சென்னை கள்ளச்சாராய வழக்கில் பெண்ணை சிக்கவைக்க ஸ்பெஷல் டீம் போலீஸ் போட்ட மாஸ்டர் ...
ட்ரம்பிற்கே tariff-ஆ? - தனித்துவிடப்படுமா அமெரிக்கா? - ஒன்றுகூடும் ஐரோப்பிய நாடுகள்!
‘பாதுகாப்புக் காரணங்களுக்காக’ கிரீன்லேண்டைப் பிடித்தே தீர வேண்டும் என்கிற கடும் முயற்சியில் இருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
ஆனால், அவருக்குத் தேவையான ஆதரவை நேட்டோ நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும் தரத் தயாராக இல்லை.
இதனால், ட்ரம்ப் டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, நெதர்லாந்து, ஃபின்லாந்து ஆகிய நாடுகளுக்கு 10 சதவிகித வரி விதித்துள்ளார்.
இந்த வரி வரும் பிப்ரவரி 1-ம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது.
ஒருவேளை, வரும் ஜூன் மாதத்திற்கு மேலேயும், கிரீன்லேண்ட் பிரச்னை அமெரிக்காவிற்கு சாதகமான நிலையை எட்டவில்லை என்றால், 10 சதவிகித வரி 25 சதவிகித வரியாக அதிகரிக்கப்படும் என்று எச்சரித்திருக்கிறார்.

கூட்டறிக்கை என்ன சொல்கிறது?
இந்த நிலையில், டென்மார்க்கின் வெளியுறவுத் துறை அமைச்சகம் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “வரி அச்சுறுத்தல் டிரான்ஸ் அட்லாண்டிக் பகுதிகளின் உறவைப் பாதிக்கும்.
நாங்கள் எப்போதும் ஒன்றாக நிற்போம்… எங்களுடைய பதிலும் ஒரே மாதிரி இருக்கும்” என்று கூறப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டறிக்கை டென்மார்க், ஃபின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, நார்வே, ஸ்வீடன், இங்கிலாந்து ஆகியவைகளுடையது.
ஆக, இந்த நாடுகள் ட்ரம்பின் அச்சுறுத்தலை ஒன்றாக எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றன என்பது தெரிகிறது.
ட்ரம்பிற்கே வரியா?
கூடுதலாக, இந்த அனைத்து நாடுகளும் சேர்ந்து அமெரிக்கப் பொருள்களுக்கு 108 பில்லியன் டாலர்கள் வரை வரி விதிக்க முடிவு செய்துள்ளதாகவும்… அமெரிக்காவின் கம்பெனிகளுக்கு ஐரோப்பிய சந்தைகளில் கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளதாகவும் ஃபைனான்சியல் டைம்ஸ் செய்தித்தாள் தகவல் வெளியிட்டுள்ளது.
ட்ரம்ப் எப்போதுமே தனக்கு எந்தக் காரியம் ஆக வேண்டுமென்றாலும், ட்ரம்ப் ‘வரி’யைக் கையில் எடுத்துக்கொள்கிறார். அதை வைத்தே உலக நாடுகளைப் பயமுறுத்த நினைக்கிறார்.
அது எப்போதுமே அவருக்குக் கைகொடுக்காது.

ட்ரம்ப் வரியைக் காட்டி பயமுறுத்துவது குறித்து இன்றைய Opening Bell Show-ல் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் பகிர்ந்துகொண்டதாவது…
“வரியைக் காட்டி பயமுறுத்தி தனக்கு தேவையானதைச் சாதித்துக்கொள்ள நினைப்பது தவறான உதாரணம்.
பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, இந்த மாதிரியான காரியங்கள், நிச்சயமாக சந்தைக்கு அதிர்வுகளைத் தரும்.
ஆனாலும், ட்ரம்பின் அச்சுறுத்தல்கள் நீண்ட நாள்களுக்கு நிலைக்காது. இது மிகவும் ஆபத்தானது.
ஆம்… இதை அவர் மீண்டும் மீண்டும் செய்துகொண்டே இருந்தால், பிற நாடுகள் அமெரிக்காவை வர்த்தகத்தில் தனித்துவிடக் கூடலாம்.
ஏற்கெனவே ஐரோப்பிய யூனியன் மற்றும் கனடா தங்களுக்கென தனி வர்த்தக அமைப்பை அமைத்து வர்த்தகம் செய்ய தொடங்கியிருக்கிறார்கள்.
இதை மற்ற நாடுகளும் பின்பற்றலாம். பிறகு, அவர்களுக்குள்ளாகவே வர்த்தகம் செய்ய தொடங்கிவிடுவர்.
இதனால், அமெரிக்காவின் வர்த்தகம் பாதிக்கலாம்” என்று கூறியிருந்தார்.
ஏற்கெனவே, சீனா தன்னுடைய ஏற்றுமதிகளை தென்கிழக்கு ஆசிய நாடுகள், ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகள், தென் அமெரிக்க நாடுகள் ஆகிய நாடுகளின் சந்தைக்கு மாற்றிவிட்டது.
இதை பிற நாடுகளும் பின்பற்றினால், என்ன ஆகும்? அமெரிக்கா வர்த்தக ரீதியாகத் தனித்துவிடப்படலாம்.
2025-ம் ஆண்டு ஏப்ரல் 2-ம் தேதி, ட்ரம்ப் முதன்முதலாக வரியை அறிவித்தபோது, உலக நாடுகள் அதைப் பார்த்த விதமும், பயமும் வேறு.
இப்போதிருக்கும் நிலைமை வேறு. இப்போது உலக நாடுகளும், சந்தைகளும் சற்று வரிக்குப் பழகிவிட்டன.
அதனால், அவர்கள் தங்களது சந்தைகளை அமெரிக்காவைத் தாண்டி பரப்பத் தொடங்கிவிட்டனர்.
இது நிச்சயம் அமெரிக்காவிற்குத் தான் பாதிப்பாக முடியும். அதனால், இனி ட்ரம்ப் தனது நகர்வுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.



















