`நம் கண்ணுக்கு தெரியாமல் அரூபமாக வாழும் மனிதர்களின் கதை' - எழுத்தாளர் ஜெயராணியின...
சிவசேனா: "பால் தாக்கரேவுக்கு இருந்த செல்வாக்கு தாக்கரே சகோதரர்களுக்கு இல்லை" - பட்னாவிஸ் தாக்கு
மும்பையில் வரும் 15ம் தேதி நடக்க இருக்கும் மாநகராட்சித் தேர்தலில் பா.ஜ.கவும், சிவசேனா(ஷிண்டே), இந்தியக் குடியரசு கட்சி போன்ற கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
இக்கூட்டணி மும்பை மாநகராட்சிக்கான தேர்தல் வாக்குறுதியை நேற்று வெளியிட்டது. பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்சில் நடந்த நிகழ்ச்சியில் இதனை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் இந்தியக் குடியரசு கட்சித் தலைவர் ராம்தாஸ் அதாவலே ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.
தேர்தல் அறிக்கையில், மும்பை நகர மேம்பாடு, நவீன கட்டமைப்பு வசதி, நிலையான வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் மும்பை குடிசைவாசிகளுக்குத் தரமான இலவச வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என்றும், பெண்களுக்கு மாநகராட்சி பஸ்ஸில் 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.
தண்ணீர் மூலம் நடைபெறும் போக்குவரத்து விரிவுபடுத்தப்படும் என்றும், மாநகராட்சி பஸ்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரமாக அதிகரிக்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மழை காலத்தில் மும்பையில் வெள்ளம் பாதிக்காமல் இருக்க ஜப்பான் தொழில்நுட்பத்தில் பூமிக்கு அடியில் சுரங்க நீர்நிலைகளை உருவாக்கி மழைநீரை உடனுக்குடன் அங்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் பேசிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ''மும்பையில் மராத்தி அல்லாத மொழி பேசுபவர்கள் முற்றிலும் பாதுகாப்பாக உள்ளனர். சில சக்திகள் விளம்பரத்திற்காகவே பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த மக்களைக் குறிவைத்து தாக்குகின்றன.
மும்பையில் வசிக்கும் மூன்றாம் தலைமுறை வட இந்தியர்கள் உணவுப் பழக்கவழக்கங்கள், கலாசாரம் மற்றும் பண்டிகைகள் என அனைத்திலும் முழுமையான மும்பைவாசிகளாகவே மாறிவிட்டனர்.
சில தாக்குதல் சம்பவங்கள் நடந்திருக்கின்றன, அவர்கள் வாடகை கார் ஓட்டுநர்கள், ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்களைத்தான் குறிவைத்துத் தாக்குகின்றனர். அவர்கள் தங்கள் விளம்பரத்திற்காக இதைச் செய்கிறார்கள்.
உத்தவ் தாக்கரே மற்றும் அவரது உறவினரான ராஜ் தாக்கரே ஆகியோரால் வழிநடத்தப்படும் கட்சிகள், மும்பை மாநகராட்சித் தேர்தலுக்காகவே ஒன்றிணைந்து, 'மராட்டிய மனிதன்' என்ற பிரச்னையை எழுப்பியுள்ளன.
மும்பையை ஒரு துடிப்பான மற்றும் நிலையான நகரமாக மேம்படுத்துவதே எங்களது அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையாகும்.
மராத்தி மக்களுக்கு மலிவு விலையில் வீடுகளை வழங்குவதற்காக அரசாங்கம் மும்பையில் மறுமேம்பாட்டுப் பணிகளைத் தொடங்கியுள்ளது. தாராவி மக்களுக்கும் வீடுகளை வழங்கி வருகிறோம். கடந்த 5 ஆண்டுகளில் மும்பையில் 437 கிலோமீட்டர் தூர மெட்ரோ ரயில் திட்டப்பணிகளைத் தொடங்கி இருக்கிறோம்.
மெட்ரோ ரயில் போன்று புறநகர் ரயிலிலும் ஏ.சி.ரயில்களை கொண்டுவர இருக்கிறோம். இந்துத்துவத்தையும், மராத்தியையும் பிரிக்க முடியாது'' என்று குறிப்பிட்டார்.
தாக்கரே சகோதரர்கள் செல்வாக்கு இல்லாதவர்கள்
"தாக்கரே சகோதரர்கள் நினைத்தால் 10 நிமிடத்தில் மும்பையை ஸ்தம்பிக்கச் செய்துவிடுவார்கள்" என்று சிவசேனா(உத்தவ்) எம்.பி.சஞ்சய் ராவுத் கூறி இருப்பது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, "அது போன்ற வெற்று மிரட்டல்களுக்கு நாங்கள் பயப்படமாட்டோம். ஏக்நாத் ஷிண்டேயை மும்பைக்குள் விடமாட்டோம் என்று கூறினார்கள். ஆனால் ஏக்நாத் ஷிண்டே மும்பைக்கு வந்து ராஜ்பவன் சென்று ஆட்சியமைத்தார்.

மும்பையை மறந்துவிடுங்கள். அவர்களால் பக்கத்து வீட்டைக்கூட அடைக்க முடியாது. பால்தாக்கரே உயிரோடு இருந்தபோது மும்பையை ஸ்தம்பிக்க வைக்கும் அளவுக்கு சிவசேனாவுக்குச் செல்வாக்கு இருந்தது. ஆனால் இப்போது இருப்பவர்கள் செல்வாக்கு இல்லாதவர்கள்'' என்று குறிப்பிட்டார்.
தேவேந்திர பட்னாவிஸ் நேற்று தாராவியில் தேர்தல் பிரசாரம் செய்தார். இதில் பேசிய பட்னாவிஸ், தாராவி மக்களுக்குத் தரமான வீடுகளைக் கட்டிக்கொடுப்போம் என்றும், தகுதி இல்லாத குடிசைவாசிகளுக்கும் வீடு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.


















