போலீஸ் புகாருக்குப் பிறகும் தொடர்ந்த ஆபாச மெசேஜ்கள்; தொந்தரவு செய்தவரை தேடிப் பி...
கோவையில் வானதி சீனிவாசன், அண்ணாமலை டிக் செய்த `தொகுதிகள்' - பின்னணி தகவல்!
சட்டமன்ற தேர்தலுக்காக தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சிக்கும் பிளஸ், மைனஸ் இருக்கும். அதிமுக – பாஜக கூட்டணியின் பிளஸ் கொங்கு மண்டலம். எம்ஜிஆர் காலத்தில் தொடங்கி எடப்பாடி காலம் வரை கொங்கு மண்டலத்தில் அதிமுக வலுவாகவே உள்ளது.

பாஜகவும் இங்கு கணிசமாக வளர்ந்து வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் அதைத் தக்க வைப்பதற்கு அதிமுக – பாஜக-வினர் தீவிரமாக பணியாற்ற தொடங்கியுள்ளனர். மொடக்குறிச்சி பாஜக எம்.எல்.ஏ சரஸ்வதி இந்த முறை தேர்தலில் போட்டியில்லை என்று அறிவித்துவிட்டார்.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தான் மீண்டும் திருநெல்வேலியில் போட்டியிடப் போவதை சூசகமாக கூறிவிட்டார். அவரை போலவே பாஜக சீனியர் நிர்வாகிகள் தொகுதிகளை குறிவைத்து பணியாற்றி வருகிறார்கள். கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வாக உள்ள வானதி சீனிவாசன், இந்த முறை கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளார்.

2021 சட்டமன்ற தேர்தலில் கோவையில் பாஜக-வுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில் இந்தமுறை 3 தொகுதிகளை எதிர்பார்க்கிறார்கள். 2 தொகுதிகள் கட்டாயம் வேண்டும் எனக் கேட்கின்றனர்.
இது குறித்து பாஜக தொண்டர்களிடம் பேசியபோது, “கோவை தெற்கு தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ இருப்பதால் அந்த தொகுதியை தான் மேலிடம் முதலில் கேட்கும். ஆனால் வானதி சீனிவாசன் தொகுதி மாறும் முடிவில் இருப்பதால் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. மறுபக்கம் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையும் கோவையில் போட்டியிடும் முடிவில் இருக்கிறார்.
கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்டு அவர் சுமார் 4.50 லட்சம் வாக்குகளை பெற்றார். அந்த தேர்தல் நிறைவடைந்தவுடனேயே அவர் தன் முகவரியை கோவைக்கு மாற்றிவிட்டார்.
2026 தேர்தலில் அவர் கரூருக்கு பதிலாக கோவையில் போட்டியிட முடிவு செய்துள்ளார். அண்ணாமலை சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடுவதாக தகவல் வெளியாகி வருகிறது. தொழில் நிறுவனங்கள் அதிகம் இருக்கும் இடம் என்பதுடன், நாயுடு மற்றும் கவுண்டர் சமுதாயத்தினர் இருவருமே அங்கு அதிகமாக உள்ளனர்.

கடந்தமுறை அந்த 2 சமுதாயத்தினரும் அண்ணாமலைக்கு அதிக ஆதரவு தெரிவித்தனர் என்பதால் இந்த முடிவில் இருப்பதாக சொல்கிறார்கள். சிங்காநல்லூரில் சிட்டிங் அதிமுக எம்.எல்.ஏ கே.ஆர் ஜெயராமும் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.
அண்ணாமலை சத்தமே இல்லாமல் புறநகரில் உள்ள ஒரு தொகுதிக்கும் குறி வைத்து பணியாற்றி வருகிறார். திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதியில் போட்டியிடவும் வாய்ப்புள்ளது. மேலும் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளை ஒரு சேர கொண்டுள்ள கிணத்துக்கடவு தொகுதியில் அவர் போட்டியிடுவதற்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலிலேயே அவர் கிணத்துக்கடவு தொகுதியில் போட்டியிட ஆலோசனை நடத்தினார். அதனால் அவர் கிணத்துக்கடவை தேர்வு செய்தாலும் ஆச்சர்யம் இல்லை” என்றனர்.














