பகவத் கீதை: "மில்லியன் மக்களுக்கு உத்வேகமளிக்கும் நூல்" - ரஷ்யப் பிரதமர் புதினுக...
"முதல்வரின் மக்கள் செல்வாக்கை குறைக்க பல வழிகளில் நெருக்கடி தருகிறது ஒன்றிய அரசு" - உதயநிதி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், கலைஞர் கருணாநிதி உருவச்சிலை திறப்பு விழா நேற்று இரவு நடைபெற்றது.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு சிலையைத் திறந்து வைத்து பேசினார். அவர் பேசியதாவது, ``திருவண்ணாமலை மாவட்டத்தில், நான் திறந்து வைக்கின்ற மூன்றாவது கலைஞர் சிலை இது. இப்படி, தமிழ்நாடு முழுக்க கலைஞரின் சிலையைத் திறந்து வைத்துக்கொண்டிருக்கின்றோம்.
இது வெறும் நிகழ்ச்சிக்காகவோ அல்லது கொண்டாட்டத்துக்காகவோ நடத்தப்படக்கூடியது அல்ல. கலைஞரின் கொள்கைகளை, அவரின் சாதனைகளை, புகழை பட்டித்தொட்டி எங்கும் கொண்டு சேர்க்கின்ற நிகழ்ச்சியாகத்தான் பார்க்கின்றோம்.
நம் தலைவரின் தலைமையில், நாம் ஓரணியில் நிற்கிறோம். ஆனால், நம் எதிரே நிற்கின்ற `அ.தி.மு.க எத்தனை அணியில் நிற்கிறார்கள்’ என்று யாருக்குமே தெரியாது. `அந்த கட்சியை யார் கைப்பற்ற போகிறார்கள்’ என்கிற போட்டியில்தான் அத்தனை அணிகளாக அவர்கள் பிரிந்து நிற்கிறார்கள்.
`எடப்பாடி பழனிசாமியை எப்படி தோற்கடிக்கலாம்’ என்று ஒவ்வொரு அணியும் அ.தி.மு.க-வில் போட்டி போட்டுக்கொண்டு வேலை பார்க்கிறது. ஏனெனில், அ.தி.மு.க தொண்டர்களுக்கும், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்திருக்கிறார்.

`அமித்ஷா-வின் காலடியில் யார் முதலில் விழுவது’ என்று அ.தி.மு.க அணிகளுக்கிடையே மிகப்பெரிய போட்டி நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், பாசிச பா.ஜ.க-வையும், அதன் அடிமை அ.தி.மு.க-வையும் தமிழ்நாட்டு மக்கள் என்றைக்கும் ஏற்றுக்கொள்ளப் போவது கிடையாது.
வெறும் வெறுப்பு பிரசாரத்தை மட்டுமே செய்கிற ஒன்றிய பாசிச பா.ஜ.க-வுடன் அ.தி.மு.க கூட்டணி வைத்திருக்கிறது. அந்தக் கூட்டணி அமைந்து எட்டு மாதங்கள் ஆகின்றன.
ஆனால், அந்தக் கூட்டணியை நம்பி ஒரு இயக்கம்கூட போகவில்லை. அங்கு இருக்கிறவர்கள்தான் ஒவ்வொருத்தராகப் பிய்த்துக்கொண்டு போகிறார்கள். எடப்பாடி பழனிசாமி எட்டு மாதங்களுக்கு முன்பு `பிரசாரத்துக்குப் போகிறேன்’ என்று சொல்லிவிட்டு பஸ்சை எடுத்துக்கொண்டு கிளம்பினார்.
`அந்த பஸ்சில் போய் பிரசாரம் செய்வாரா?’ என்று பார்த்தால், ஒவ்வொரு தொகுதியாகப்போய் அ.தி.மு.க-வில் இருப்பவர்களையே திட்டிக்கொண்டு இருக்கிறார்.
உதாரணத்துக்கு, தேனி பக்கம் போனால் ஓ.பி.எஸ்-சை திட்டுவார். கோபிக்குப் போனால் செங்கோட்டையனைத் திட்டுவார். டெல்டா பகுதிக்குப் போனால் டி.டி.வி.தினகரனைத் திட்டுவார். இப்படித்தான் எடப்பாடி பழனிசாமியின் பிரசாரம் போய்க்கொண்டு இருக்கிறது. ஆனால், `அமித்ஷாவை யார் அதிகமாகப் பாராட்டி பேசுவது’ என்பதில் மட்டும் அ.தி.மு.க அணிகளுக்குள் ஒற்றுமை இருக்கிறது.
சொந்தக் கட்சியினரைத் திட்டிவிட்டு அமித்ஷா-வின் காலை பிடித்துக்கொண்டு அவரைப் புகழ்ந்து தள்ளிக்கொண்டு இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
பா.ஜ.க-வைப் பொறுத்தவரை, இந்தியாவில் அவர்களின் கொள்கை `ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கட்சி’ என்பதுதான். அப்பேர்ப்பட்ட ஒன்றிய பா.ஜ.க அரசை எதிர்த்து நிற்கக்கூடிய, கேள்வி கேட்கக்கூடிய ஒரே இயக்கமாக நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் களத்தில் தெம்பு தைரியத்துடன் நின்று கொண்டிருக்கிறது.
மாநில உரிமை, மொழி உரிமை, சமூகநீதியைக் காக்க நம் கழகம் என்றைக்கும் மக்களோடு மக்களாக களத்தில் நிற்கும். அந்தப் போராட்ட உணர்ச்சியை நமக்கெல்லாம் ஊட்டிய தலைவர் தான் நமக்கு முன்பு சிலையாக நின்று கொண்டிருக்கிறார். கலைஞர் காட்டிய வழியில்தான் நம்முடைய கழகத் தலைவர் திராவிட மாடல் ஆட்சியையும் சிறப்பாக நடத்திக்கொண்டிருக்கிறார்.

இந்தியாவிலேயே சிறந்த முதலமைச்சராக நம் தலைவரும், சிறந்த மாநிலமாக நம்முடைய தமிழ்நாடும் விளங்கியிருக்கிறது. ஆட்சி பொறுப்பேற்ற நாளில் இருந்து, நம் முதலமைச்சர் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியிருக்கிறார்.
அனைத்து மாவட்டங்களிலும் உள்கட்டமைப்பு வசதிகளையும் பெருக்கிக் கொண்டு வருகிறார். முதலமைச்சருக்கு இருக்கின்ற மக்கள் செல்வாக்கைக் குறைக்கத்தான் ஒன்றிய அரசு பல்வேறு வழிகளில் நெருக்கடியைக் கொடுக்கிறது.
தமிழ்நாட்டுக்கு வேண்டுமென்றே நிதிச்சுமையை ஏற்றிக்கொண்டிருக்கிறார்கள். நூறுநாள் வேலை வாய்ப்புக்கான நிதி கொடுப்பதில்லை; கல்விக்கான நிதியை பறிக்கிறார்கள்; புதிய ரயில்வே திட்டங்களைக் கேட்டால், அதையும் கொடுப்பதில்லை.
நிதி ஒதுக்கீட்டில் பா.ஜ.க ஒன்றிய அரசு தொடர்ந்து ஓரவஞ்சனை செய்கிறது. `தமிழ்நாட்டு மக்கள் என்றைக்கும் பா.ஜ.க-வை ஏற்க மாட்டார்கள்’ என்று தெரிந்தேதான் பா.ஜ.க இன்றைக்கு தமிழ்நாட்டை வஞ்சித்துக்கொண்டிருக்கிறது. வாக்களித்த மக்களுக்கு மட்டும் அல்ல, வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்தே தான் நம் முதலமைச்சர் திட்டங்களைத் தீட்டிக்கொண்டிருக்கிறார்’’ என்றார்.














