IND v SA: `25 ஆண்டுகளுக்குப் பின்.!' - இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற தென்னாப...
ஜப்பானில் புதிய வகை `நீல சாமுராய்' ஜெல்லிமீன் கண்டுபிடிப்பு - மாறிவரும் கடல் நீரோட்டம் காரணமா?
ஜப்பானின் வடக்குப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அரிய வகை நீல நிற 'சாமுராய்' ஜெல்லிமீன், கடல் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. '
ஜப்பானின் செண்டாய் வளைகுடா பகுதியில் கடல் வாழ் உயிரினங்கள் குறித்த ஆய்வில் ஈடுபட்டிருந்த ஆராய்ச்சியாளர் யோஷிகி ஓச்சியாய் தற்செயலாக இந்த அரிய வகை உயிரினத்தைக் கண்டறிந்துள்ளார்.
கடலின் மேற்பரப்பில் மிதந்து கொண்டிருந்த ஜெல்லிமீனை அவர் கவனித்திருக்கிறார். வெப்பமண்டல கடற்பகுதிகளில் காணப்படும் இந்த வகை உயிரினங்கள், குளிர் மிகுந்த பகுதியில் தென்பட்டது ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திருக்கிறது.
அதன் வடிவம் மற்றும் நிறம் வழக்கமான ஜெல்லிமீன்களில் இருந்து மாறுபட்டிருந்ததால், அதனை அவர் ஆய்வுக்காக சேகரித்துள்ளார்.
முதலில் இது வழக்கமான 'போர்த்துகீசிய மேன்-ஆஃப்-வார்' வகை என்று கருதப்பட்டாலும், டி.என்.ஏ பரிசோதனை மற்றும் உடல் அமைப்பு ஆய்வுகள் மூலம் இது ஒரு தனித்துவமான புதிய இனம் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இந்த வெப்பமண்டல உயிரினம் குளிர் மிகுந்த வடக்குப் பகுதிக்கு எப்படி வந்தது என்பது குறித்த ஆய்வில், சில ஆச்சரிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடல் நீரோட்ட மாதிரி சோதனையில் (Ocean current simulations), குரோஷியோ நீரோட்டம் வடக்கு நோக்கி நகர்ந்ததே இதற்கு முக்கிய காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
2023 மற்றும் 2024 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில், இந்த நீரோட்டம் சுமார் இரண்டு டிகிரி வடக்கு நோக்கி நகர்ந்துள்ளது. இதனால் வெப்பமண்டல உயிரினங்கள் குளிர் பிரதேசங்களுக்கு இடம் பெயரும் சூழல் உருவாகியுள்ளது. இது காலநிலை மாற்றத்தின் ஒரு முக்கிய அறிகுறியாகப் பார்க்கப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கின்றனர்.
பார்ப்பதற்கு அழகான பலூன் போல காட்சியளித்தாலும், இவை மிகவும் ஆபத்தானவை என கூறப்படுகிறது.
இவற்றில் இருக்கும் நச்சுத்தன்மை வாய்ந்த செல்கள் சிறிய மீன்களை வேட்டையாடப் பயன்படுகின்றன. மனிதர்கள் தவறுதலாக இவற்றைத் தொட்டால் கடும் வலி, தோல் எரிச்சல் மற்றும் தடிப்புகள் ஏற்படும். சில நேரங்களில் தீவிர விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.


















