழந்தைகள் உங்கள் கண்முன்னால் சாப்பிட வையுங்கள். இவைகூட சிறு குழந்தைகளின் தொண்டையில் சிக்கலாம், கவனம்'' என்கிறார் டாக்டர் ஃபரூக் அப்துல்லா.















