OPS-க்கு, Amit shah தந்த உத்தரவாதம், பின்னணியில் TVK ரோல்? | Elangovan Explains
Doctor Vikatan: கண்களுக்குள் ரத்தக்கசிவு - காரணம் என்ன, தீர்வு உண்டா?
Doctor Vikatan: என் உறவினர் பெண்ணுக்கு 70 வயதாகிறது. அவருக்கு கண்களுக்குள் ரத்தக் கசிவு இருப்பதாகவும் அதை சரிசெய்ய முடியாதென மருத்துவர் சொல்லிவிட்டதாகவும் சொல்கிறார். கண்களுக்குள் ரத்தம் கசிவது ஏன், அதை சரிசெய்ய முடியாதா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர்.

கண்ணில் ரத்தக் கசிவு (Vitreous Hemorrhage) ஏற்படுவதற்குப் பொதுவாக இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளன. ஒன்று உயர் ரத்த அழுத்தம் (Hypertension/பிபி), மற்றொன்று நீரிழிவு நோய் (Diabetes).
நீரிழிவு நோயில், கண்ணில் ஆக்ஸிஜன் குறைவு (Hypoxia) ஏற்படுகிறது. இதனால், கண்ணில் புதிய ரத்தக் குழாய்கள் உருவாகின்றன.
இந்த இயல்புக்கு மாறான புதிய ரத்தக் குழாய்கள் (Abnormal Blood Vessels) தொடர்ந்து ரத்தம் கசியும் (Bleeding Tendency) தன்மையுடன் இருப்பதால், இதுவே நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தக் கசிவு ஏற்படுவதற்கான காரணமாக அமைகிறது.
உயர் ரத்த அழுத்தத்தின்போது, ரத்தக் குழாய்கள் சுருங்கி (Vessel Narrowing), விழித்திரையின் மையப் பகுதியில் நீர் கோத்தல் (Macular Edema) ஏற்படுகிறது. மேலும், ரத்தக் குழாய்கள் வெடித்து, அங்கேயும் புதிய ரத்தக் குழாய்கள் உருவாகின்றன.
இந்த இரண்டு நிலைமைகளுக்கும் அளிக்கப்படும் முக்கியச் சிகிச்சைகளையும் தெரிந்துகொள்வது அவசியமாகிறது.

முதலில் லேசர் சிகிச்சை (Laser Treatment), விழித்திரையின் அனைத்துப் பகுதிகளுக்கும் லேசர் சிகிச்சை (Pan-Retinal Photocoagulation - PRP) அளிக்கப்படுகிறது.
அடுத்தது, ஊசி சிகிச்சை (Injections), விழித்திரையின் மையப்பகுதி (Macula) பாதிக்கப்பட்டு இருந்தால், கண்ணுக்குள் நேரடியாக ஊசி போடும் சிகிச்சை (Anti-VEGF Treatment) அளிக்கப்பட வேண்டும்.
கடைசியாக, அறுவை சிகிச்சை (Surgery) பரிந்துரைக்கப்படலாம். நீரிழிவு நோயாளிகளுக்கு விழித்திரை விலகல் (Tractional Retinal Detachment) போன்ற கடைசிநிலை பாதிப்புகள் இருந்தால், அதற்குரிய அறுவை சிகிச்சை (Retinal Detachment Surgery) செய்யப்பட வேண்டும்.

மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் இருந்தால், தயவுசெய்து முதலில் அவற்றைச் சரிபார்த்து கட்டுக்குள் கொண்டு வாருங்கள். அதைத் தொடர்ந்து, உங்கள் கண் மருத்துவரை அணுகி, லேசர் வேண்டுமா அல்லது ஊசி சிகிச்சை வேண்டுமா என்பதை முடிவு செய்து சிகிச்சை பெறுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.












