'பாட்டிலுக்கு 10 ரூபாய்...' - ஒரு டாஸ்மாக் ஊழியரின் லஞ்ச கதை!
தஞ்சாவூர்: ”காதலிக்க மறுத்த நர்சிங் மாணவி”- சக மாணவன் டார்ச்சரால் தற்கொலை செய்து கொண்ட சோகம்!
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயதான மாணவி தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் நான்காம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார். இவர் தனியார் விடுதியில் தங்கியிருந்தார். இதே கல்லூரியில் தஞ்சாவூர் மாவட்டம் தோட்டக்காடு பகுதியைச் சேர்ந்த கவின் என்பவர் டிப்ளமோ OT படித்து வருகிறார். மாணவியை சக மாணவர் கவின் காதலிக்க சொல்லி வற்புறுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது

ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த அந்த மாணவி காதலிக்க மறுத்துள்ளார். இந்நிலையில் கடந்த 4ம் தேதி கல்லூரி வளாகத்தில் சக மாணவிகள் முன்னிலையில் காதலிக்க மறுத்த மாணவியின் கழுத்தை நெரித்து கன்னத்தில் அறைந்து காதலிக்க சொல்லி கவின் மிரட்டியதாக சொல்கிறார்கள். ஆத்திரமடைந்த மாணவி, கவின் நடந்து கொண்டது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். ஆனால் நிர்வாகம் கவினை அழைத்து முறையாக கண்டிக்கவில்லை என்கிறார்கள்.
இந்நிலையில், நேற்று மாணவிக்கு வேறு எண்ணில் இருந்து செல்போனில் பேசியுள்ளார் கவின். அப்போது, நான் சொல்கிற படி கேட்டு என்னை காதலி, இல்லை என்றால் உன் போட்டோவை ஆபாசமாக சித்திரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியதாக சொல்லப்படுகிறது. இதனால் மன உலைச்சலுக்கு ஆளான மாணவி விடுதியில் விஷம் அருந்தி விட்டு மயங்கி கிடந்துள்ளார்.
இதை பார்த்த விடுதியில் இருக்கும் சக மாணவிகள் உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார். இதில் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், காதலிக்க வற்புறுத்தி டார்ச்சர் செய்வதாக எங்க மகள் கல்லூரி நிர்வாகத்தில் புகார் சொல்லியும் அலட்சியத்தால் முறையாக நவடிக்கை எடுக்கவில்லை. இதுவே எங்கள் மகள் சாவுக்கு காரணமாகி விட்டது. தற்கொலைக்கு தள்ளிய மாணவன் கவினுக்கு கடுமையான தண்டனை பெற்று தர வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.





















