OPS-க்கு, Amit shah தந்த உத்தரவாதம், பின்னணியில் TVK ரோல்? | Elangovan Explains
The Ashes: சதம் அடித்த ஜோ ரூட்: 'எங்கள் கண்களை காப்பாற்றிவிட்டீர்கள்' - ஹைடன் மகளின் 'கலகல' பதிவு
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு இடையே நடக்கும் புகழ்பெற்ற தொடர் ஆஷஸ் டெஸ்ட் (The Ashes).
இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கிடையே நூற்றாண்டைக் கடந்து நடந்து கொண்டிருக்கும் இந்த ஆஷஸ் தொடர் நவம்பர் 21 தொடங்கி ஜனவரி 8 வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தத் தொடரில் இதுவரை இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் ஒரு சதம் கூட அடித்ததில்லை என்பது, இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஒரு குறையாகவே இருந்தது.

இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்திருந்தார். அதில், ``இந்த போட்டியில் ஜோ ரூட் நிச்சயம் சதம் அடிப்பார். அப்படி அவர் ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்றால், நான் MCG (மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம்) மைதானத்தை நிர்வாணமாக வலம் வருகிறேன்” எனச் சவால் விட்டிருந்தார்.
இந்த சவாலை தன் சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்த மேத்யூ ஹைடனின் மகள், இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டை டேக் செய்து, ``தயவுசெய்து ஒரு சதமாவது அடித்துவிடுங்கள்" என ஜாலியாகத் தெரிவித்திருந்தார்.
கடைசியாக 2010-11ல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் தொடரை வென்ற இங்கிலாந்து அணி, அதன்பிறகு ஒரு ஆஷஸ் தொடரைக்கூட வெல்லவில்லை.
இந்த நிலையில்தான் நேற்று காபா மைதானத்தில் பிங்க் பால் ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் போட்டி தொடங்கியது. இந்தப் போட்டியில் களமிறங்கிய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், நிதானமாக ஆடி சதம் அடித்தார்.
இதன் மூலம் 10 ஆண்டுகால ஆஸ்திரேலிய ரசிகர்களின் ஏமாற்றத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததோடு மட்டுமல்லாமல், ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹேய்டனை ஒரு வினோதமான சங்கடத்திலிருந்தும் காப்பாற்றியிருக்கிறார்.
ஜோ ரூட் சதம் அடித்தவுடன் ஹேய்டனின் மகள் நகைச்சுவையாக தன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், ``ரூட், நன்றி. நீங்கள் எங்கள் எல்லோரின் கண்களையும் காப்பாற்றிவிட்டீர்கள்" எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த வேடிக்கையான பதிவு சமூக ஊடங்களில் வைரலானது.
அதைத் தொடர்ந்து மேத்யூ ஹைடன் தனது எக்ஸ் பக்கத்தில் சிரித்துக்கொண்டே, ``ஆஸ்திரேலியாவில் சதம் அடித்ததற்கு வாழ்த்துக்கள் நண்பரே... இந்த சதம் அடிக்க உங்களுக்கு நிறைய நேரம் பிடித்தது. உண்மையில் என்னைவிட இந்த விஷயத்தில் 'ஸ்கின் இன் தி கேம்' வேறு யாருக்கும் இல்லை. நான் உங்களுக்காக வேண்டிக்கொண்டிருந்தேன். எனவே வாழ்த்துக்கள். பத்து அரைசதங்கள். இறுதியாக ஒரு சதம்." எனக் குறிப்பிட்டிருந்தார்.
















