ஸ்டாலின் காய் நகர்த்தல்: திமுக-வில் ஓ.பன்னீர்செல்வம்... தென் மாவட்ட கணக்கு கைகொட...
கொலை வழக்கு: திமுக முன்னாள் எம்எல்ஏ உட்பட 7 பேருக்கு ஆயுள் சிறை - திருவண்ணாமலை நீதிமன்றம் தீர்ப்பு
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்துள்ள செங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பெருமாள், இருசப்பன் என்பவர்களுக்கும் இடையே நிலத்தகராறு ஏற்பட்டது.
இதுதொடர்பாக பலமுறை ஊர் மக்கள் சார்பாக பஞ்சாயத்து பேசியும் பிரச்னை தீரவில்லை. இந்த நிலையில்தான் 15-5-2014 அன்று, எதிர்தரப்பினர் முனுசாமியை வெட்டிக் கொன்றனர். இந்த கொலை தொடர்பாக, பெருமாள், இருசப்பன், வந்தவாசி தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ கமலக்கண்ணன், மதியழகன், நந்தகோபால், சுதாகரன், துரைமுருகன் ஆகிய ஏழு பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
முன்னாள் எம்.எல்.ஏ கமலக்கண்ணன் முன்ஜாமீன் பெற்றதால், அவரைத் தவிர மற்ற ஆறு பேரும் கைதுசெய்யப்பட்டனர்.

தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்த நிலையில், நேற்றைய தினம் தீர்ப்பு அளிக்கப்பட்டது. குற்றம் நிரூபணமானதால், வழக்கில் தொடர்புடைய தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ கமலக்கண்ணன் உட்பட ஏழு பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து, ஏழு பேரையும் போலீஸார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
கடந்த 2006 -2011 தி.மு.க ஆட்சிக் காலத்தில், வந்தவாசி சட்டமன்ற உறுப்பினராக ஜெயராமன் பதவி வகித்தார். ஜெயராமன் திடீரென இறந்தவுடன் அவரின் மகன் கமலக்கண்ணனுக்கு கடந்த 2009 இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் வாய்ப்பளிக்கப்பட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.



















