``அரசுக்கெதிரான வழக்கை நான் விசாரிப்பதை மத்திய அரசு விரும்பவில்லை" - CJI கவாய் ஓ...
கோவை மாணவி பாலியல் வன்கொடுமை: நள்ளிரவு கிடைத்த தகவல்; சுட்டுப் பிடிக்கப்பட்ட 3 பேர்; என்ன நடந்தது?
கோவை விமான நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு 20 வயதான கல்லூரி மாணவியை, 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தது.
காரில் தன் நண்பருடன் அமர்ந்து பேசி வந்த மாணவிக்கு நடந்த கொடூரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரைப் பிடிக்க காவல்துறை 7 தனிப்படைகள் அமைத்தது.

இந்நிலையில் அந்த 3 பேரும் துடியலூர் வெள்ளகிணறு பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே பதுங்கி இருப்பதாக காவல்துறைக்கு நள்ளிரவு தகவல் கிடைத்தது. காவல்துறையினர் அங்குச் சென்றபோது, அவர்கள் அரிவாளால் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினர்.
இந்தச் சம்பவத்தில் சந்திரசேகர் என்ற தலைமைக் காவலருக்கு இடதுகை மணிக்கட்டு பகுதியில் வெட்டு ஏற்பட்டுள்ளது. அவரை வெட்டி தப்ப முயன்ற மூன்று பேர் மீதும் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி பிடித்தனர். மூன்று பேரில் இரண்டு பேரை 2 கால்களிலும், ஒருவரை 1 காலிலும் சுட்டுப் பிடித்தனர்.

காவல்துறை விசாரணையில் அவர்கள் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த குணா என்கிற தவசி, சதீஷ் என்கிற கருப்பசாமி, கார்த்திக் என்கிற காளீஸ்வரன் என்பது தெரியவந்தது. அவர்கள் 3 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல காயமடைந்த தலைமைக் காவலர் சந்திரசேகரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அந்த 3 பேரும், கோவை இருகூர் பகுதியில் வீடு எடுத்து, கட்டிட வேலை செய்து வந்துள்ளனர். இதில் கருப்பசாமி, காளீஸ்வரன் இருவரும் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த 3 பேர் மீதுமே கொலை, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. காவல்துறையினர் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



















